அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. பரபரப்புகள்… குழப்பங்கள்… சர்ச்சைகள்…. என்று கடந்து சென்ற இம்முறை உலகக் கிண்ணத்தின் முக்கிய சாதனைகள் பற்றி பார்ப்போம்,
* இம்முறை உலகக் கிண்ணத்தின் ஒட்டுமொத்த ஓட்ட வீதம் 7.09. இது டி20 உலகக் கிண்ணத் தொடர்களில் மிகக் குறைவான ஓட்ட வீதமாகும். முன்னர் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த தொடரில் பதிவான ஒட்டுமொத்த ஓட்ட வீதமான 7.43 ஆமை வேகத்தில் இருந்தது.
* தொடரில் மொத்தமான 517 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. அதாவது 500க்கும் அதிகமான சிக்ஸர்கள் பெறப்பட்ட முதல் உலகக் கிண்ணத் தொடராக இது சாதனை படைத்தது. முந்தைய அதிகபட்ச சிக்ஸர்கள் 2021 தொடரில் பதிவானது. அது 405 ஆகும். அதாவது 21.35 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் பெறப்பட்டிருக்கிறது. இதுவும் அதிகமாகும்.
* டி20 உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் எந்தப் போட்டியிலும் தோல்வியுறாது கிண்ணத்தை வென்ற முதல் அணியாக இந்தியா சாதனை படைத்தது. இந்தியா ஆடிய எட்டுப் போட்டிகளிலும் வெற்றியீட்டியதோடு கனடாவுக்கு எதிரான போட்டி மழை காரணமாக நாணய சுழற்சி கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
* இம்முறை உலகக் கிண்ணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று இந்தத் தொடரில் ஒருவர் கூட சதம் பெறவில்லை. இதற்கு முன்னர் 2009 உலகக் கிண்ணத்திலேயே இவ்வாறு நிகழ்ந்தது. 2009 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அரையிறுதியில் திலகரத்ன டில்ஷான் ஆட்டமிழக்காது பெற்ற 96 ஓட்டங்களுமே தொடரில் அதிகமாகும். இம்முறை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிகொலஸ் பூரன் பெற்ற 98 ஓட்டங்களுமே அதிகூடியது.
* 2024 தொடரில் மொத்தம் 19 தடவைகள் பந்துவீச்சாளர் ஒருவர் நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தினர். டி20 உலகக் கிண்ணத் தொடர்களில் இதுவே அதிகம். 2021 தொடரில் 14 தடவைகள் இவ்வாறு நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை முறியடிக்கப்பட்டது.
* இந்த உலகக் கிண்ணத்தில் ஜெஸ்பிரிட் பூம்ரா ஓவர் ஒன்றுக்கு சராசரியாக 4.17 ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார். உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் வீரர் ஒருவர் 100க்கு மேல் பந்துகளை வீசிய நிலையில் இதுவே சிறந்ததாகும். இம்முறை தொடரில் பூம்ரா ஆடிய எட்டுப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விட்டுக்கொடுத்த 29 ஓட்டங்களுமே அதிகமாகும்.
* பூம்ரா இம்முறை உலகக் கிண்ணத்தில் பெற்ற விக்கெட்டுகளை மற்றும் விட்டுக்கொடுத்த பௌண்டரிகள் இடையில் 3 இலக்கங்களே வித்தியாசம் உள்ளன. அதாவது அவர் 29.4 ஓவர்கள் பந்து வீசி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இரண்டு சிக்ஸர்கள் உட்பட 12 பௌண்டரிகளையே விட்டுக்கொடுத்தார்.
* இம்முறை உலகக் கிண்ணத்தில் பூம்ராதான் தொடர் நாயகன் விருதை வென்றார். அதாவது டி20 உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு ஓட்டம் கூட துடுப்பினால் பெறாது தொடர் நாயகன் விருதை வென்ற முதல் வீரராக அவர் பதிவானார். இந்தத் தொடரில் அவர் ஒரு முறை பாகிஸ்தானுக்கு எதிராக துடுப்பெடுத்தாட வந்தபோது முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். எவ்வாறாயினும் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கிளன் மெக்ராத் (2007) மற்றும் மிச்சல் ஸ்டார்க் (2015) இவ்வாறு தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார்கள்.
* ரிஷாப் பண்ட் விக்கெட் காப்பாளராக இம்முறை தொடரில் மொத்த 14 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கிறார். அவர் 13 பிடியெடுப்புகள் மற்றும் ஒரு ஸ்டம்ப் செய்தார். அதாவது விக்கெட் காப்பாளராக அல்லது களத்தடுப்பாளராக உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் இத்தனை ஆட்டமிழப்புகளை இதற்கு முன்னர் செய்ததில்லை.
* இம்மறை உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் பஸால்ஹக் பரூக்கி தலா 17 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் 2021 உலகக் கிண்ணத்தில் வனிந்து ஹசரங்க பெற்ற 16 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்தனர்.
* 20 ஓவர்கள் முழுமையாக ஆடப்பட்டு 120 அல்லது அதற்கு குறைவான ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் 5 முறை அணிகள் வெற்றியீட்டியுள்ளன. இது இம்முறை உலகக் கிண்ணத்தின் விசேட அம்சமாகும். உலகக் கிண்ணம் ஒன்றில் இதற்கு முன்னர் இவ்வாறு நிகழ்ந்தது ஒரே ஒரு முறை தான். அது 2014 தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணி 119 ஓட்டங்களுக்கே சுரண்ட நிலையில் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.
* ரோஹித் ஷர்மா உலகக் கிண்ணத்தை வீரராகவும் (2007), அணித் தலைவராகவும் (2024) வெற்றியீட்டினார். எனினும் டெரன் சமி 2012 மற்றும் 2016 இல் அணித் தலைவராக இரு தடவைகள் கிண்ணத்தை வென்றதோடு மேற்கிந்திய திவுகளின் ஏழு வீரர்கள் இந்த இரு வெற்றிகளிலும் அணியில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் மார்லன் சாமுவேல்ஸ், கிறிஸ் கெயில், ஜோன்சன் சார்ல்ஸ், ட்வாயன் பிராவோ, சாமுவேல் பத்ரி, அன்ட்ரே ரசல் மற்றும் தினேஷ் ராம்தின் ஆகியோராவர்.
* இந்த உலகக் கிண்ணத்தில் முந்தை அதிகபட்ச ஓட்டமற்ற ஓவர்களை விட 109.52 வீதம் அதிகரித்துள்ளது. இந்த உலகக் கிண்ணத்தில் முழுமையாக நடைபெற்ற 52 போட்டிகளிலும் மொத்தமான 44 ஓட்டமற்ற ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. முன்னர் 2012 தொடரில் 27 போட்டிகளில் 21 ஓட்டமற்ற ஓவர்கள் வீசப்பட்டதே அதிகமாகும்.
* உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விராட் கொஹ்லி 48 பந்துகளிலும் ஹென்ரிச் கிளாசன் 23 பந்துகளிலும் அரைச்சதம் பெற்றனர். இவர்களுக்கு இடையே 25 பந்துகள் இடைவெளி உள்ளன. இதில் கிளாசனின் அரைச்சதம் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பெறப்பட்ட அதிவேக அரைச்சதமாகும். மறுபுறம் கொஹ்லி பெற்ற அரைச்சதம் அவரது டி20 வாழ்வில் பெற்ற மந்தமான அரைச்சதமாக இருந்தது.
* ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கிண்ணத்தில் 5 இல் வென்று 3 போட்டிகளில் தோற்றது. அந்த அணி வெற்றியீட்டிய ஐந்து போட்டிகளிலும் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்தது. இவ்வாறு அதிகமுறை எதிரணியை சாய்த்ததில் 2010 தொடரில் அவுஸ்திரேலியா படைத்த சாதனையை சமன் செய்தது. மறுபுறம் ஆப்கான் தோற்ற மூன்று போட்டிகளிலும் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதுவும் டி20 உலகக் கிண்ணத்தில் அதிகமாகும்.
* நியூசிலாந்து மற்றும் உகண்டா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு சிக்ஸர் கூட பெறப்படவில்லை. டி20 உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் ஒரு சிக்ஸர் கூட பெறப்படாத மூன்றாவது சந்தர்ப்பமாக இது உள்ளது. 2012 இல் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் 2022 இல் பேர்த்தில் நடந்த நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூடப் பெறப்படவில்லை.
* இம்முறை உலகக் கிண்ணத்தில் பப்புவா நியூகினி மற்றும் ஓமான் அணிகள் ஒரு புள்ளியைக் கூட பெறவில்லை. இந்த இரண்டு அணிகளும் நான்கு போட்டிகளில் ஆடிய நிலையிலேயே வெற்றிபெறத் தவறியது. இது டி20 உலகக் கிண்ணத்தில் வெற்றி இன்றி ஆடப்பட்ட அதிக போட்டிகளாக இருந்தன. எனினும் ஓமான் அணி தனது முதல் போட்டியில் நமிபியாவை எதிர்கொண்டபோது அந்தப் போட்டி சுப்பர் ஓவர் வரை சென்றது.
* உலகக் கிண்ணத்தில் ரிஷப் பண்ட் மொத்தமாக 171 ஓட்டங்களை பெற்றதோடு இது தொடர் ஒன்றில் ஒரு அரைச்சதம் கூட பெறாமல் சேர்க்கப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டமாக இருந்தது. 2014 தொடரில் பங்களாதேஷ் அணிக்காக அனாமுல் ஹக் அரைச்சதம் இன்றி மொத்தமாக 184 ஓட்டங்களை பெற்றதே சாதனையாக உள்ளது. ரிஷப் பண்டின் அதிகூடிய ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற 42 ஓட்டங்களாகும்.
* இந்த உலகக் கிண்ணத்தில் முஹமது ஆமிர் 96 பந்துகளை வீசி ஒரு சிக்ஸரைக் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இது சிக்ஸர் விட்டுக்கொடுக்காமல் வீசப்பட்ட அதிக பந்துகளாகும். அதாவது இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களில் குறைந்தது பத்து ஓவர்கள் வீசப்பட்டு ஒரு சிக்ஸர் கூட விட்டுக்கொடுக்காத முதல் பந்துவீச்சாளராக அவர் பதிவானார். 2012 தொடரில் அவர் ஒரு சிக்ஸர் கூட விட்டுக்கொடுக்காது மொத்தம் 139 பந்துகளை வீசினார். இது உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக பந்துகள் வீசி ஒரு சிக்ஸர் கூட விட்டுக்கொடுக்காத பந்துவீச்சாளர் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2009 தொடரில் உமர் குல் 147 பந்துகள் வீசி ஒரு சிக்ஸர் கூட விட்டுக்கொடுக்காதது இதன் முதலிடத்தில் உள்ளது.
* இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வரை கொஹ்லி ஆடிய முதல் ஏழு போட்டிகளிலும் மொத்தமாக 2 பௌண்டரிகளையே பெற்றார். எனினும் இறுதிப் போட்டியின் முதல் ஓவரிலேயே அவர் இந்த எண்ணிக்கையைத் தாண்டினார். மார்கோ ஜேன்சன் வீசிய அந்த ஓவரில் கொஹ்லி மூன்று பௌண்டரிகளைப் பெற்றார்.