இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராட்டக்குழுவுக்கும் இடையில் முழு அளவிலான போர் மூளுவதைத் தவிர்ப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. குறிப்பாக ஹிஸ்புல்லாஹ் உடன் போரை முன்னெடுப்பதை விடுத்து இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இஸ்ரேலை வலியுறுத்திவரும் அமெரிக்கா, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றது.
அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆற்றல் மற்றும் முதலீடுகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் அமோஷ் ஜே கொஸ்டெய்ன் கடந்த மாத நடுப்பகுதயில் (17, 18 ஆம் திகதிகளில்) இஸ்ரேலுக்கும் லெபனானனுக்கும் நேரில் விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸுக்கு விஜயம் செய்த இவர், அந்நாட்டின் லெபனானுக்கான விசேட பிரதிநிதியுடன் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாஹ்வும் முழு அளவிலான யுத்தத்தைத் தவிர்ப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு ‘லெபனான், இஸ்ரேலின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு குறிப்பாக ஆபத்தான வளர்ச்சியை உருவாக்கும் ஒரு மோதலைத் தடுப்பதற்கான முழுமையான தேவையை சுட்டிக்காட்டியுள்ளதோடு, அனைத்து தரப்பினரும் இராஜதந்திர தீர்வை நோக்கி விரைவாக செல்ல வேண்டியதன் அவசரத்தையும் எடுத்துக்கூறியுள்ளதாக இஸ்ரேலிலுள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய இராணுவ ஜெனரல்கள் காஸாவில் எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வுடன் ஒரு பெரிய மோதலுக்கு படைகளைத் தயார்படுத்துவதற்கும் காஸாவில் ஹமாஸுடன் போர் நிறுத்தம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளதாக ‘நியோர்க் ரைம்ஸ்’ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் யுத்தநிறுத்தத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை ஹமாஸ் அறிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலும் சமரசப் பேச்சுக்களுக்கான விருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அதேநேரம் கடந்த மாதப் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்ட்டின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். அப்பேச்சுவார்த்தைகளின் போது ஹிஸ்புல்லாவுடன் முழு அளவிலான யுத்தத்திற்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்வதோடு இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தப்பட்டது.
இப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், ‘வடக்கு எல்லையில் நீடித்த அமைதியை மீட்டெடுக்கவும், இஸ்ரேல்-_ லெபனான் எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகத் திரும்பவும் வழிவகை செய்யும் இராஜதந்திர ஒப்பந்தத்தை அவசரமாக மேற்கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
காஸா மீதான யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்த மறுநாள் முதலே அந்த யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல்களை முன்னெடுக்கிறது. இரு தரப்புக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் லெபனான், இஸ்ரேல் எல்லையில் முழு அளவிலான யுத்தத்திற்கான முயற்சிகளும் அதனையொட்டிய பதற்றங்களும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் இரு தரப்பு மோதல் ஆரம்பமானது முதல் இற்றை வரையும் 7400 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் 83 சதவீதத்தை அதாவது 6,142 தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது, இத்தாக்குதல்களினால் லெபனானில் சுமார் 543 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 92 பேர் சிவிலியன்களாவர். ஏனையவர்கள் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்களாவர். அதேநேரம் ஹிஸ்புல்லாஹ்வும் பிற ஆயுதக் குழுக்களும் முன்னெடுத்த 1,258 தாக்குதல்களினால் சுமார் 21 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு இந்த இரு தரப்பு மோதலால் 60 ஆயிரம் இஸ்ரேலியர்களும் ஒரு இலட்சம் லெபனானியர்களும் எல்லைப்பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த மோதலால் வடக்கு இஸ்ரேல் பகுதியில், சுமார் 2,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் வரி அதிகார சபை அறிவித்துள்ள அதேநேரம், லெபனான் எல்லைப்பகுதியில் சுமார் 2,700 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு 22,000 மேலும் சேதமடைந்துள்ளதாக தெற்கு லெபனானுக்கான கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட பதற்றத்தின் பின்புலத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், மற்றொரு யுத்தம் தோற்றம் பெறுவதைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். காஸா யுத்தம் காரணமாக உலகம் பெரிதும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் உடனான போரை உலகம் ஏற்றுக்கொள்ளாது என்றுள்ளார். இது இஸ்ரேல் – ஹிஸ்புல்லாஹ் மோதலின் தீவிரத்தை எடுத்துக்காட்டக்கூடியதாக உள்ளது.
இரு தரப்பினரும் எல்லைப்பகுதியில் தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வந்த நிலையில் லெபனானுக்கு எதிரான பரந்த அளவிலான தாக்குதலுக்கான செயல்பாட்டுத் திட்டங்களுக்கு டெல் அவிவ் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் முழு அளவிலான யுத்தத்திற்கு செல்வதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்ற வண்ணமுள்ளன. லெபனானின் எல்லையில் யுத்த பயிற்சிகளையும் இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. படைப் பிரிவுகளையும் ஆயுத தளபாடங்களையும் வடக்கு நோக்கி இஸ்ரேல் நகர்த்தி வருகிறது.
இவ்வாறான சூழலில் இஸ்ரேலின் ஹைபா துறைமுகம், எண்ணெய்க் களஞ்சியசாலை உள்ளிட்ட இடங்களின் ட்ரோன் வீடியோ காட்சிகளை ஏற்கனவே வெளியிட்ட ஹிஸ்புல்லாஹ் மற்றொரு முக்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இவ்வீடியோவில் இஸ்ரேலின் யுத்த விமானங்கள் தரித்து நிற்கும் இரு இடங்கள், அணுவாயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் இஸ்ரேலுக்கு ஏற்கனவே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவ மற்றும் ரிசர்வ் வீரர்கள் ஒய்வு பெறும் வயதெல்லையை நீடிக்கும் சட்டத்திற்கு இஸ்ரேலிய பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள சட்டப்படி, ரிசர்வ் வீரர்கள் 40 வயது வரையிலும் ரிசர்வ் அதிகாரிகள் 45 வயது வரையிலும் இராணுவத்தில் கடமையாற்ற வேண்டும். தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள சட்டப்படி, ரிசர்வ் அதிகாரிகளுக்கு 41 வயது வரையிலும், ரிசர்வ் அதிகாரிகளுக்கு 46 வயது வரையிலும் சேவை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், லெபனானிலுள்ள வெளிநாட்டு பிரஜைகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக லெபனானிலுள்ள தமது சுமார் 20 ஆயிரம் பிரஜைகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கனடா முன்னெடுத்துள்ள அதேநேரம், குவைத் லெபனானிலுள்ள தமது பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுள்ளதோடு தற்போது அங்கு உருவாகிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு லெபனானுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க பிரஜைகளோ 86 ஆயிரம் பேர் லெபனானில் உள்ளனர். அவர்களை தெற்குக்கு செல்ல வேண்டாமென அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. அத்தோடு தம் குடிமக்களதும் பிற பணியாளர்களதும் சாத்தியமான வெளியேற்றங்களுக்காக யு.எஸ்.எஸ் வாஸ்ப், ஒரு ஆம்பிபியஸ் தாக்குதல் கப்பல் மற்றும் மத்திய தரைக்கடற் பிராந்தியத்திலுள்ள மற்ற அமெரிக்க கடற்படை கப்பல்களுடன் இணைந்து தயாராகி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் பொருட்டு அமெரிக்கா யுத்தக் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, நெதர்லாந்து, ஜோர்தான், சவுதி அரேபியா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் தங்கள் நாட்டினரை லெபனானில் இருந்து வெளியேறுமாறும் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் லெபனான் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா பௌ ஹபீப், போரைத் தொடங்கப் போவதாக அச்சுறுத்தும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலினதும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வினதும் நகர்வுகளால் ஏற்பட்டுவரும் பதற்றமான சூழலில் ஹமாஸ் யுத்தநிறுத்தத்திற்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தி இருப்பது உலகுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில் ஹிஸ்புல்லாஹ் உட்பட மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை முன்னெடுக்கும் ஆயுதக்குழுக்கள் காஸா மீதான யுத்தத்தையே வலியுறுத்தி வருகின்றன. அதனால் காஸாவில் யுத்தநிறுத்தம் ஏற்படும் போது ஹிஸ்புல்லாஹ்வின் தானாகவே நிறுத்தப்பட்டுவிடும். அப்போது லெபனான் – இஸ்ரேல் எல்லையில் யுத்த முஸ்தீபுக்கு இடமிருக்காது. அதுவே சர்வதேச போரியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மர்லின் மரிக்கார்