Home » சின்ன தீவில் 300 கோயில்கள்

சின்ன தீவில் 300 கோயில்கள்

by Damith Pushpika
September 15, 2024 6:53 am 0 comment

போர்ட் லூயிஸின் நகர மையத்திலிருந்து முப்பது நிமிட நடையில் வடக்குப் பகுதியில் இருக்கும் கைலாசன் (KAYLASSON) கோயிலுக்குப் போனோம். கோயிலின் பெயர் வித்தியாசமாக இருந்தது. கைலாசம் என்ற பெயரைத் தான் கைலாசன் என்று அழைக்கிறார்களோ என்று நினைத்தேன். கோயி‍லைப் பார்த்தபோது அது சிவனுக்காகக் கட்டப்பட்ட கோயில் என்பதாலே கைலாசன் என்று அழைப்பது புரிந்தது. ஆனால் கோயிலின் பெயர் மீனாட்சியம்மன் சொக்கலிங்கம் கோயில். சிவனுக்காகத் தமிழர்களால் கட்டப்பட்ட வண்ணமயமான வானளாவும் கோபுரம் கொண்ட கோயில். மொரிசியஸிலேயே மிகப்பழமையான இக்கோயில் இருபத்தேழு தமிழ் வர்த்தகர்கள் இணைந்து நிலம் வாங்கி 1854இல் தொடங்கப்பட்டது, 1912இல் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று ஏக்கரில் வானளாவிய கோபுரம், ஞானசம்பந்தர் குளம், பூங்கா முதியோர் இல்லம், திருமண மண்டபம், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் பெயர்களில் கல்வி கற்கும் அறைகள், நூலகம் என விரிந்துள்ளது.

மொரீசியஸில் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இக்கோயிலில் சிவராத்திரி, காவடி உற்சவம் என்பவை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சமய விழாக்களாகும். சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இடம்பெற்ற இக்கோயில் மொரீசியஸில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பூசகராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சோமாஸ்கந்த குருக்கள். பல ஆண்டுகளாகப் பணிபுரியும் அவரிடம் மக்களின் ஆன்மிகம் குறித்துக் கேட்ட போது, அவர்

”இங்கே பக்தி நிறைய இருக்கிறது. மேற்கத்திய கலாசாரம் இருந்தபோதும் கோயி‍லை, சடங்குகளை மறக்கவில்லை. இந்தக் கோயிலுக்கு இந்தி, மலையாளம், கன்னடம் பேசுபவர்கள் வருவார்கள். அவர்களோடு இந்தியிலும், கிரியோலிலும் பேசுவேன். பெரும்பான்மையான தமிழர்கள் கிரியோலே பேசுவார்கள். சிலரே தமிழ் பேசுவார்கள். தேவாரம், திருவாசகம் பாடுவார்கள். ஆனால் கிரியோல் அல்லது ஆங்கிலத்தில் எழுதிப் படிப்பார்கள். தீவை ஆண்ட பிரெஞ்ச், ஆங்கிலேயர் பாதிப்பு மக்களிடம் இருக்கிறது. இதுபோன்ற ஆலயங்கள் இருப்பதால் தான் தமிழ் இருக்கிறது. தமிழில் தான் ஆலயத்தில் எல்லாவற்றுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது…”

அர்ச்சகர் கடைசியாக சொன்னது மிகச்சரியானது. பர்மா, பிஜித்தீவு போன்ற நாடுகளில் கோயில்கள் இருப்பதால் தான் தமிழும் இருக்கிறது. இதேநிலை தான் மொரீசியஸ், ரியூனியன், சிசேல் ஆகிய தீவுகளிலும். 48 வீதமான இந்துக்கள் இருக்கும் மொரீசியஸில் 123 இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இது 2023இன் கணக்கெடுப்பு. கணக்கெடுப்பில் சேராத கோயில்களும் உண்டு. இருபது வீதமான கத்தோலிக்கர் உட்பட்ட கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள், 153. 17 விதமான இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் 83. இந்தப் பள்ள​ேவாசல்களில் பெரும்பான்மையானவை போர்ட் லூயிஸிலேயே இருக்கின்றன.

மொரீசியஸில் தமிழர்கள் கோயில் கட்டியதற்கு ஒரு வரலாறு உண்டு. 1727இல் பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பனியால் கொண்டு வரப்பட்ட பாண்டிச்சேரி தமிழர்களால் தான் முதன் முதல் சிறிய சிறிய குடிசைக் கோயில்கள் கட்டப்பட்டன. பிரான்ஸ் ஆட்சியிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு மாறிய மொரிசீயசில் 1811இலேயே அம்மன் வழிபாட்டைத் தமிழ்த் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். 1843இல் வி. சின்னத்தம்பி என்ற வர்த்தகர் கோயில் ஒன்றைக் கட்டினார். இக்கோயில் மொரீசியசுக்குக் குடியேறும் தமிழர்களுக்கு தங்கும் இடமாகவும் இருந்தது. இன்று இக்கோயில் சிவத்தம்பி கோயில் என அழைக்கப்பட்டாலும் அதன் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி திரெளபதி அம்மன் கோயில்.1850லிருந்து 1900 வரை சிவ.சுப்ரமணியர் கோயில்(1859), ஸ்ரீகைலாசம் கோயில்(1864) ஸ்ரீ காளி அம்மன் கோயில் 1870, ஸ்ரீ சிவசுப்ரமணியர் கோயில் 1869, ஸ்ரீ காளி அம்மன் கோயில் 1870, ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் 1878, இன்னொரு ஸ்ரீ சிவ சுப்ரமணியர் கோயில்1894, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் 1902. இது 1835இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் தொடர்ந்தது. காடுகளை அழித்துக் கரும்புத் தோட்டங்களை உருவாக்கிய தமிழர்கள் தங்களின் ஆன்ம திருப்திக்காக குடிசைக் கோயில்களில் வழிபாடு தொடங்கியபோது பிரெஞ்சு ஆட்சியாளர்களால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் முயற்சியில் இருந்தார்கள். மத மாற்றங்கள் தொடங்கின. தங்கள் பெயரோடு கிறிஸ்த மதப் பெயர்கள் வைக்க வற்புறுத்தினார்கள். இவற்றையெல்லாம் சமாளித்து தங்கள் சமய வழிபாட்டில் ஈடுபட்ட தமிழர்கள் பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகு எழுச்சி கொண்டு நிரந்தரக் கோயில்களைக் கட்டத் தொடங்கினார்கள்.

கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை என்பதற்கு மொரிசீயஸில் உள்ள கரும்புத் தோட்ட ஆலையின் உயர்ந்த புகைபோக்கியை எண்ணினாலே போதும். ஒவ்வொரு கரும்பாலை புகைபோக்கிக்கு அருகி‍லும் தொழிலாளர்களின் கோயில்கள் இருக்கின்றன. இப்போது கரும்புத் தோட்டங்கள் சுருங்கி ஆலைகள் மாறிப் போன பின்னரும் சரித்திரச் சான்றாக கரும்பாலை புகைபோக்கி நிற்பதைப் பார்க்கலாம்.

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் வழிபாடு செய்த தெய்வங்களின் வழிபாட்டை இங்கும் தொடர்ந்தார்கள். எனவே அங்கு முனியாண்டி, காத்தவராயன், மதுரைவீரன், ஐயனார், வீரபத்திரன் எனப் பல கிராம தெய்வங்களின் சிலைகள் கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காள மக்கள் காளி தெய்வ வழிபாட்டைக் கொண்டு வந்ததில் காளியின் உருவச்சிலையும் சில கோயில்களில் இருக்கின்றன. அங்கு ஆண்டுதோறும் ஆடு, கோழி என்பன பலி கொடுக்கிற பூஜை நடக்கும். சிவன், முருகன், விநாயகர், அம்மன் ஆகிய கோயில்களில் பலி கொடுப்பது நடக்காது. இக்கோயில்களில் ஆண்டுதோறும் தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, மாசி மகம் என்பன சிறப்பாக நடக்கும். முருகன் கோயில் தைப்பூசக் காவடி பிரசித்தமானது. மொரீசியஸில் இந்தியாவின் வட மாநில இந்து மக்கள் பெரும்பான்மையினராக இருந்த போதும் அவர்கள் கட்டியிருக்கும் கோயில்களைவிட தமிழர்கள் கட்டிய கோயில்களே வண்ணமயமான கோபுரங்களுடன் எழுந்து அழகு சேர்க்கிறது. அக்கோபுரங்களின் அழகு மேலை நாடுகளின் பயணிகளைக் கவர்ந்து சுற்றுலா பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

மொரீசியஸில் சிறியதும் பெரியதுமாக 300 இந்துக் கோயில்கள் இருப்பதாக சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழின் பத்திரிகையாளர் வில்சன் சிலாஸ் டேவிட் (WILSON SILAS DAVID) மொரீசியஸில் இந்தியர்கள் தொழிலாளர்களாக போய் இறங்கி 180 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இரண்டு லட்சம் தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூரில் 25 இந்து கோயில்களே இருக்கின்றன. ஆனால் சுமார் ஆறு லட்சம் இந்துக்களைக் கொண்ட மொரீசியஸில் 300 இந்துக் கோயில்கள் இருப்பதற்கான காரணமே கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள், தாங்கள் வாழும் பகுதியில் கரும்பு ஆலைக்கருகில் கட்டிய சிறிய சிறிய கோயில்களேயாகும். அவற்றின் வயது 100 ஆண்டுகளாகும். மொரீசியஸில் முந்நூறு கோயில்கள் இருந்தபோதும், மிக முக்கியமான சரித்திரப் பிரசித்தி பெற்ற கோயில்களுக்குப் போக முடிந்தது. அக் கோயில்களில் அங்குள்ள தமிழர்களின் வரலாறு பதிந்திருக்கின்றது. சில கோயில்கள் தனிப்பட்டவர்களால் கட்டப்பட்டுள்ளன. மற்றவை அமைப்புகளால் கட்டப்பட்டவையாகும். பெரிய கோயில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் பேசத் தெரிந்த தமிழ்நாட்டு ஐயர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். இக்கோயில்களில் சமய நூலகங்களை அமைத்து தமிழ், சமயம் என்பன சொல்லிக் கொடுக்கிற வகுப்புகள் வார விடுமுறையில் நடத்தப்படுகின்றன.

கிரான்ட்பே (GRAND BAY) என்ற சிறு நகரத்தில் முக்கிய வீதியோரமாக இருந்த கோயி‍லைப் பார்க்கச் சென்ற போது குமரன் செட்டி என்பவரைச் சந்தித்தேன். நடுத்தர வயதான அவரின் பேச்சில் குமுறல் இருந்தது.

”கோயில் அர்ச்சனையில் தமிழ் இல்லை. பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளது.

கோயில்களில் சில மட்டுமே தமிழ் வகுப்புகளை நடத்துகின்றன. எல்லாப் பள்ளிகளிலும் இந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மொரீசியஸ்ஸைக் கட்டியெழுப்பியதில் கணிசமான பங்கு தமிழர்களுக்கு இருந்த போதும் தமிழ், தமிழர்கள் புறக்கணிப்பதாக எண்ண வேண்டியிருக்கிறது.

தமிழர்களுக்குத் தனியான மண்டபம் இல்லை. அதற்கான போராட்டம் இன்றும் நடக்கிறது” என்று அவர் சொன்னார்.

அவர் சொன்னதில் உண்மை இருப்பதை மொரீசியஸ் பயணத்தில் பலரைச் சந்தித்த போது உணர மு‍டிந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இருப்பார். ஆனால் அவருக்குத் தமிழ் பேச வராது. தமிழர்களைவிட அதிகமான இந்தி பேசுபவர்கள் இருப்பதால், அரசு ரீதியாக இந்திக்கு கொடுக்கிற ஆதரவு தமிழ், தெலுங்கு பேசுபவர்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் மத்திய அரசாங்கம் இந்தியைப் பரப்ப மொரீசியஸில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

(இதில் காங்கிரஸ், பி.ஜே.பிக்கும் பங்கு உண்டு) மகாத்மா காந்தி இன்ஸ்டியூட் என்ற நிறுவனத்தின் மூலமே இந்திய அரசு இந்தி கற்க பெரும் உதவிகளைச் செய்து வருகிறது

ஆறுமுகம் பரசுராமன் அமைச்சராக இருந்த போது, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மொரீசியஸில் நடந்தது. அதன் பிறகு தமிழ் சம்பந்தமாக சிறிய, பெரிய மாநாடுகள் மொரீசியஸில் நடந்துள்ளன. அம்மாநாடுகளால் தமிழை மேம்படுத்தும் எப்பணிகளும் அங்கு நடக்கவில்‍லை. தமிழில் மாத இதழ்கள் கூட அங்கில்லை. தமிழ் வானொலிகள் ஒலிக்கவில்‍லை. குடியேறிய முதல் தமிழ் தலைமுறையினரிடம் இருந்த தமிழ் படிப்படியாகக் கு‍றைந்து இப்போதிருக்கிற தலைமுறையினரிடம், தமிழ் அந்நியமானது போன்ற நி‍லையே உள்ளது. தமிழ் படிக்கிற மாணவர்களால்கூட தமிழில் சரளமாகப் பேச முடியவில்‍லை.முதல் தலைமுறை பிரெஞ்ச் ஆதிக்கத்தில் வாழ்ந்தது. அடுத்த தலைமுறை ஆங்கில ஆதிக்கத்தில் வாழ்ந்தது. தற்போது சுதந்திர மொரீசியஸில் வாழ்கிறது. கடந்த காலங்களில் ஆட்சிகளினால் மொழிகள் மாறியதால் கிரியேல் என்ற கலப்பு மொழி மொரீசியர்களிடம் பேச்சு மொழியாகியது. அம்மொழி அங்கு வாழும் எல்லா மொழியினரையும் இணைக்கும் மொழியாகியது. அங்கு கல்வி பயிலும் மாணவன் பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழியில் கற்க வேண்டியதால் தமிழ் ஒரு பாடமாகியது. பேச்சு மொழி கிரியேல் என்பதால் தமிழில் பேச எவரும் இல்லை. மொரீசியசில் பலருக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியும். ஆனால் பேச வரவில்லை. ஒரு மொழியைப் பேச வரவில்லையென்றால் அம்மொழி அழிந்து விடும். மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மலாய் பேச்சு மொழியாக இருந்ததால் தான் இன்று அம்மொழி ரோமன் எழுத்துகளை வரித்துக் கொண்டு ஒரு மொழியாக உயர்ந்திருக்கிறது. மொரீசியசில் பள்ளிகளும், கோயில்களும் தமிழை வளர்க்க பல்வேறு பணிகளைச் செய்த போதும் எதிர்காலத்தில் தமிழ் பேசுவோர் சிறுபான்மையினராக இருப்பார்கள் என்ற அச்சம் இருக்கிறது.

(தொடரும்)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division