Home » புதிய தொழில்நுட்பத்தை வழங்கிய விவசாயப் புரட்சி

புதிய தொழில்நுட்பத்தை வழங்கிய விவசாயப் புரட்சி

by Damith Pushpika
September 15, 2024 6:51 am 0 comment

உர மானியம்

விவசாயிகளுக்கு உர மானியமாக 20,000 ரூபாய் வழங்கப்பட்டது. பெரும் போகத்தில் நெல் அறுவடை குறைந்ததன் காரணமாக 2022 ஜனவரி முதல் இலங்கை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அரிசியின் விலை மிக விரைவாக உயரும் என மக்கள் எதிர்பார்த்த போதிலும், சிறு போகத்தில் நல்ல விளைச்சல் இருந்ததால், சுமார் 1.8 மில்லியன் சிறந்த நெல் அறுவடையினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதுவரை 8 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 300 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. 2022 பருவத்தின் தொடக்கத்தில், நாட்டிற்கு தேவையான போதுமான யூரியா உரம் கொண்டுவரப்பட்டது. இவற்றைப் பெற விவசாயிகளின் கணக்கில் 20,000 ரூபாய் மானியமாக அரசால் வழங்க முடிந்தது. இந்த வசதியால், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். அதனால், பெரும் போகத்தில் 3.5 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்ய முடிந்தது. இதனால், 2023இல், ஆண்டு முழுவதும் ஒரு அரிசி மூட்டை கூட இறக்குமதி செய்யப்படவில்லை. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி 2023 ஆம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டு 15,000 ரூபா உர மானியம் வழங்கப்பட்டதோடு, இந்த ஆண்டு பருவ போகத்தில் உரத்தின் விலை 12,000 ரூபாவாக குறைக்கப்பட்டது. இயற்கை சீற்றங்களால் நெல் அறுவடைக்கு இடையூறு ஏற்படவில்லை. 2023 பருவத்திலும் நல்ல நெல் அறுவடையைப் பெற முடிந்தது. அதேபோன்று, முதன்முறையாக குறைந்த விலையில் சேற்று உரத்தை வழங்க முடிந்தது. தற்போது ஒரு மூட்டை யூரியா உரத்தின் விலை 42,000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 5 பயிர் பருவங்களில் உர மானியத்திற்காக மட்டும் 55,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தின் போது இடம்பெற்ற விடயங்களாகும்.

இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி

அரிசியில் நாடு தன்னிறைவு அடைந்ததால், பால், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியும் உயர்வடைந்தது. 2021இல் உரப் பிரச்சினையால், உள்ளூர் சோளச் செய்கை வீழ்ச்சியடைந்தது. எமது வருடாந்த சோளத் தேவை 6 லட்சம் மெட்ரிக் தொன்களாகும். ஆனால் சராசரி உள்நாட்டு உற்பத்தி 4.5 லட்சம் மெட்ரிக் தொன்களாகும். மீதியானது இறக்குமதி செய்யப்படுகின்றது. ஆனால் உரப் பிரச்சினையால் சோள உற்பத்தியும் 50% குறைந்துள்ளது. எனவே, 400,000 மெற்றிக் தொன்களுக்கு மேல் மீண்டும் இறக்குமதி செய்ய வேண்டியிருந்த போதிலும், இலங்கையில் அப்போது டொலர் பிரச்சினை இருந்தமை இதனை சவாலாக மாற்றியது. இதன் காரணமாக 3000 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டன. சில பண்ணைகள் கால்நடைகளை இறைச்சிக்காக விற்றன. இதனால் பெரும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டது. தினசரி முட்டை உற்பத்தி 7 மில்லியனாக இருந்தாலும், அது 3.8 மில்லியனாக குறைந்துள்ளது. முட்டை விலையும் உயரத் தொடங்கியது. இதன் காரணமாக முதன்முறையாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது நிகழும் அபாயம் இருந்தது. இதன் காரணமாக சோளம் இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்து கால்நடை தீவன உற்பத்தியாளர்கள் மற்றும் பண்ணை தொழிலதிபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதே சமயம் சோளச் செய்கைக்கும் மானியம் வழங்கப்பட்டதோடு, மூடப்பட்ட பண்ணைகளை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக இலங்கை தற்போது கோழி இறைச்சி மற்றும் முட்டையில் தன்னிறைவு அடைந்துள்ளது. தினசரி முட்டை உற்பத்தியை 8 மில்லியனாக அதிகரிக்க முடிந்துள்ளது.

மேலும், அதிகரித்துள்ள முட்டை விலையை கணிசமாக குறைக்கவும் முடிந்துள்ளது. கோழி இறைச்சியின் விலை 1750 ரூபாவாக அதிகரித்த போதிலும் அது தற்போது 850-–900 ரூபாவாக குறைந்துள்ளது. கோழி இறைச்சியின் தினசரி தேவை 500 மெட்ரிக் தொன்களாகும். இது தற்போது 600 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அதிக பால் உற்பத்தி

தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைலண்ட் 400 கிராம் பால்மா பொதியின் விலை 75 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பைக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. மில்கோ நிறுவனம் தினசரி பால் சேகரிப்பை 2 லட்சம் லிட்டர் வரை உயர்த்தியதால் இந்த குறைப்பு சாத்தியமாகியுள்ளது.

தற்போது மில்கோ நிறுவனத்திற்கு அதிக அளவில் பால் வந்து கொண்டிருப்பதோடு, மேலும் திறன் அதிகரித்ததன் பலன் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகின்றது.

புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியதன் மூலம் தினசரி பால் உற்பத்தியை அதிகரிக்க முடிந்துள்ளது. மேலும் பசு மாடுகளை அதிக அளவில் அறிமுகப்படுத்த வேண்டும்.

நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற கறவை மாடுகளை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இந்த இரு நாடுகளும் 2023இல் தங்கள் விலங்குகளை வெளியே விடக்கூடாது என்ற வரம்பை விதித்திருந்தன.

ஆனால் அந்தந்த நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் பலனாக அடுத்த வருடம் இந்தியாவின் சாஹிவால் மாடு இனமும் பாகிஸ்தானின் நுரா மாடு இனத்தையும் இலங்கைக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து மாடுகள் வரவழைக்கப்படுவதால், பால் உற்பத்தி அதிகரிக்கும். 2025ஆம் ஆண்டை இலங்கையின் பால் உற்பத்தி ஆண்டாக விவசாய அமைச்சு பெயரிட்டுள்ளது.

சாதனை படைத்த திரப்பனை விவசாயத் தொழில்நுட்பம்

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிக விளைச்சலைப் பெறுவதற்காக புதிய விவசாய தொழில்நுட்பத்தை எமது விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது, ​​எங்கள் அறுவடைக்கான நிலம் வரையறைக்குட்பட்டதாகும். சுமார்

8,12,000 ஹெக்டேயர்களாக உள்ள நெற்செய்கை நிலங்களில் பாரம்பரிய விவசாயத்தின் மூலம் அதிக விளைச்சலையும், வருமானத்தையும் பெற முடியாததால், இருக்கும் நிலத்தில் அதிக விளைச்சலைப் பெற வேண்டும் என்பதால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியமானது. புதிய விவசாய தொழில்நுட்பத்தை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், திறப்பனையைச் சேர்ந்த 120 விவசாயிகளுக்கு புதிய விவசாய தொழில்நுட்பங்களும் உபகரணங்களும் வழங்கப்பட்டன. உள்ளூர் சந்தையில் தேவைப்படும் பயிர்கள் மீது கவனம் செலுத்தும் நோக்கிலாகும். திறப்பனையில் இந்த உபகரணங்களைப் பெற்ற பெரும்பாலான விவசாயிகள் மிளகாய் செய்கையில் ஈடுபட்டனர். அவர்கள் பயன்படுத்தியது High Density Crop System எனப்படும் அதிக அடர்த்தி பயிர் முறையைப் பயன்படுத்தினர். சராசரியாக அரை ஏக்கரில் விளையும் மிளகாய்ச் செடிகளின் எண்ணிக்கை 6000. ஆனால் இந்த அதிக அடர்த்தி சாகுபடி முறையில் அரை ஏக்கரில் 13,000 மிளகாய் செடிகளை வளர்க்கலாம்.

இளைஞர்களுக்கான இளைஞர் விவசாய- தொழில்முனைவோர் கிராமங்கள்

இந்த விஞ்ஞான ரீதியான முறைகளின் கீழ், அந்தந்தப் பகுதிகளுக்குப் பொருத்தமான பயிர்ச்செய்கை முறைகள் கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பல செய்கைகள் உள்ளன. TE JC மாம்பழச் செய்கை பல வறண்ட பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அதிக அடர்த்தி சாகுபடி முறையின் கீழ், ஒரு ஏக்கருக்கு 560 மாங் கன்றுகளை வளர்க்கலாம். பாரம்பரியமான முறையில், அந்த தொகை 84 ஆகும். புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் மூன்று திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், வெல்லவாய முள் அனோனா, மொனராகலை பெசன் புறூட், அன்னாசி, மாதுளை, நிலக்கடலை போன்ற பல பயிர் வளர்ப்புகள் தற்போதைய ஜனாதிபதியின் காலத்தில் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன. ஒரு புதிய வகை ஆனைக் கொய்யா வகையில் உடலுக்கு ஏற்ற வெண்ணெயை உற்பத்தி செய்யப்படுவதோடு, அவை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு புதிய தூரியன் இனம் ஏற்றுமதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஆரஞ்சுக்கான விசேட தேவையை கருத்தில் கொண்டு, ஆரஞ்சு செய்கை வலயம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த ஆண்டு இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமங்கள் தொடங்கப்பட்டன.

நெல் அறுவடையினை இரட்டிப்பாக்க பாராசூட் தொழில்நுட்பம்

கடந்த காலங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு மனித உழைப்பைக் குறைக்க ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதற்காக கமநல சேவை நிலையங்களுக்கு 250 ட்ரோன்கள் வழங்கப்பட்டன. நான்கு மணி நேரத்தில் 100 ஏக்கரில் இதன் மூலம் பூச்சிக் கொல்லிகள் மற்றும் உரங்களைத் தெளிக்கலாம். ஜனாதிபதியின் மற்றுமொரு விசேட நிகழ்ச்சியாக இருப்பது அடுத்த 5 பயிர்ச்செய்கை காலங்களில் இலங்கையில் அரிசி விளைச்சலை இரட்டிப்பாக்குவதாகும். நெல் விதைத்து அதிக அறுவடையினை பெற முடியாது என்பதால் பாராசூட் என்ற புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் களைக்கட்டுப்பாடு மூலம் உரங்களை குறைவாக பயன்படுத்தி நல்ல விளைச்சலைப் பெறலாம். இந்த பாராசூட் தொழில்நுட்பம் 50% மானியத்தில் வழங்கப்பட்டது. 1 ஹெக்டேருக்கு சுமார் 1000 பாராசூட் டிஸ்க்குகள் தேவை. இந்த தொகையில் நான்கில் ஒரு பங்கை அவர்கள் கொள்வனவு செய்ய வேண்டும். மீதி நான்கில் மூன்று பங்கு அரசாங்கத்தால் வழங்கப்படும். இவ்வாறு அன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் அம்பாந்தோட்டை மற்றும் உடவளவ பிரதேச விவசாயிகள் இலங்கையில் முதன்முறையாக ஒரு ஹெக்டேருக்கு 13 மெற்றிக் தொன் நெல் அறுவடையை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தல்

புதிய இனங்களை அறிமுகப்படுத்தியதால், அரிசி உற்பத்தியில், கடந்த காலங்களில் கீரி சம்பா தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் தற்போது சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா உள்ளது. மேலும் அதன் விலையும் குறைந்துள்ளது. இவ்வாறு விலையைக் குறைக்க முடிந்தமைக்கு காரணம் இந்த பருவ பெரும் போகத்தில் மட்டும் 81,000 ஹெக்டேரில் கீரி சம்பா செய்கை பண்ணப்பட்டதாகும். அதேபோன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Ac 378 என்ற அரிசி வகை இலங்கையில் அதிக அறுவடையைத் தரும் அரிசி வகையாக மாறியுள்ளது.இலங்கையின் குளங்கள் பல வருடங்களாக புனரமைக்கப்படவில்லை என்பது மற்றுமொரு பிரச்சினையாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023ஆம் ஆண்டு குளங்களைப் புனரமைப்பதற்காக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 3000 மில்லியன் ரூபாவை வழங்கினார்.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division