பாரம்பரிய ஊடகங்கள் மீதான நம்பிக்கை குறைந்தமையாலேயே மாற்றுத் தெரிவாக மக்கள் சமூக ஊடகங்களின் பக்கம் சென்றுள்ளனர். இதேபோன்று சமூக ஊடகங்கள் வரம்புமீறி சரியான முறையில் செயற்படாவிட்டால், அதன் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்துவிடுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்தார். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அரச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்ைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கே: தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்துக் குறிப்பிடுவீர்களா?
பதில்: தேர்தலை நடத்துவதற்கு இதுவரை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் பூர்த்தி செய்துள்ளோம். அதேபோல, எதிர்வரும் நாட்களுக்குத் தேவையான திட்டமிடல்களை மேற்கொண்டிருப்பதுடன், ஏதாவது திடீர் தேவைகள் ஏற்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்யக் கூடிய வகையிலேயே எமது திட்டமிடல்கள் எப்பொழுதும் இருக்கும். மாவட்ட ரீதியாக உள்ள தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அந்தந்தப் பிரதேசத்துக்கு ஏற்ற வகையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்துக் கவனம் செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் எமது தேர்தல் அதிகாரிகள் திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளனர். அதேபோல, தேசிய மட்டத்திலான ஏற்பாடுகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கே: ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் இம்மாதம் 18ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதுவரை உங்களுடைய கண்காணிப்பின் அடிப்படையில் தேர்தல் குறித்த பிரசாரங்கள் எவ்வாறானதாகக் காணப்படுகின்றன?
பதில்: கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தல் குறித்த பிரசாரங்கள் குறைவாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பிரசாரச் செயற்பாடுகளும் அதிகமாக இருக்கும். எனினும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரசார நடவடிக்கைகள் குறைவாகவே காணப்படுகின்றன. வீதிகளில் காணப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம். இது பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக மாத்திரமன்றி, தேர்தல் சட்டத்திற்கும் முரணானதாகும்.
தற்பொழுது கட்சிகளின் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று வேட்பாளர்களுக்கான தேர்தல் அலுவலகங்களைத் திறப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை. இருந்தபோதும், இதனை அடிப்படையாகக் கொண்டு பிரசாரங்களை மேற்கொள்வது போன்ற கீழ்மட்டமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும் தேர்தல் முறைமையில் நேர்மைத் தன்மையைப் பேணுவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எனவே, இதுபோன்று கீழ்மட்ட பிரசாரங்களை மேற்கொண்டு கௌரவத்தை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
தேர்தல் விதி மீறல்கள் இடம்பெறுவதில் பெரும் பங்கு ஊடகங்களின் வாயிலானதாகவே காணப்படுகின்றது. வாக்காளர்கள் மத்தியில் அதிகமான தாக்கத்தைச் செலுத்தும் ஒன்றாக ஊடகங்கள் காணப்படுகின்றன. தேர்தல் குறித்த தொடர்பாடல்களை மேற்கொள்ளும் அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பு உள்ளது. தேர்தல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதற்கான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் தேசியக் கொடியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளோம். பிரசார நடவடிக்கைகளுக்குத் தேசியக் கொடி அவசியமில்லை. இது தேர்தல் சட்டம் இல்லையென்றாலும், தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி உள்நாட்டு அமைச்சினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் அனைத்தையும் தேர்தல் சட்டத்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த வேண்டியதென்று இல்லை. சாதாரண சட்டத்தையும் பயன்படுத்தலாம்.
தேர்தல் காலத்தில் வாகனங்களின் பின்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு பயணிக்க முடியாது. இருந்தாலும் தனியார் வாகனங்கள் பல இவ்வாறு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவற்றை போக்குவரத்துச் சட்டத்தைப் பயன்படுத்தி அகற்ற முடியும். நாட்டில் பொதுவான சட்டம் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படுமாயின் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டத்தைக் கடைப்பிடிக்க சிறிய முயற்சியையே நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேநேரம், ஊடகப் பயன்பாடு தொடர்பில் சில ஊடகங்களின் நடவடிக்கைகள் பற்றி தீர்மானம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஊடகங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது. காணப்படும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அனுமதிக்கப்பட முடியாததாகும்.
கே: பாரம்பரிய ஊடகங்கள் மாத்திரமன்றி சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பல வருடங்களாக சம்பிரதாய ஊடகங்களில் தங்கியிருந்த மக்கள் தற்பொழுது மாற்றுத் தெரிவொன்றைத் தேடிச் சொன்றுள்ளனர். இதன் மீதான நம்பிக்கை இழக்கப்படும் பட்சத்தில் மக்கள் வேறொரு மாற்றுத் தெரிவுக்குச் செல்வார்கள். இத்தகைய அச்சுறுத்தல் சமூக ஊடகங்களுக்கு உள்ளது. பாரம்பரிய ஊடகங்கள் தமக்கு மாற்றுத் தெரிவுவரும் என எண்ணியிருக்கவில்லை. எனவே மாற்றுத் தெரிவு என்பது எந்த நேரத்திலும் உதயமாகலாம். தகவல்களை வழங்க வேண்டாம் என்று நாம் கூறவில்லை. தொடர்பாடலுக்கான பயனை முழுமையாகப் பெற்றுக் கொண்டால் பிரச்சினையில்லை. மக்களைத் தேவையற்ற வகையில் குழப்பும் வகையில் போலியான தகவல்களை வழங்குதல், செய்திகளை உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டாம் என்றே நாம் வலியுறுத்துகின்றோம். மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டால் சமூக ஊடகங்களும் பயனாளர்களை இழக்க வேண்டியிருக்கும்.
கே: இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 15 வேட்பாளர்களே ஆகக் குறைந்தது ஒரு கூட்டத்தையாவது நடத்தியிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. இது பிரச்சினைக்குரியது இல்லையா?
பதில்: இது பிரச்சினைக்குரியது அல்ல. ஏனெனில், இதில் போட்டியிடும் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்ட ரீதியிலேயே போட்டியிட முன்வந்துள்ளனர். எனவே அவர்கள் இவ்வாறு போட்டியிட முன்வந்திருப்பதற்கான சூழல் பற்றியே சிந்திக்க வேண்டும். அவ்வாறான நிலைமையை சீர்செய்வதாயின் சம்பந்தப்பட்ட சட்டத்தைத் திருத்த வேண்டியது சட்டவாக்கத்தின் கடமையாகும். சட்டவாக்கமோ நிறைவேற்று அதிகாரமோ சம்பந்தப்பட்ட தரப்பு யாராக இருந்தாலும், இது பற்றிய யோசனையை அமைச்சரவையின் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கு சட்டரீதியான தன்மையை வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாக இந்த நிலைமையை மாற்ற முடியும்.
கே: அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் காணப்படும் சூழ்நிலையில் வாக்குச் சீட்டின் நீளமும் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்குகளை சேகரிப்பதற்கான ஏற்பாடுகள் எந்தளவில் உள்ளன?
பதில்: வாக்குச் சேகரிப்பிற்கு நாம் மரத்தினாலான பெட்டிகளுக்குப் பதிலாக கார்ட்போர்ட் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அது மாத்திரமன்றி வாக்குச் சீட்டின் நீளம் கடந்த முறை காணப்பட்ட அளவிலேயே இருப்பதால் வாக்குப் பெட்டிகள் குறித்த பிரச்சினை இல்லை. வாக்குச் சீட்டு சற்று நீளமாக இருப்பதால், வாக்காளர்கள் மேலிருந்து கீழ் வாசிக்க வேண்டியதொரு நிலைமை மாத்திரம் இருக்கும். எனினும், தாம் யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்ற முடிவில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது.