பீ.மரியதாஸின் நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “மலையகம் இங்கிருந்து எங்கே? எனும் எச்.எச். விக்கிரமசிங்கவின் முயற்சியில் கிடைத்த நூலின் அறிமுக விழா ஹட்டன் சமூகநல நிலையத்தில் கடந்த ஞாயிறு 26ஆம் திகதி க. மெய்யநாதனின் ஒழுங்கமைப்பில் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
அரங்கு நிறைந்த விழாவில் ஹட்டனிலும் இராகலையிலும் அறுபதுகள் தொடக்கம் இன்றைய தலைமுறையினர் வரை மலையகம் குறித்த அக்கறைமிக்கவர்களும் பீ.மரியதாஸோடு ஊடாடியவர்களும் கலந்து கொண்டனர். லண்டனிலிருந்து மு.நித்தியானந்தனின் குரல்வழி இணைப்பில் நூலாசிரியரின் பரிமாணமும் நூலின் வலிமையும் சபைக்கு உணர்த்தப்பட்டது.
மலையகம் 200 காலப்பகுதியில் வெளிவந்த நூல்களில் இந்த நூலின் தனித்துவம் பற்றி சிலாகித்த தலைமை வகித்த சு.முரளிதரனின் உரையை அடுத்து அறிமுக உரையை வழங்கிய நூலாசிரியரின் மாணவரும் முன்னாள் ஆலோசகருமான பி.அருண்மொழிச்செல்வன் மரியதாஸின் நிழலில் கடந்த தருணங்களை முன்வைத்தார். மரியதாஸ் ஏற்பாடு செய்த தியாகி டெவன் லெட்சுமண் குறித்த கவியரங்கத்தை அதில் குறிப்பாக முன்வைத்தார். வெளியீட்டுயுரையை நிகழ்த்திய விக்கிரமசிங்க நூலாக்க முயற்சியின் பின்னணியை விளக்கியதோடு அதில் மு.நித்தியானந்தனின் வகிபாகத்தையும் ஆர். இராமலிங்கத்தின் (லண்டன்) அனுசரணையையும் அடிக்கோடிட்டார்.
மலையக எழுச்சியில் மௌனமான மற்றும் பலமான வகிபாகத்தை கொண்ட ஹைலண்டஸ் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான ஏ.எஸ். குமார் முதல்பிரதியை பெற்றுக்கொண்டதோடு ஹட்டன் சமூகநல நிலைய பொறுப்பாளர் அருட்தந்தை பிரேம்குமார் சிறப்புப்பிரதியை பெற்றுக்கொண்டு தனது மனப்பதிவினை பகிர்ந்து கொண்டார்.
நூல் குறித்து திறனாய்வை காத்திரமாக முன்வைத்த கொட்டகலை ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபரும் போராதனை பல்கலைக்கழக கல்வித்துறை வருகைதரு விரிவுரையாளருமான ஜே.சற்குருநாதன் நூலின் சிறப்பு பற்றிக்கூறினார். குறிப்பாக மலையக வரலாற்றாசிரியர்கள் மலையக இடதுசாரி தளங்கள் குறித்த தீண்டாமையும் அந்த குறையை நீக்க இடதுசாரி இயக்கமும் மலையகமும் (1930- – 2023) என்ற மரியதாஸின் கட்டுரை வர்க்க ரீதியான சிந்தனை முன்னெடுப்புக்கு மலையகம் எவ்வாறு முகம் கொடுத்தது என்பது பற்றி கூறுவதையும் சுட்டிக்காட்டினார். மேலும் அதில் மலையக இடதுசாரிகளாக குறிப்பிடத்தக்க எல். சாந்திகுமார் மற்றும் பி.ஏ. காதர் ஆகியோரின் பங்களிப்புகள் பதிவு செய்தமை பற்றிய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
கருத்துரைகள் வரிசையில்; நூலாசிரியரின் கல்லூரி சகபாடியான பேராசிரியர் தை. தனராஜ் நூலோடு ஒட்டியும் நூலாசியர் சார்ந்தும் கருத்துகளை தெரிவித்த போது தனதும் மரியதாஸினதும் சபையிலிருந்த சிலரினதும் கடந்தகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஹட்டனில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமை வகித்த அரசியல் கூட்டத்தில் கலந்து உரையாற்றியமையால் பொறியில் சிக்கிக்கொண்டதை குறிப்பிட்டார். அரசியல் கூட்டங்களில் அரசாங்க அலுவலர் கலந்து கொள்ளக்கூடாது எனத் தெரிந்து கொண்டும் பங்கேற்று, அதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தமையால் அதை ஈடுசெய்ய, ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் ஒரு பிரத்தியேக கல்வி நிறுகத்தை அமைத்ததையும் அதில் தானும் மரியதாஸும் செயற்பட்டதையும் குறிப்பிட்டார். முன்னாள் பரீட்சைத் திணைக்கள பிரதி ஆணையாளரும் ஒலிபரப்பாளருமான போல் அந்தனி, தான் எழுபதுகளில் ஹைலண்டஸ் கல்லூரியில் பணியாற்றிய போது இணைந்து செயற்பட்ட நாகலிங்கம் மற்றும் சரவணப்பிரகாசம் என்பவர்களோடு எவ்வாறு தாளலய நாடகத்தை உருவாக்கி, அதனை மலையகத்துக்கு அறிமுகப்படுத்திய பின்னணியை முக்கிய தகவலாக பரிமாறிக்கொண்டார். ஓய்வுநிலை மேலதிக கல்விப் பணிப்பாளர் க.மெய்யநாதன் சுருக்கமாக தனக்கும் மரியதாஸுக்குமுள்ள ஆத்மார்த்த நட்பை உரையில் வெளிப்படுத்தினார். முன்னாள் நகரசபை உறுப்பினரும் கல்வியியலாளருமான எம்.ஆர். விஜயானந்தன் மரியதாஸின் மொழிப்புலமையை சிலாகித்தார். வீரகேசரி வாரவெளியீட்டு பிரதி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் சமகால மலையக நிலைமைகளை சுருக்கமாக பகுப்பாய்வு செய்து நூல் தலைப்பின் பொருத்தப்பாட்டை வியந்தார். முத்தாய்ப்பு உரையாக மு.சிவலிங்கம் தானும் மரியதாஸ{ம் 14 வயதை கடந்து ஹைலண்டஸ் கல்லூரில் அனுமதி கேட்டு வந்த போது ‘ஓவர் ஏஜ்’ தடையாக அமைந்ததும் பின்னர் ஆசிரியர் செபஸ்தியன் எவ்வாறு அவர்களுக்கு அனுமதி பெற்றுக்கொடுத்தார் என்பதையும் விளக்கினார்.
ஏற்புரையில் மரியதாஸ் நூல் வெளிவரக் காரணமாக இருந்த விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்ததோடு தனக்கும் தன்னோடு சேர்ந்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் கிடைக்க அக்காலத்து அரசியல் கோட்டா முறை பயன்படுத்தப்பட்டமை குறித்தும் அதன்போது தான் ஒரு தலை வணங்காத்தனத்தோடு செயற்பட்டதையும் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.அகிலன் நன்றியுரை வழங்க அறிமுகவிழா இனிதே நிறைவேறியது.
எச். எச் விக்கிரமசிங்க