பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயகம் என்று அலங்கரிக்கப்படும் பிரித்தானியாவில் 2024 க்கான தேர்தல் நிறைவுற்று முடிவுகள் வெளியாகி புதிய பிரதமரும் ஆட்சியும் ஏற்பட்டுள்ளது. பழமைவாதக் (Conservative Party) கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஜனநாயகத்தின் பெயரால் பல பிரதமர்கள் பல அரசாங்கங்கள் என ஓரே கட்சிக்குள் இருந்து மாற்றமுறாத கட்சி அரசியலைக் கண்டு கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது. இறுதியாக பிரிட்டிஷ் இந்தியரான பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சி தற்போதைய ஆட்சிமாற்றத்திற்கு வழியமைத்துள்ளது. பிரிட்டன் ஒரு பாரம்பரிய ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் அதனிடம் தற்போதும் ஜனநாயகப் பண்புகள் அதிகம் உள்ளதென்ற கருத்தே அதிகம் காணப்படுகிறது.
பதவியை இராஜினாமாச் செய்வது, விட்டுக் கொடுப்பது, இன,மத, வர்க்க பிரதேச உணர்வுகளைக் கடந்து தேசத்திற்காக உழைப்பது என்பனவற்றைத் தனித்துவமானதாக கண்டுகொள்ள முடிகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டால் பதவியை விட்டு வெளியேறுதல் என்ற ஜனநாயகத்தின் உயர் இலட்சியங்களை தற்போதும் பிரிட்டனிலுள்ள அரசியல் தலைவர்கள் பின்பற்ற முயலுகின்றனர். இக்கட்டுரையும் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தொழில் கட்சியின் அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.
04.07.2024 நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிய போது தொழில் கட்சி 412 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. பழமைவாதக் கட்சி 121 ஆசனங்களையும் தராள ஜனநாயகக் கட்சி 71 ஆசனங்களையும் பெற்றதோடு ஏனைய கட்சிகள் சொற்ப ஆசனங்களையே பெற முடிந்தது. அதன் பிரகாரம் தொழில் கட்சியின் தலைமை கியர் ஸ்ராமர் மன்னர் சார்ள்ஸை பங்கிங்கம் மாளிகையில் சந்தித்து ஆட்சி உரிமையை உறுதிப்படுத்திக் கொண்டார். அவர் பிரதமர் இல்லத்திலிருந்து தனது உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார். அவரது உரையில் இது மாற்றத்திற்கான ஆரம்பம் எனவும் தொழில்கட்சி மக்களுக்கு சேவையாற்றும் ஆணையைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதார மாற்றங்களுக்கான அடிப்படையை புதிய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை அவரது உரையில் கண்டு கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது.
மறுபக்கத்தில் இஸ்ரேல்- பலஸ்தீன போர் அதிக முரண்பாட்டை தொழில் கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது. தொழில் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பைன் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்ததனால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவ்வாறே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனை வெளியேற்றிய தரப்பும் இத் தேர்தலில் கணிசமான வாக்கு விகிதாசாரத்தை அடைந்துள்ளது. இத்தகைய குழப்பங்களுக்கும் நெருக்கடிக்குள்ளுமே தொழில்கட்சி ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் அரசியலை விரிவாக தேடுவது அவசியமானது.
ஓன்று, தொழில்கட்சி தனித்துவமான பாரம்பரியம் ஒன்றைக் கடந்த காலத்தில் பின்பற்றியிருந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னரான காலத்தை கட்டமைத்ததில் தொழில்கட்சிக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தொழில் கட்சிக்கான கருத்தியல் பெறுமானத்தை படிப்படியாக இழக்கத் தொடங்கியது. பேபியன் சோஷலிஸ்டுகளின் மரபிலிருந்து தொழில் கட்சிகள் தோன்றிய போதும் அவை ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்திய தராண்மைவாத நவ-தாராண்மைவாத அரசுக்குள்ளேயே தன்னை வடிவமைத்துக் கொண்டன. அதன் நீட்சியாக பனிப்போருக்கு பின்னான உலக அரசியல் யுகத்திற்குள் மேலும் தொழிலாளர் கருத்தியல் சுருங்கிப் போனது. கார்ல் மாக்ஸினால் இனங்காணப்பட்ட இயந்திர யுகத்தின் வளர்ச்சி இறந்துபோன தொழிலாளரின் பங்களிப்பை உயிருள்ள தொழிலாளருக்கு நிகரானதாக கட்டமைத்திருந்தது.
அத்தகைய யுகத்திற்குள்ளேயே தொழில்கட்சிகளின் கருத்தியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மரபான யுகத்திற்குள் செயல்படும் தொழில் கட்சில்ல. பிரித்தானிய குடியேற்றத்தின் பிடியிலிருந்த நாடுகளின் விடுதலைக்கு தொழில் கட்சி பங்காற்றியது என்பதற்காக உலகத் தொழிலாளரின் கட்சியாகவோ பிரிட்டன் தொழிலாளரது கட்சியாகவோ கொள்வது கடினமாகும். அதுவும் தற்போதைய யுகத்தில் தொழில் கட்சியின் இருப்பும் பழமைவாதக் கட்சியின் இருப்பும் அதிக வெறுபாடுகளைக் கொண்டதல்ல.
இரண்டு, உலகளாவிய நவ-தாராண்மைவாத யுகத்திற்குள்ளேயே பிரிட்டனில் தொழில் கட்சி ஆட்சியை மீளவும் பிடித்துள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சியிலிருந்து துளிர்விடத் தொடங்கிய தாராண்மைவாத யுகம் பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் காலத்திலேயே பெருவளர்ச்சியடைந்தது. அதில் அரசியல் தலைவர்கள் என்ற அடிப்படையில் மார்கிரட் தட்சருக்கும், றொனால்ட் றேகனுக்கும் தனியான பங்கிருந்தது. ஏகாதிபத்தியத்தின் புதிய பரிமாணமாக அமைந்தாலும் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் மிக்கதாக அமைந்திருந்தது.
உலகளாவிய ரீதியில் அனேக மனிதர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடாக தராண்மைவாதம் பரிமாணம் பெற்றது. இதன் வளர்ச்சிக்குள்ளேயே 21 ஆம் நூற்றாண்டு மனித சமூகத்தின் இருப்பு உள்ளது. தனியார் யுகத்தின் இருப்பே நவ-தராண்மைவாதத்தின் கட்டுமானம்.
எனவே இதனை நிராகரித்துக் கொண்டு தொழில் கட்சியின் யுகம் எதனையும் மேற்கொள்ள முடியாது. அதன் வரைபுக்குள்ளாலேயே இயங்க வேண்டிய பொறுப்புடமையை தொழில் கட்சி கொண்டுள்ளது. தொழிலாளர் என்ற கருத்தியலைக் கொண்டிருக்காத தொழில் கட்சியாகவே பிரித்தானிய தொழில் கட்சி காணப்படுகிறது. அது ஒரு ஏகபோகத்தின் அடையாளமாகவே தெரிகிறது.
மூன்று, இஸ்ரேல்- பலஸ்தீன போர் தொடர்பில் தொழில் கட்சி தெளிவான நிலைப்பாட்டை, ஏற்கனவே தொழில் கட்சியின் முன்னாள் தலைவரை வெளியேற்றியதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். தொழில் கட்சியின் தலைமையையே தொழில் கட்சி இஸ்ரேலுக்காக, அகற்றியுள்ளதென்பது தொழில் கட்சியின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளப் போதுமானது.
இதிலிருந்தே ஈழத்தமிழர் தமது அரசியல் சார்ந்து தொழில் கட்சியுடன் உரையாடவோ ஆதரவை பெறவோ முடியுமா என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தமிழரை பிரித்தானியப் பிரஜையாகக் கொண்டாலும் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்கப்படும் உரிமையும் வாய்ப்புமே ஈழத்தமிழருக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது. இது பிரிட்டனின் ஏகாதிபத்தியக் கூட்டின் நலன்சார்ந்ததே அன்றி தனிப்பட்ட ஈழத்தமிழரது அரசியலுக்கானதல்ல. தொழில் கட்சியின் போக்கானது ஈழத்தமிழருக்கானதல்ல. அது பிரித்தானிய உள்ளடங்கலான ஏகாதிபத்தியங்களின் கூட்டுக்களின் நலன்சார்ந்தது. இதுவே மேற்குலகத்தின் ஜனநாயகம். இதனையே வெள்ளைத்தோல் ஜனநாயகம் என்று அழைப்பதுண்டு. யூதர்களுக்கு ஆதரவு வழங்குவதில் எப்போதும் பிரிட்டனில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து செயல்படும் மரபு காணப்படுகிறது. அத்தகைய மரபு தொழில்கட்சி காலத்திலும் மீறப்படவில்லை. தற்போதைய காலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அத்தகைய செயல்பாட்டையே தொழில் கட்சி கொண்டுள்ளது.
நான்கு, ஐரோப்பிய யூனியலிருந்து வெளியேறிய பிரிட்டனின் சூழலே தொழில் கட்சியின் ஆட்சிக்கு வழியமைத்தது. அதாவது கன்சர்வேட்டிவ் கட்சியின் இருப்பு அதிலிருந்தே நெருக்கடிக்கு உள்ளானது. பிரதமர்கள் பதவியை துறந்ததும். கட்சி நிலைகுலைந்ததும். ஐரோப்பிய யூனியனது பிரித்தானிய வெளியேற்றமானது ஜனநாயகத்தின் பிரதியாக அமைந்தாலும் அது முழுமையாக பிரிட்டன்- அமெரிக்க கூட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது ஒரு பொருளாதார இயங்குவிசையின் நகர்வாகவே அமைந்துள்ளது. அதில் ஐயர்லாந்து – ஐயரிஷ்_ பங்களிப்பும் பிரதானமானதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
அது மட்டுமல்லாது பிரிட்டிஷ் இந்தியரிடம் பிரித்தானியாவின் ஆட்சி போய்ச்சேர்ந்ததும் ஒரு காரணமாக தெரிகிறது. இதில் தொழில் கட்சியின் இத்தகைய வெற்றிக்கு ரிஷி சுனக்கின் ஆட்சிக்காலம் முக்கியமானதாகவே அமைந்துள்ளது. அதற்கான காரணம் ஆங்கிலேயரை ஒரு இந்தியா வம்சாவளியினன் ஆள்வதென்பதே அதன் உட்கிடக்கையாகும். அதன் பிரதிபலிப்பே தொழில் கட்சியின் வெற்றிக்கு பின்னாலுள்ள காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
எனவே தொழில் கட்சி எந்தவித யுகமாற்றத்தையும் தொழிலாளர் சார்ந்து ஏற்படுத்தக் கூடியதாக தெரியவில்லை. அதற்கான புறச்சூழலும் அகச்சூழலும் இல்லை என்பதே அடிப்படையானது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வடிவமாகவும் அதன் நீட்சியாகவும் அதன் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதிலிருந்தே ஆசிய, ஆபிரிக்க தேசங்களின் இன ஒடுக்குமுறைக்கான கேள்விகளும் தீர்வுகளும் அமையும். அதன் தீர்வு என்பது உலக ஏகாதிபத்தியங்களின் நலனுக்குள் தங்கியுள்ளது. அதில் ஒரு நாடாகவே பிரிட்டன் காணப்படுகிறது. அதன் ஆட்சியில் தொழில் கட்சி ஒரு பங்குதாரராக அமையவுள்ளது. இதிலிருந்து கொண்டே ஈழத்தமிழர் தமது அரசியல் அபிலாஷைகளை கட்டமைக்க வேண்டும். அல்லது புரிந்து கொள்ள வேண்டும்.