இங்கிலாந்து சென்றிருக்கும் இலங்கை அணி முதல் இரு டெஸ்ட்டை இழந்து தொடர் தோல்வியை சந்தித்துவிட்டது. ஆனால் அணியில் சோபித்த ஒருசில வீரர்களில் 27 வயது வலது கை வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ குறிப்பிடத்தக்கவர். அவர் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதாவது தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் இருந்தார்.
லோட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஓல்ட் டிரபர்ட்டில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளை பதம்பார்த்தார். குறிப்பாக கிரிக்கெட்டின் தயாகம் என்று அழைக்கப்படும் லோட்ஸில் இன்னிங்ஸ் ஒன்றில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
‘எனது கனவு நினைவானது. லோட்ஸில் உள்ள கௌரவப் பலகையில் தமது பெயரைப் பதிப்பது அனைத்து பந்துவீச்சாளர்களின் எதிர்பார்ப்பாகும். எனக்கு லோட்ஸில் ஆட வாய்ப்புக் கிடைத்தால் அந்த கௌரவப் பலகையில் எனது பெயரை இடம்பெறச் செய்வது பற்றி, நான் எப்போது கனவு கண்டேன். எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது’ என்று அசித்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
‘நான் இங்கு வந்தபோது கௌரவப் பலகையை பார்த்தேன் (இலங்கையின்) ரூமேஷ் ரத்நாயக்கவின் பெயர் மாத்திரம் தான் இருந்தது. அதில் இரண்டாவது இலங்கையராக என் பெயரை இடம்பெறச் செய்வதற்கு அது எனக்கு ஊக்கம் தந்தது. பெரும்புள்ளிகளுடன் எனது பெயரையும் பதிக்க முடிந்தது எனக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது. எனக்கு வாழ்த்துத் தெரிவித்து ருமேஷ் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார்’ என்றும் அசித்த கூறினார்.
அசித்த பொதுவாக இலங்கை டெஸ்ட் அணிக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறார். என்றாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் முக்கிய பந்துவீச்சாளர்கள் காயமடைந்த நிலையில் அண்மைக் காலமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் இடம்பெற்று வருகிறார். இங்கிலாந்தில் அவர் பந்துவீசுவதில் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
‘இங்கிலாந்தில் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் உள்ளன, எனவே பெரிதாக பிரயத்தனைகள் செய்ய வேண்டியதில்லை. இங்கே பந்து பலதையும் செய்யும், எனவே பந்தை சரியான இடத்திற்கு வீசினால் போதும். அதுவே நான் வெற்றிபெறக் காரணம்’ என்கிறார் அசித்த.
முதல் இரு டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசைக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இலங்கை அணியால் முடிந்தபோதும் அதனை தக்கவைத்துக்கொள்ள தவறியது. லோட்ஸ் டெஸ்ட்டை பார்த்தால் இங்கிலாந்து அணி 216 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் முதல் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இலங்கை பந்துவீச்சாளர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாமல்போனது.
‘இரண்டு டெஸ்ட்களிலும் எமக்கு இப்படித் தான் நிகழ்ந்தது. எமது பந்துவீச்சை எப்படிச் செயற்படுத்துவது என்று நாம் பேசினோம். இரண்டாவது டெஸ்டில், பின்வரிசை வீரர்கள் இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பும்போது பௌன்சர் பந்துகளை வீசுவதற்கு நாம் திட்டமிட்டோம். அது வெற்றி தந்தது’ என்றார்.
என்றாலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அதிலும் ஆரம்ப வரிசை வீரர்கள் சோபிக்காதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதோடு அது பந்துவீச்சாளர்களுக்கு மேலதிக சுமையாக மாறியது. ‘
இங்கிலாந்து அணியின் ஒரே சுழற்பந்து வீச்சாளரான ஷெவைப் பஷிர் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்காதபோது வேகப்பந்து வீச்சார்கள் இலங்கை வீரர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார்கள்.
‘அது அவர்களின் சொந்த மைதானம் என்பதோடு ஆண்டு முழுவதும் டியுக் பந்தை பயன்படுத்துவார்கள். இங்கிலாந்துக்கு வந்தால் மாத்திரமே நாம் அதனுடன் ஆடுகிறோம். அந்தப் பந்தில் எப்படி வீசுவதென்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் பந்து வீசும் இடம் மற்றும் எப்படி பந்தை நகர்த்துகிறார்கள் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கூகபூரா பந்தில் இருந்து டியுக் பந்து சுவிங் ஆவது மாறுபட்டிருக்கும். எம்மில் பலரும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது இது முதல் முறையாக இருப்பதோடு போட்டிக்காக தம்மை சரிப்படுத்திக்கொள்ள கால அவகாசம் எடுக்கும். கூகபூரா பந்தில் இருந்து டியுக் பந்தின் தையல் மாறுபட்டிருக்கும். அது நல்ல கற்றல் அனுபவமாக இருந்தது’ என்றும் அசித்த கூறினார்.
அசித்த பெர்னாண்டோ தனது திறமையை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறார். இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் மொத்தமான 59 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவிட்டும் அசித்த பெர்னாண்டோ தொடர்பில் நல்லபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார்.
‘அசித்தவின் திறமை பற்றி பலருக்கும் தெரியாது. தனது மணிக்கட்டில் மாற்றம் செய்யாது அவரால் இரண்டு பக்கங்களுக்கு ஸ்விங் செய்ய முடியும். பாகிஸ்தானின் முஹமது ஆசிப்புக்குப் பின்னர் இந்த திறமையை நான் அவரிடமே பார்த்தேன்’ என்றார் அவர்.
மைதானத்திற்கு வந்தால் எப்போதும் ஆர்வமாக இயங்கும் அசித்த பெர்னாண்டோ, பந்துவீசும்போது அவரிடம் ஒரு சுறுசுறுப்பை பார்க்க முடிகிறது. அவர் தனது கிரிக்கெட் வாழ்வை பெரிதாக அவதானத்தை பெறாது ஆரம்பித்தபோதும் நாளுக்கு நாள் அவரது திறமை அதிகரித்து வருகிறது. அதற்கு அவருக்கு இன்னும் போதுமான வாய்ப்பும், நம்பிக்கையும் அளிக்கப்பட வேண்டும்.