Home » தேயிலையின் எதிர்காலம்

தேயிலையின் எதிர்காலம்

சர்வதேச தரநிர்ணய அமைப்பு நடத்திய விசேட கூட்டம்

by Damith Pushpika
August 4, 2024 6:00 am 0 comment

சர்வதேச தரநிர்ணய அமைப்பின் (ISO) தேயிலை குறித்த தொழில்நுட்பக் குழுவின் (ISO TC 34/ SC 8) 30ஆவது பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றதுடன், 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தேசிய தரநிர்ணய அமைப்புகளைப் (NSBs) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய BESPA-FOOD திட்டத்தின் ஆதரவுடன் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) இவ்விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமாத்திரமின்றி, ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் (UNIDO) ஆதரவுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டமானது, COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு நடைபெறுகின்ற முதலாவது நேருக்கு நேர் நிகழ்வு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள உறுப்பு நாடுகளுக்கு தேயிலைத் துறையைச் சார்ந்த புதிய தரநிலைகள் மற்றும் ஆராய்ச்சி பற்றி விவாதிக்கவும், வளர்ச்சி முன்னேற்றத்திற்கு ஏற்ப இருக்கும் தரநிலைகளை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கின்ற ISO/TC 34/SC 8 கூட்டமானது அந்தந்த நாடுகளின் சந்தை போக்குகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப செயல்படவும் வாய்ப்பளிக்கிறது.

இதுதொடர்பில் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சித்திகா ஜீ சேனரத்ன கருத்து தெரிவிக்கையில், “இந்த முக்கியமான கூட்டத்தை நடத்துவது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். இலங்கையில் தேயிலை உற்பத்தி துறையானது ISO தரநிலைகளுடன் முழுமையாக செயல்படுகின்றது. அதேபோல, தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் நிலையான தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான பணியைச் செய்து வருகின்றோம்.” எனத் தெரிவித்தார்.

உலகளாவிய தேயிலை உற்பத்திக்கான பல்வேறு சர்வதேச சந்தை அளவுகோல்களைப் பற்றிய முக்கியமான விவாதங்களையும், மதிப்பீடுகளையும் உள்ளடக்கியதாக இம்முறை ISO கூட்டம் நடைபெற்றது.

குறிப்பாக, தேயிலைத் (Camellia sinensis) துறையில் தரநிலைப்படுத்தல், பல்வேறு வகையான தேயிலைகளுக்கான தொகுப்பு தரநிலைகள், தரத்தை பரிசோதிக்கும் முறைமைகள் (உணர்வு மற்றும் கலவை உட்பட), சிறந்த உற்பத்தி நடைமுறைகள் (போக்குவரத்து உட்பட), சர்வதேச வர்த்தகத்திற்கு தேயிலை தரத்தில் தெளிவை வழங்குதல் மற்றும் தேயிலை தரத்தின் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவை இதன்போது விவாதிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதுமாத்திரமின்றி, இரசாயனவியல் பகுப்பாய்வு மூலம் தேயிலையை வகைப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்துதல், வெள்ளை தேயிலையை தரப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், மசாலா சாய் தூளின் தன்மைகளை வரையறுத்தல் மற்றும் கறுப்பு தேயிலைக்கான சொல்லகராதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இம்முறை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய சில தலைப்புகளாகும்.

அதேபோல, திடமான வடிவில் உடனடி தேநீருக்கான (Instant tea) தரநிலைகளை திருத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து UNIDO வின் சிரேஷ்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர் கலாநிதி கயிரோ விலமில் டியஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் BESPA-FOOD திட்டத்தின் முக்கிய தூண்களில் விவசாய உணவுத் துறைக்கான சர்வதேச தரத்தை மேம்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஆதரவளிப்பது ஒன்றாகும்.

உள்ளூர் விவசாய- உணவு மதிப்புச் சங்கிலியை இலங்கையிலும், இலாபகரமான சந்தைகளை வெளிநாட்டிலும் அணுக இது உதவும் என தெரிவித்தார்.

2024 கொழும்பு சர்வதேச தேயிலை மாநாடு நடைபெறுகின்ற காலப்பகுதியில் தான் தேயிலை தொடர்பான 30ஆவது ISO/TC/SC 8, கூட்டமும் நடைபெற்றதால் உலகெங்கிலும் உள்ள தொழில்துறையின் முன்னணி பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division