Home » ஷேக் ஹசீனாவின் விடை தெரியாத எதிர்காலம்!

ஷேக் ஹசீனாவின் விடை தெரியாத எதிர்காலம்!

by Damith Pushpika
September 8, 2024 6:00 am 0 comment

கடந்த மாதம் 5 ஆம் திகதி வரை பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்து ஒருமாத காலம் ஆகிவிட்டது.

அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் இரகசியமாகவும், பலத்த பாதுகாப்புடனும் செய்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தனது இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை இந்தியா இன்னும் முறைப்படி தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் ஷேக் ஹசீனாவின் தூதரக கடவுச்சீட்டை வங்கதேச அரசு கடந்த வாரம் ரத்து செய்தது. இதனால் அவர் இப்போது இந்தியாவில் தங்கியிருப்பதற்கு சட்ட அடிப்படை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷேக் ஹசீனா விவகாரத்தில் தற்போது இந்தியாவிற்கு மூன்று மாற்று வழிகள் திறந்திருக்கின்றன.

இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் மற்றொரு நாட்டில் தஞ்சம் புகுவதற்கான ஏற்பாடுகளை செய்வது முதல் வழி. அது அவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இடமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது வழி, ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் அளித்து அவர் இந்தியாவில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது.

மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுப்பது இப்போது ஒருவேளை சாத்தியமாக இருக்காது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு நிலைமை சீரடைந்தால், ஷேக் ஹசீனா அரசியல் ரீதியாக சொந்த நாடு திரும்புவதற்கு இந்தியா முயற்சி செய்யக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஒரு கட்சியாக அல்லது ஒரு அரசியல் சக்தியாகத் திகழும் தகுதியை அவாமி லீக் இன்னும் இழக்கவில்லை என்பதே இதற்குக் காரணம். ஹசீனா தனது நாட்டிற்குத் திரும்பிய பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை முதல் வழியே சிறந்தது என்பதில் சந்தேகமில்லை.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தொடர்ந்து இருந்தால், அது இந்தியா – வங்கதேச உறவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இதனுடன் இந்தியா – வங்கதேசத்திற்கு இடையிலான நாடு திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தின் கீழ் ஷேக் ஹசீனாவை நாடு திருப்பி அனுப்புமாறு வங்கதேசம் கோரிக்கை விடுத்தால், ஏதேனும் சில வாதங்களின் அடிப்படையில் இந்தியா அதை நிராகரிக்கும் என்பதும் உறுதி.

நீதி விசாரணையை எதிர்கொள்ளும் பொருட்டு ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது இந்தியாவுக்கு நடைமுறை ரீதியில் சாத்தியம் இல்லை.

அத்தகைய சூழ்நிலையில் ஷேக் ஹசீனா விவகாரத்தில் முன்னர் குறிப்பிட்ட மூன்று வழிகள் தவிர வேறு எந்த வழியும் இந்தியாவிடம் இல்லை.

வங்கதேசத்தின் நிலைமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஓகஸ்ட் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது ஹசீனா இந்தியாவுக்கு வந்திருப்பதைக் குறிப்பிடும் போது ‘இப்போதைக்கு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதன் பிறகு இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஷேக் ஹசீனாவை இந்தியா, வங்கதேசம் அல்லாத மூன்றாம் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பும் முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதே இதற்குக் காரணம். ஆனால் இதில் உடனடி வெற்றி கிடைக்காவிட்டாலும், அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்து நீண்ட காலம் இங்கு தங்கவைக்கவும் இந்தியா தயங்காது.

ஷேக் ஹசீனா மூன்றாவது நட்பு நாடு ஒன்றுக்குச் சென்று வாழக்கூடிய விஷயத்தில் நல்லபடியாக ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் அது நடக்கவில்லை என்றால், இந்தியா ஷேக் ஹசீனாவை இந்தியாவில் நீண்ட காலம் தங்க வைக்கத் தயாராகும் என்பதே உண்மை.

ஷேக் ஹசீனாவின் அமெரிக்கா செல்லும் திட்டத்திற்கு ஆரம்ப கட்டத்திலேயே தடைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இரண்டு சிறிய நாடுகளுடன் இந்த விஷயம் குறித்து இந்தியா விவாதித்ததாகத் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. இப்போது ஷேக் ஹசீனாவுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பாக மத்திய கிழக்கின் மற்றொரு செல்வாக்குமிக்க நாடான கட்டாருடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

ஷேக் ஹசீனா இதுவரை அமெரிக்காவிலோ அல்லது இந்த நாடுகளிலோ அரசியல் தஞ்சம் கோரி எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பான எல்லா பேச்சுவார்த்தைகளையும் அவர் சார்பாக, அவருடைய வாய்மொழி சம்மதத்தின் அடிப்படையில் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஏதாவது மூன்றாவது நாடு ஒப்புக்கொண்டால், டெல்லியில் இருந்து அந்த நாட்டுக்கு அவர் எந்த கடவுச்சீட்டில் செல்வார் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

ஆனால் வங்கதேச அரசு அவரது கடவுச்சீட்டை ரத்து செய்துவிட்டது என்றாலும், இந்தியா வழங்கும் பயண ஆவணம் அல்லது அனுமதிப்பத்திரத்தின் உதவியுடன் அவர் மூன்றாவது நாட்டிற்கு பயணம் செய்யலாம் என்கிறார்கள் இராஜதந்திரிகள்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் உள்ளனர். அவர்களிடம் கடவுச்சீட்டே இல்லை. அத்தகைய வெளிநாட்டவருக்காக இந்தியா பயண ஆவணத்தை வழங்குகிறது. அவர்கள் அதைக் கொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள்.

ஷேக் ஹசீனாவுக்கு ஒரு நாடு புகலிடம் அளிக்கத் தயாராக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், இந்திய அரசு வழங்கும் பயண ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நாட்டின் விசா பெற்றுக்கொண்டு அவர் எளிதாக அங்கு சென்று வாழலாம்.

ஷேக் ஹசீனா 1975 இல் தனது குடும்பத்துடன் இந்தியாவில் வசித்தார். மிகவும் அவசியமானால் ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் தஞ்சம் அளித்து அவரை நாட்டிலேயே வைத்திருக்க இந்தியா தயங்காது என்பதற்கான அறிகுறிகளும் டெல்லியில் இருந்து வருகின்றன.

திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா, நேபாள மன்னர் திரிபுவன் பீர் விக்ரம் ஷா, ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது நஜிபுல்லா ஆகியோருக்கு இந்தியா முன்னதாக அரசியல் புகலிடம் அளித்துள்ளது. ஷேக் ஹசீனாவும் 1975 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் இந்தியாவில் வசித்துள்ளார். ஆனால் இந்த விருப்பத்தை தெரிவு செய்யும் பட்சத்தில், இந்திய — வங்கதேச இருதரப்பு உறவுகளில் அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதையும் இந்தியா மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

1959ஆம் ஆண்டு தலாய் லாமாவுக்கு அரசியல் தஞ்சம் அளித்த பிறகு இந்தியா – சீனா உறவில் ஏற்பட்ட கசப்பு, 65 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் காணப்படுவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தலாய் லாமா இந்தியாவிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ எவ்வளவு மதிப்புடன் பார்க்கப்பட்டாலும், இந்தியாவுக்கும்- சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் அவர் எப்போதும் சர்ச்சைக்குரியவராகவே இருந்து வருகிறார்.

ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் புகலிடம் அளித்தால், வங்கதேசத்தின் புதிய அரசுடனான உறவை வலுப்படுத்துவதற்கு அது தடையாக அமையும்.

இந்திய அரசும் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளது. இருந்த போதிலும் முதல் வழியில் வெற்றி கிடைக்கவில்லையென்றால், இரண்டாவது விருப்பத்தை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்குக் காரணம், தனது நீண்ட கால நண்பரான ஷேக் ஹசீனாவை நெருக்கடியில் தனித்து விட்டுவிடுவது இந்தியாவுக்கு எந்த சூழ்நிலையிலும் சாத்தியம் இல்லை.

இதுஒருபுறமிருக்க வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனாவின் முக்கியத்துவமும், பங்கும் இன்னும் முடிவடையவில்லை என்றும், தகுந்த நேரம் வரும்போது அவரது அரசியல் மறுவாழ்வுக்கு இந்தியா உதவுவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனா மூன்று முறை (1981, 1996 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில்) வலுவான மறுபிரவேசம் செய்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் ஹசீனா மீண்டும் வருவது ’ஒருவேளை சாத்தியமில்லை’ என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் அதை தவறு என்று நிரூபித்து வருகிறார்.

வங்கதேசத்தில் அவாமி லீக் மீது எந்த தடையும் விதிக்கப்படவில்லை. நாடு முழுக்க சக்திவாய்ந்த தொடர்புகளை அது கொண்டுள்ளது. அக்கட்சியின் உச்ச தலைவராக ஷேக் ஹசீனா எதிர்காலத்தில் வங்கதேசம் திரும்பக்கூடும் என்றும் பலர் நம்புகின்றனர்.

கடந்த ஐம்பது வருடங்களில் ஷேக் ஹசீனா மீது இந்தியா செய்த அரசியல் முதலீடு காரணமாக டெல்லியின் செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினர், “ஹசீனாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது” என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

எஸ்.சாரங்கன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division