ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் 2 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் ஆற்றவிருக்கின்ற உரையைச் செவிமடுப்பதற்காக ஒட்டுமொத்த தேசமே காத்துக் கொண்டிருக்கின்றது எனலாம்.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவிருக்கின்றது. அந்த முதல்நாள் அமர்விலேயே ஜனாதிபதி நாளைமறுதினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருக்கின்றார்.
பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை குறுகிய காலத்துக்குள் மீளக்கட்டியெழுப்பியதன் மூலம், சர்வதேச அரங்கில் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைத்தவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் ஆற்றவிருக்கின்ற உரையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் போகின்றது.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளில் இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கும் இடையில் இம்மாதம் 26 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட இறுதி உடன்படிக்கை மற்றும் இலங்கைக்கும் சீனாவின் EXIM வங்கிக்குமிடையே இம்மாதம் 26 அன்று மேற்கொள்ளப்பட்ட இறுதி கடன் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பான தீர்மானம் நாளைமறுதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
இவ்விசேட பாராளுமன்ற அமர்வை 2ஆம், 3ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 02 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பிலான விவாதம் ஆரம்பமாகவிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதுடன், வாக்கெடுப்பும் நடத்தப்படுவது ஜனநாயகத்தின் வெளிப்பாடாகுமென்பதில் ஐயமில்லை.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைக் கவனத்தில் கொள்ளாமல் எதிரணியினர் செயற்பட்டு வருவதனால், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவ்விரு தினங்களிலும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து அரசுக்கு ஆதரவை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இரு தினங்களிலும் விவாதம் நடைபெற்ற பின்னர், 03ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவும் கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை, இலங்கை அரசாங்கமும் மற்றும் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியும் (EXIM Bank) கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதியை நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்குவதற்காகவே இந்தத் தீர்மானம் நாளைமறுதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வீழ்ச்சியுற்றிருந்த இலங்கைப் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது முன்னேற்ற நிலைமைக்குக் கொண்டுவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாடு எத்தகைய அவலநிலைமையில் இருந்தது என்பதை இவ்வேளையில் மக்கள் நினைவுபடுத்திப் பார்ப்பது முக்கியமாகும்.
ஒட்டுமொத்த தேசமே அன்று மூடப்பட்டவாறு கிடந்தது. எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் சகிதம் மக்கள் இரவுபகலாக நீண்ட கியூ வரிசையில் காத்துக் கிடந்தார்கள். சமையல் எரிவாயு கிடைக்கவில்லை. எரிபொருள் இல்லாததால் வாகனங்கள் இன்றி வீதிகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. எரிபொருள் கப்பல் எப்போது வருமென்று மக்கள் ஏங்கியிருந்தனர். தொழில் அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. டொலருக்காக எமது தாயகம் கையேந்த வேண்டியிருந்தது. ஏராளமான நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் தொழில் இழந்தனர்.
பணம் சம்பாதிப்பதற்கு வழியில்லாமல் போனதால் குடும்பங்கள் பட்டினியால் வாடின. ‘திவாலானது இலங்கை’ என்று சர்வதேசமே உறுதிப்படுத்தியது. பொருளாதாரம் மீள முடியாதவாறு பாதாளத்தில் வீழ்ந்ததால் ஆட்சியாளர்களே பதவி விலக வேண்டியேற்பட்டது.
‘கடலில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பல்’ போன்றிருந்த இலங்கைத் தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு அவ்வேளையில் எந்தவொரு அரசியல் தலைவருமே முன்வராத நிலையில், துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் நாட்டைப் பொறுப்பேற்று பொருளாதார மீட்சியை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவையென்று அன்று கூறியவர்கள் இன்று ‘ஐ.எம்.எப் வேண்டாம்’ என்று கூச்சலிடுகின்றனர். ஐ.எம்.எப் உதவி இன்றேல் உலகில் மீண்டெழ முடியாத தேசமாக இலங்கை சென்றிருக்குமென்பதை சிந்திக்கத் தெரிந்தோர் மட்டுமே அறிவர்.
கடந்த வாரம் புதன்கிழமை பிற்பகல் வரை, ‘பாரிஸ் கிளப்’ 52 பில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கி இலங்கைக்கு 48 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கான காலப்பகுதியை அறிவித்திருக்கின்றது. நாட்டை மீட்பதற்கான இந்த உதவிகளெல்லாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றல், ஆளுமை, அரசியல் அனுபவம் ஆகியவற்றுக்குக் கிடைத்த பலன்கள் ஆகும்.