தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பற்கு ரெலோ, புளொட் மற்றும் தமிழரசுக் கட்சியிலும் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில். எங்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தான் இருக்க வேண்டுமென விரும்புகிறோம். அதனையே கட்சிகளிடத்திலும் நாங்கள் கூறியும் இருக்கிறோம்.
இதனை ஆரம்பத்திலிருந்தே சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கூறியிருந்தாலும் இன்று அவர்களுடைய கட்சிக்குள் ஏதோ பிரச்சினை உருவாகியிருக்கிறது போல் தெரிகிறது. ஆகையினால் அவர்கள் அதை தீர்த்துக் கொண்டு சரியான முடிவொன்றுக்கு வருவார்களென நம்புகின்றோம். ஏனெனில் சுமார் 23 வருடங்களாக இரா.சம்பந்தரே பாராளுமன்றக் குழுத் தலைவராக இருந்திருக்கின்றார்.
ஆகவே அந்தப் பாராளுமன்றக் குழுத் தலைவராக மற்றக் கட்சிகளில் ஒருவருக்கு கொடுப்பது தான் முறையென நினைக்கிறோம். இதன்படி அவர்கள் அதைச் செய்வார்களென நான் நினைக்கின்றேன்.
தற்போதுள்ள மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகள் செல்வம் அடைக்கலநாதன் தான் தெரிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. எனினும் அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக தமிழரசுக் கட்சி இருக்கிறது. ஆனாலும் செல்வத்துக்கு தான் அவ்வாறு கிடைக்குமென நம்புகிறேன். தமிழரசுக் கட்சியில் அவர்கள் ஆறு பேர் இருக்கின்றனர். எங்களில் நான்கு பேர் இருக்கின்றோம். அந்த ஆறு பேரில் ஒருவர் இருவர் என எங்களுடைய நிலைப்பாட்டுக்கு சிலர் இணங்கி சம்மதித்தாலும் இப்போது தமது கட்சியின் தீர்மானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அடுத்த கூட்டத்தில் என்ன நடக்கின்றதென பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.
பருத்திதுறை விசேட நிருபர்