கடந்துபோன காலத்தினை ஆவணப்படுத்துதல் மிகவும் கடினமான செயற்பாடு, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் பேஷன் டிசைனிங் கற்கை விரிவுரையாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் சஃபானா ஹகீம், இயக்கி சிறகுநுனி பப்ளிகேஷன் தயாரித்த “அல்ஹம்றா – ஒளிக்கீற்று” ஆவணப்படமானது 01.09.2024 அன்று காலை 10 மணிக்கு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மெஜஸ்டிக் (சிட்டி) கோல்ட் சினிமாவில் வெளியிடப்பட்டு, முதன்முறையாக பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது.
களுத்துறை மாவட்டத்தில் தர்கா நகரில் அமையப்பெற்றுள்ள களு/அல்-ஹம்றா மாகாவித்தியாலயமானது, 1896 ஆம்ஆண்டு களுத்துறை வலயத்தில் அமைக்கப்பட்ட பாடசாலையாகும். தொடக்க காலத்தில் ஆரம்பப் பாடசாலையாக அமைக்கப்பட்டாலும், காலப்போக்கில் உயர்நிலைப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு விஞ்ஞானப் பிரிவு மற்றும் மும்மொழி மூலமான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டதோடு மாத்திரமன்றி முஸ்லிம், தமிழ், சிங்கள மாணவர்களுக்கும் உயர்கல்வியை வழங்கி, பல கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், இலக்கியவாதிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற பல்துறை வித்தகர்களை உருவாக்கி நாட்டிற்கு வழங்கிய பாடசாலையாகத் திகழ்ந்திருந்தது. கலாசாரம், நற்பழக்கவழக்கங்கள், கலைகளை பயிலும் நோக்கில் அக்காலத்தில் பாடசாலையில் அமைக்கப்பட்ட மாணவர் விடுதியில் வசதியற்ற மாணவர்கள் மாத்திரமன்றி, நகரில் வசதிபடைத்தோரது பிள்ளைகளும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதற்குப் பின்னரான காலத்தில் பாடசாலைகள் மீள் தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டபோது, இப்பாடசாலை ஆரம்பப் பாடசாலையாக தரமிறக்கப்பட்டு, பாடசாலையில் காணப்பட்ட வளங்கள் மற்றும் மாணவர்கள் களு/சாஹிரா கல்லூரிக்கு மாற்றப்பட்டனர்.
பல்வேறு அதிபர்களின் விடாமுயற்சியின் பலனாக மாற்றமடைந்து தற்போது மீண்டும் உயர்தரத்தில் கலை, வர்த்தக பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று 1538 மாணவர்களையும், 59 ஆசிரியர்களையும் உள்ளடக்கி புத்துயிர் பெற்றிருக்கிறது.
இவ்வாறான புகழ் பொருந்திய பாடசாலையின் வரலாற்றினை ஆவணப்படுத்துவதாக இந்த ஆவணப்படத்தின் கதை அமையப்பெற்றுள்ளது.
முடிவுற்ற நீண்டகால வரலாற்றினை ஆவணப்படுத்துவதற்காக பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களது வரலாற்றுக் குரலாக, இதயம் பேசும் கதையாக கதைசொல்லல் நகர்த்தப்பட்டுள்ளது. களு/அல்-ஹம்றா மாகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 125 ஆண்டுகள் பூர்த்தியைக் கொண்டாடும் விதமாக சஞ்சிகை வெளியீடும், பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் பாடசாலையின் பழைய மாணவி என்ற வகையில் பாடசாலையின் தொலைந்துபோன வரலாற்றினை மீண்டும் கண்டெடுத்து அதனை தற்கால சமூகத்தினருக்கு கடத்துவதற்கு இவ்வாறான காணொளிகளே சிறப்பாக அமையும் என்பதை நோக்கமாகக் கொண்டே இவ்ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் ஆவணப்படத்தில் அமைவிடத்தினை காண்பிப்பதற்காக பறக்கும் கமெரா அதிக தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு 1 மணித்தியால கால அளவைக் கொண்ட இவ் ஆவணப்படத்தினை செம்மையாக்க கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் அதிகமாக பின்தயாரிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் தனது சொந்த செலவில் இவ் ஆவணப்படத்தினைத் தயாரித்துள்ளார்.
பாடசாலையின் பழமையான வரலாற்றோடு தொடர்புடைய பலர் இப்போது இவ்வுலகில் இல்லை. எனவே தொலைந்துபோன வரலாற்றினை மீளத்தேடுவதற்கு இயக்குனருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு சினிமா மற்றும் ஆவணப்படத்துறை சார்ந்து இது இயக்குனரது முதல் படைப்பு என்பதால் பல்வேறு ஏமாற்றங்கள், குறைகள், மனக்கசப்புக்கள், பின்னடைவுகள் என்பவற்றையும் கடந்தே இப்படைப்பு தயாரிக்கவேண்டிய நிலை காணப்பட்டது.
களுத்துறை மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களிலுள்ள இஸ்லாமிய பாடசாலைகளுக்கும் முன்னுதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் ஒரு காலத்தில் திகழ்ந்திருந்த களு/அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தின் வரலாற்றையும், அங்கு சேவையாற்றிய அதிபர்களின் அளப்பரிய சேவையையும் சமூகம் அறிந்து கொண்டு, பாடசாலையின் மீள் புத்துருவாக்கத்திற்கு உதவவேண்டும் என்பதோடு, இன ரீதியாக பிரிவுபட்டிருக்கிற பாடசாலைகள் அனைத்தும் அறிவு ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வழி உருவாக வேண்டுமென்றும் எதிர்பார்ப்பினை நிலைநிறுத்தியே இவ் படைப்பு உருப்பெற்றுள்ளது தயாரிக்கப்பட்டுள்ளது.
கிரிஜா அருள்பிரகாசம் ஊடகக் கற்கைகள் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.