தாய் என்ற உறவு உன்னதமானது மட்டுமல்ல; மிகவும் வித்தியாசமானதும் தான்!
பால் நினைந்தூட்டுபவள் அல்லவா அவள்! தன் பிள்ளைகளின் ஒவ்வொரு சிறு அசைவையும் கூட அவளால் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடியுமே.
வஸீலா இரண்டு மூன்று நாட்களாகவே அவதானித்துக் கொண்டே இருக்கிறாள்.
வஸீலாவின் இரண்டு மகள்மாரும் ஏதோ தங்களுக்குள் கதைத்துக் கொள்வதும் தொலைபேசியில் யாருடனோ கதைத்துக் கொள்வதும் அலுமாரியைத் திறந்து நல்ல உடைகளை வெளியே எடுத்துப் பார்ப்பதும், உடுத்திப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருப்பதை
வஸீலா அவதானித்துக் கொண்டிருந்தாளே தவிர ஒன்றும் கேட்கவில்லை. என்னதான் அறைக்குள் வேஷமிட்டாலும் அம்பலத்தில் வந்து தானே ஆட வேண்டும்? மற்றது தன் பிள்ளைகள் தவறான முடிவுகளை எடுக்க மாட்டார்கள் என்ற நல்ல நம்பிக்கையும் உண்டு.
இன்னும் மூன்று நாட்களில் வஸீலாவின் மூத்த சகோதரன் காமிலின் மகள் சுரையாவின் திருமணம். அவரது மூத்த மகள் குடும்பம், அண்டை அயலார் என்று எல்லோருக்குமே அழைப்பு.
அந்த திருமணம் நிச்சயமானதிலிருந்தே வஸீலாவின் மனதுக்குள் பெரும் குமைச்சல். வெளியே சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத வேதனை.
குடும்பத்தோடு போகவேண்டிய நிகழ்வு. வஸீலாவுக்கு மகள்மாரிடம் கேட்டுப் பார்ப்போம் என்ற எண்ணம் எத்தனையோ முறை வந்தாலும் கேட்கவிடாது ஏதோ தடுத்தது.
நஸ்ரின், ரிஸாயா இருவருமே அடுத்தடுத்த வருடங்களில் பிறந்தவர்கள். பார்த்தால் இரட்டைப் பிள்ளைகள் போலவே இருப்பார்கள். ஒருவர் விஞ்ஞானப் பட்டதாரி மற்றவர் வர்த்தகப் பட்டதாரி. ஆனால் அரசு மிகவும் பிரயத்தனத்தின் பின் ஆரம்பக்கல்வி ஆசிரியைகளாகவே நியமனம் கொடுத்துள்ளது.
என்ன செய்வது? கிடைத்ததைச் சிறப்பாகச் செய்வோம் என்ற எண்ணத்தில் இருவரும் செய்து கொண்டிருக்கின்றனர். மனப்பூர்வமான திருப்தியுடன்.
பல்கலையிலிருந்து வெளியேறியதில் இருந்தே வஸீலாவும் கணவர் இஜாசும் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைக்க முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர்.
திருமணம் பேசி முடிப்பது இப்போதெல்லாம் இலேசான காரியமாகவா இருக்கின்றது?
சில மாப்பிள்ளை வீட்டார் இருபது வயதுக்குள் பெண் தேடுகின்றனர். வேறு சிலரோ வரப்போகிற மருமகளின் உழைப்பில் தம் மகன் உல்லாசமாக வாழலாம் என்று நினைக்கின்றனர். பெரிதாக சீதனம் எடுக்காது. தொழில் செய்யும் பெண்ணை எடுத்தால் காலத்துக்கும் வருமானம் வரும் என்ற தீர்க்க தரிசனத்துடன் உள்ளனர்.
தங்கள் மகன்மார் அதிகம் படித்ததில்லை எனவே பட்டதாரி பிள்ளைகள் சரிவரமாட்டார்கள் என்று ஒதுங்குபவர் சிலர்.
“எங்கள் மகன் நல்ல பிஸ்னஸ் செய்கிறார். உங்கள் மகள் வேலையை ரிஸைன் பண்ணினால் எங்களுக்கு விருப்பம்” என்று கூறியவர்களும் உள்ளனர்.
இத்யாதி இத்யாதி பிரச்சினைகளால் நஸ்ரினதும், ரிஸாயாவினதும் திருமணம் தாமதமாகிக் கொண்டே போகிறது.
அண்மைக் காலமாக நஸ்ரினும், ரிஸாயாவும் மாத்திரமல்ல, வஸீலாவும், இஜாசும் கூட வைபவங்களுக்குப் போவதை முடிந்தளவு தவிர்த்துக் கொண்டே வருகின்றனர். தாயும் தகப்பனும் செல்லும் பல வைபவங்களுக்கு மகள்மார் வருவதை விரும்பவே இல்லை.
“நரம்பில்லாத நாக்கு எதை வேண்டுமென்றாலும் பேசும்” என்று சொல்லி வைத்தவர்களின் வாயில் கிலோ கணக்கில் சீனியைப் போட வேண்டும்.
“புள்ளைக ரெண்டு பேருமே நல்லா சம்பளம் எடுக்குதுக கலியாணம் செய்து வச்சா கஷ்டமாப் போயிடுமே” என்ற வார்த்தை அம்புகளால் நொந்து நைந்து போவார்கள் அந்த பெற்றோர்.
வேலை செய்யும் இடத்திலும் பல வார்த்தை வதைகள், நஸ்ரினுடன் வேலை செய்யும் ரஹ்மா டீச்சர் ஒரு நாள் கூறிய வார்த்தை அடியால் அடுத்தநாள் பாடசாலைக்கே போகவில்லை. எல்லோரும் ஆசிரியர் ஓய்வறையில் இருக்கும் போது கதையோடு கதையாக ரஹ்மா டீச்சர் சொன்னார்.
“காலம் ரொம்ப மோசமாயிடிச்சி சிலர் ஏழு குதிரைகள் பூட்டிய தேரிலே ஏறி இராஜகுமாரன் மாப்பிள்ளையாக வருவார் எண்டுகனா காணுறாங்க கடைசில ஓட்ட சட்டியிலதான் கையை வைக்கப் போறாங்க”
இந்த வார்த்தைகளுக்கு ஆதார பூர்வமான சான்றுகளையும் இரண்டு மூன்று பேர் முன்வைக்க நஸ்ரின் பேசாமல் இருந்தாள். ஆனால் இந்த வார்த்தைகளால் அவளது இதயம் நொருங்கி சுக்கு நூறாகி இரத்தத்தைக் கொட்டியது.
படித்தவர்கள் என்ற சிறப்புடன் வாழ்பவர்கள் – படிப்பித்துக் கொடுப்பவர்கள், தான் இப்படியென்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்!
இத்தகைய சொல்லடிகளைத் தாங்க முடியாதவர்களாகித்தான் நஸ்ரினும் ரிஸாயாவும் பல முக்கியமான வைபவங்களுக்கே போகாது தவிர்த்து வந்தனர். வஸீலாவும் இஜாசைம் கூடத்தான்.
இம்முறை வஸீலாவின் மூத்த சகோதரன் காமிலின் வீட்டில் அவரது மகளுக்குத் திருமணம் ஆச்சர்யமாக நஸ்ரினும், ரிஸாயாவும் புறப்படுகின்றனர். வஸீலாவுக்கு விளங்கியது மனதுக்குள் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“உம்மா நாங்க இண்டைக்கு ஸ்கூல் முடிஞ்சி வர்ரபோது கொஞ்சம் கடைக்குப் பொயிட்டு வருவோம் கொஞ்சம் சொனங்கும் மாமா வீட்டு கலியாணத்துக்குப் போக கொஞ்சம் சாமான் வாங்கனும்.”
வஸீலா முழுமையாகவே மகிழ்ந்து போனாள், எங்கே இவர்கள் வரமாட்டார்களோ என்று குமைந்து கொண்டிருந்தவளாயிற்றே!
திருமண வீடு கலகலத்தது. நஸ்ரினும் ரிஸாயாவும் வழமையைவிட மிகமிக அழகாகவும் நேர்த்தியாகவும் கலகலப்பாகவும் வந்தது பெற்றோருக்கு அளவற்ற ஆனந்தத்தையே தந்தது
சாப்பாடு இன்னும் வைக்கவில்லை. சகோதரிகளின் கண்கள் யார் யாரையோ தேடிக் கொண்டிருந்தன.
ரிஸாயா தான் சொன்னாள் “அங்க பாருங்க தொங்கல் மேசையில் உட்கார்ந்திரிக்கிறாங்க ரெண்டு மூணு கதிரைகளும் இரிக்கி வாங்க போவோம்”
வஸீலா யார் யாரோ உறவினர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததால் இவர்களைக் கவனிக்கவில்லை.
அவர்கள் குறிப்பிட்ட மேசையில் சித்தி மாமியும், சல்ஹா பெரியம்மாவும், ரஸீனா தாத்தாவும் இவர்களே முந்திக் கொண்டு “ஸலாம்” கூறியவர்களாக இரண்டு கதிரைகளை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டனர்.
இந்த மூவர் கூட்டணிதான் அதிகமதிகமாக மற்றவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைத்து சொல்லம்புகளால் வதைவதையென்று வதைத்து இன்பம் காணுபவர்கள்.
ரிஸாயா “எப்படி சித்திமாமி சல்ஹா பெரியம்மா, ரஸீனா தாத்தா எல்லாரும் சொகமா?” என்று கதையைத் தொடங்கினாள்.
“இரிக்கிறோம் இரிக்கிறோம்”
“ஏன் சித்தி மாமி இண்டைக்கு ஏன் சலிப்பாக இரிக்கிறீங்க அவசரமான கலியாணம் முடிச்சி வச்சி ஊரெல்லாம் பெருமையா பேசித் திரிஞ்ச ஒங்கட மகள் கையில புள்ளையோட டிவோஸாகி வீட்டுக்கு வந்துட்டாளாமே பாவம் மாமி” நஸரின் முதல் பாணத்தை விட்டாள்.
“சல்ஹா பெரியம்மா நீங்களே சொல்லுங்க மத்தவங்கட வாழ்க்கையைப் பத்தித் தேடித் திரியுற சித்தி மாமி தன்ட மகன நல்லா யோசிச்சி தானே கலியாணம் செய்து கொடுத்திருக்கணும் இல்லையா?”
“நெசந்தான் நெசந்தான்” ரஸீனா தாத்தாவும் ஒத்து ஊதினார்.
“இல்ல இது அவட விதி. அத எங்களால மாத்த முடியுமா?” சித்தி மாமியின் சமாதானம் அது.
“ரஸீனா தாத்தா நாங்க இன்னமும் கலியாணம் முடிக்காம இரிக்கிறோம் எண்டு கொஞ்சம் பேருக்கு சரியான கவலை பாருங்க ரஸீனா தாத்தா எங்களுக்குப் பொருத்தமானவங்களத்தானே நாங்க கலியாணம் செய்யனும் இல்லையா? எங்கட உம்மா வாப்பா நாங்க சம்பாதிக்கிறதால கலியாணம் செய்து வைக்காம இரிக்கிறாங்க எண்டும் கதைக்கிறாங்களே நீங்களே சொல்லுங்க இது சரியா?”
“இல்ல அப்படித்தான் நாங்க சம்பாதித்துக் கொடுத்தாலும் மத்தவங்க ஏன் கவலப்படனும் எங்கள எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தவங்க அவங்க இல்லையா ரஸீனா தாத்தா” என்றவளாய் ரிஸாயா ரஸீனா தாத்தாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அந்த முகம் பார்க்க சகிக்காமல் மாறிக் கொண்டிருந்தது. நஸ்ரின் கூறிமுடிக்க, திட்டமிட்டபடியே அங்கே வந்து சேர்ந்தாள் மரீனா. கதிரையில் உட்கார்ந்தவளாய் “ஹாய் நஸ்ரின், ரிஸாயா நீங்க ரெண்டு பேரும் எங்கே வரமாட்டீங்களோ என்று நெனைச்சேன்” என்றாள்.
மரீனா பக்கத்து மாவட்ட வைத்தியசாலையில் பிரதம நர்ஸ். அந்த ஊரிலிருந்து முதன் முதலில் நர்ஸாகியவள்…அப்போது அவளும் அவளது குடும்பத்தினரும் கேட்ட அபவாத வார்த்தைகள் அப்பப்பா
“சீ…சீ… நேர்ஸ் வேலைக்கா போவாங்க…அசிங்கமான வேல…ராவிராவா டொக்டர்மார்களுடன் வேல செய்யணும் கட்டகவுன் உடுக்கணும்… அத நெனக்கவே முடியல்ல…” இவை மாத்திரமா…?
ஆனால், மரீனாவிடம் அவசரத்துக்கு ஓடிவந்து வைத்திய உதவிகளைப் பெற்றுக் கொள்ள அவர்கள் தயங்கவில்லை. மரீனாவும் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தே வருகிறாள்.
இறைவனருளால் வைத்தியசாலை மருந்தாளரான ஹஸன் என்பவரைத் திருமணம் செய்து வளமாக வாழ்கிறாள்.
மரீனாவின் வருகையும் திட்டமிட்டதுதான். “இல்ல இல்ல எத்தனையோ பங்ஷனுக்கு வராமதான் இருந்தோம் பொறகு யோசிச்சோம் எங்கட கலியாணம் சொனங்குறத பத்தி மத்தவங்க கதைக்கிறத பாத்து நாங்க ஏன் கவலப்படணும் வேலயத்தவங்கட கதைகளுக்காக நாங்க ஏன் மனம் சோரணும் எண்டு நெனைச்சுத்தான் வந்தோம்” நஸ்ரின் சொல்லும் போதே அவர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த மூவரது முகங்களும் அஷ்ட கோணலாகின.
“அதுதானே, என்னப்பத்தி இங்க கொஞ்சம் பேர் கதைக்காத கதையா ஒரு பெண் டொக்டரானா புகழ்றாங்க அவங்களே நேர்ஸ்களை ஏசுறாங்க அவமானமாம் ஹராமாம் எங்க படிச்சாங்களோ கார் ஓட்டினா புகழ்றாங்க பைசிக்கல் ஓட்டினா கேவலமாம் என்னடா இது” மரீனா அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
சித்திமாமி, சல்ஹா பெரியம்மா, ரஸீனா தாத்தா மூவரும் பதில் பேச முடியாதிருந்தனர். இப்படி ஒரு தாக்குதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
ரியாஸா அழகாகச் சொன்னாள்“ஏன் மரீனா சிஸ்டர்… மத்தவங்களப்பத்தி புறம் கதைக்கிறவங்க இறந்தவரின் மாமிசத்தைச் சாப்பிடுபவர்கள்” என்ற நபிமொழியை இங்கே மிச்சம்பேருக்கு சொல்லிக் கொடுக்கணும்” என்று கூறினாள்.
“ரிஸாயா நஸ்ரின் யாரும் ஒங்கட கலியாணம் பத்தி பேசித் திரியிறாங்க எண்டு நீங்களோ உம்மா வாப்பாவோ கவலப்பட வேணாம் என்னைப் பத்தியும் இப்படித்தான் பேசினாங்க இப்ப அவங்கவட புள்ளைகள் தான் கஷ்டப்படுறாங்க. பாவம்; இவங்கட புள்ளைகள். சரி சரி வாங்க நாங்க சாப்பிடுவோம் பங்ஷனுக்கு வராம இனி இரிக்காதீங்க என்ன நான் சொல்றது சரியா?” மரீனா கூறியவளாக எழும்பினாள் நஸ்ரினும், ரிஸாயாவும் கூடவே எழுந்தனர்.
“மூவரும் சேர்ந்தபடி சல்ஹா பெரியம்மா, சித்திமாமி, ரஸீனா தாத்தா ஒன்னும் யோசிக்காதீங்க நல்லா சாப்பிடுங்க இன்ஷா அல்லாஹ் இனி வரும் பங்ஷன்களுக்கும் நாங்க வருவோம். நீங்களும் வாங்க” என்று கூறியவர்களாக நகர்ந்தனர்.
குட்டக் குட்டக் குனிந்தே போகும் மடமைத்தனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே.
நயீமா சித்தீக்