மொஹமட் ஷிராஸின் தேசிய அணிக்கான காத்திருப்பு கால்கடுக்கும் அளவுக்கு நீண்டது. அவ்வப்போது உள்ளூர் மட்டப் போட்டிகள், இலங்கை ஏ அணிக்கான போட்டிகள் அப்படி இல்லை என்றால் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணிக்கான போட்டிகளில் ஷிராஸின் பெயர் வந்து போகும். சிறந்த திறமையையும் வெளிப்படுத்தி இருப்பார், என்றாலும் இலங்கை அணிக்கு ஆடும் அவரது கனவும் நெடியது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டபோது கூட ஷிராஸ் இடம்பெறவில்லை; அதற்கான சாத்தியமும் குறைவாகவே இருந்தது. என்றாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான எதிர்பாராத தட்டுப்பாடு சிராஸுக்கு வாய்ப்பை தந்திருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னரே முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர சுகவீனமுற்று தொடரில் இருந்து வெளியேறினார். அதனை அடுத்து போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற களத்தடுப்பு பயிற்சியின்போது நுவன் துஷாரவுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.
எல்.பி.எல். தொடரில் சோபித்து இலங்கை டி20 அணிக்குத் திரும்பிய பினுர பெர்னாண்டோவுக்கு சுகவீனம் ஏற்பட அணியில் இருந்து வெளியேறினார். இதனால் டி20 அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக மதீஷ பத்திரண மற்றும் டில்ஷான் மதுஷங்க இடம்பெற்றனர்.
என்றாலும் ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பத்திரணவும் ஏற்கனவே இருக்கும் தோள்பட்டை வலி மீண்டும் வெளிப்பட அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து டில்ஷான் மதுஷங்கவும் பயிற்சியின்போது தொடைப் பகுதியில் தசைப்பிடுப்புக்கு முகம் கொடுக்க அவரும் ஒருநாள் தொடரில் இருந்து விலனார். இதனை அடுத்தே இலங்கை அணிக்கு இதுவரை ஆடாத ஏஷான் மாலிங்வுடன் மொஹமட் ஷிராஸும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டனர்.
ஷிராஸ் கடந்த ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்ற பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்துவீசி இருந்தார். பி.ஆர்.சி. அணிக்காக ஆடும் அவர் குருநாகல் அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓவர்களில் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இது ஏ தர மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் இருந்தது. இதற்கு சரியாக ஒரு நாளைக்குப் பின்னரே அவர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டார்.
இலங்கை அணி அண்மைக் காலத்தில் சந்தித்து வரும் தோல்விகளால் அணியில் புதிய திறமைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக் குழு தள்ளப்பட்டிருப்பது மற்றும் இருக்கின்ற அனைத்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பெற முடியாத நிலையில் ஷிராஸின் இணைப்பு இடம்பெற்றிருக்கிறது.
என்றாலும் 29 வயதான ஷிராஸ் நீண்ட காலமாக கவனிக்கப்படும் வீரராக இருந்து வருகிறார். ஆனால் அவருக்கான வாய்ப்புகள் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வருகிறது. உள்ளூர் போட்டிகளில் சோபித்து அண்மையில் நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றாலும் அங்கேயும் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மடவளை, மதீனா மத்திய கல்லூரியில் இருந்து தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்த ஷிராஸ், கிரிக்கெட் பின்னணி இல்லாத சூழலில் இருந்து இத்தனை தூரம் வருவதென்பது சாதாரணமாதல்ல. பின்னர் குருநாகல் யூத் கழகத்தில் ஆடிய அவர் கோல்ட்ஸ் கழகத்தில் இணைந்தது அவரது கிரிக்கெட் வாழ்வின் திருப்பமாகும்.
இதுவரை 49 முதல் தர போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 125 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதோடு பந்துவீச்சு சராசரியும் 31.31 என நன்றாக உள்ளது. இதுவரை 47 ஏ தரப் போட்டியில் ஆடியிருக்கும் அவர் 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரியும் 17.52 என சிறப்பானது.
2019 ஆம் ஆண்டு இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின்போது ஷிராஸும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அங்கு இலங்கை ஆடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்கு பின்னர் அணிக்கு திரும்புவதற்கு அவர் ஐந்து ஆண்டுகள் காத்திருந்தே இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கிறார்.
தனது திறமையை நிரூபிப்பதற்கு ஷிராஸுக்கு அதிக அவகாசம் கிடைக்கப்போதில்லை, கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தினாலேயே அதனை தக்க வைக்க முடியும். அதற்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் கைகூட வேண்டும். இது ஷிராஸுக்கு மாத்திரமல்ல உள்ளூர் மட்டத்தில் சோபித்து வரும் இலங்கையின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு பொருந்தும்.