Home » தமிழ் இலக்கிய உலகில் உச்சம் கல்கி

தமிழ் இலக்கிய உலகில் உச்சம் கல்கி

by Damith Pushpika
September 15, 2024 6:24 am 0 comment

காலம், பன்முகத்தன்மை கொண்ட சிலரை ஒரு விதத்தில் மட்டும் அடையாளப்படுத்தி நிகரற்ற உச்சத்தில் ஏற்றி வைத்து விடுவதுண்டு. அப்படித் தமிழ் இலக்கிய உலகில் உச்சம் பெற்றிருப்பவர் ‘கல்கி’ என்று அனைவராலும் அறியப்பட்ட இரா. கிருஷ்ணமூர்த்தி. இலக்கியம் படித்தவர்களிடம் மட்டுமே இருந்த தமிழ் இலக்கியத்தை சிறுகதை, புதினம், கட்டுரைகள் என வெகுஜன இலக்கியமாக எளிய மக்களிடமும் கொண்டு சென்ற பெருமை கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு உண்டு.

சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். தற்போது அவரது புகழ் மிக்க புதினமான ‘பொன்னியின் செல்வன்’ இன்றைய தலைமுறையினருக்கு அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ புதினம் இன்றும் இலக்கிய வாசிப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

ஆனால், ஒரு புதினம் மட்டுமில்லை, 15 புதினங்களை, ஏறத்தாழ 75 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். எண்ணற்ற கட்டுரைகளைப் பயண இலக்கியமாக, விமர்சனமாக, சிந்தனையைத் தூண்டுவதாக அளித்துள்ளார்.

வரலாற்றைத் தனது கற்பனையோடு கலந்து தந்திருக்கும் கதைகள், அதற்கென அவர் உருவாக்கி அளித்துள்ள பாத்திரங்கள், புதின இலக்கியத்தின் இலக்கணமாக எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியும் உயர் தரத்தை இலட்சியப்படுத்தியும் நிற்கின்றன. வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துவதில் இவரின் வரலாற்றுப் புதினங்கள் பெருவெற்றி பெற்றுள்ளன.

வி. கல்யாணசுந்தரனாரின் ‘நவசக்தி’யில் 1923-ஆம் ஆண்டு உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ‘அகஸ்தியர்’ என்ற புனைபெயர் வைத்துக் கொண்டார். ‘யங் இந்தியா’ பத்திரிகையில் மகாத்மா காந்தியின் சுயசரிதை தொடராக வெளிவந்தபோது, ‘நவசக்தி’யில் கல்கியின் மொழிபெயர்ப்பில் தமிழில் தொடராக வெளிவந்தது. முதன்முதலில் இந்த உன்னதப் பணியைத் தமிழகத்தில் மேற்கொண்ட பெருமை இவருக்கே உண்டு.

அதே சமயத்தில், எஸ்.எஸ். வாசன், ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை வாங்கி ஜனரஞ்சகமாக நடத்துவதில் முனைந்திருந்தார். ஆனந்த விகடனுக்குக் கட்டுரைகள் அனுப்பி வந்தார் கல்கி. ‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற கட்டுரை அமோக வரவேற்பைப் பெற்றது. அந்தக் கட்டுரைதான் முதன் முதலில் ‘கல்கி’ என்ற புனைபெயரில் வெளியானது. புகழோடு புனைபெயரும் நிரந்தரமாகிவிட்டது.

ஆனந்த விகடன் இதழில் 1931-இல் பணிக்குச் சேர்ந்தார். எழுத்துலகில் தன்னிகரற்றவராக இந்தக் காலகட்டம் அவரை உருவாக்கியது. கதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்தார். ‘கள்வனின் காதலி’ விகடனில் தொடராக வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கைக்குப் பயணம் செய்து 12 வாரங்களுக்கு பயணக் கட்டுரைகள் எழுதினார். இனிமையாக, ‘குழந்தைகள் மாநாடு’ போன்ற நகைச்சுவையோடு உண்மையை அழுத்தமாகப் பேசிய கல்கி, விமர்சனக் கட்டுரைகளில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை.

சத்யாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்றாம் முறையாக சிறை சென்று மீண்டதும் 1940-ஆம் ஆண்டில் டி.சதாசிவத்துடன் இணைந்து ‘கல்கி’ பத்திரிகையைத் துவங்கி ஆசிரியரானார். 1941-இல் மாதமிருமுறை பத்திரிகையாகத் துவங்கப்பட்டு 1944-இல் வாரப் பத்திரிகையாகவும் இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாகவும் உருவெடுத்தது.

அதற்கு கல்கியின் தொடர்கள் காரணமாக அமைந்தன. பத்திரிகை துவங்கியதும் ‘பார்த்திபன் கனவு’ தொடரும் ஆரம்பமாயிற்று. இதற்குப் பிறகு ‘சிவகாமியின் சபதம்’ தொடராக வெளியானது. 1954-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி அவர் காலமானது வரை தனது எழுத்துப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division