Home » ரணிலுடன் இணையத் தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்

ரணிலுடன் இணையத் தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்

வார இறுதி கேள்வி

by Damith Pushpika
June 9, 2024 6:03 am 0 comment

நாட்டின் மொத்த வாக்குகளில் 3% வாக்குகளைப் பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற 50% வாக்குகளைப் பெறுவது எப்படி எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 2020 பொதுத் தேர்தலில் 2,48,435 வாக்குகளை மாத்திரம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமானதாக இருக்குமா என்பது சிலரால் எழுப்பப்படும் கேள்வி. இந்த இரண்டு கேள்விகளுமே இவ்வருட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்துவதுடன், இவ்வாறானதொரு நிலையில், பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் பிரச்சினை ஏதுமில்லாத பிரதான கட்சியாக சமகி ஜனபலவேகய மாத்திரமே இருந்தாலும், அதனாலும் இலகுவாக அதிக வாக்குகளை பெறமுடியுமா என்ற கேள்வி தொடர்பாக அறிவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்வதன் மூலமே உண்மையான நிலைமையை அடையாளம் காண முடியும்.

ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் புரிந்து கொள்ளக்கூடிய மிக நெருக்கமான முந்தைய தேர்தல்களாக 2018 இன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், 2019இன் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 இன் பாராளுன்றத் தேர்தல்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மாதாந்த அல்லது காலத்துக்கு காலம் கருத்துக்கணிப்பு வடிவில் தகவல்களை முன்வைக்கும் 2 நிறுவனங்கள் இந்நாட்டில் இயங்கி வருவதாகத் தெரிகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் முன்வைக்கும் கருத்துக் கணிப்புகளின்படி, ஜனதா விமுக்தி பெரமுன முன்னணியில் உள்ளது, சமகி ஜனபலவேகய இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த இரு தரப்பினரும் சமநிலையை எட்டியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் 1000க்கும் குறைவானவர்களிடம் இருந்தே தகவல்களைப் பெறுவதாகத் தெரிகிறது. ஆனால், இன்று பொதுமக்களின் கருத்துகளின்படி, இந்த இரண்டு கணக்கெடுப்பு அமைப்புகளும் வெளியிட்ட ஆய்வு அறிக்கைகள், உலக யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஆய்வுகள் என்று கூறலாம்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் முடிவுகளை ஆராயும் போது, ​​வாக்கெடுப்பு தொடர்பான விசேட நிலை காணப்படுகின்றது. சஜித் பிரேமதாச 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நின்றார். ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவராக இருந்த போதிலும், அப்போதைய அழுத்தங்கள் காரணமாக சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்புமனு கிடைத்தது. அந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கோட்டாபாய ராஜபக்ஷ 69,24,255 வாக்குகளைப் பெற்ற அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச 55,64,239 வாக்குகளையே பெற்றார். எனினும் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற மொத்த வாக்குகள் இருபத்தி எழு லட்சத்து எழுபத்தோராயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு மட்டுமே.

2019இல் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளுக்கும் 2020 இல் ஐக்கிய மக்கள சக்தி கட்சி பெற்ற வாக்குகளுக்கும் இடையிலான வித்தியாசம் இருபத்து ஏழு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்றி ஐம்பத்தைந்து வாக்குகள். இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் வாக்குகளை நீக்கி ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாகப் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது பத்தொன்பது லட்சம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இந்நிலைமையின்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன பெற்ற வாக்குகள் குறைவாக உள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற வாக்கு வீதமும் 22 வீதமே எனத் தெரிகிறது. அதன்படி, சமகி ஜனபலவேகயவும் 50% ஐ எட்டுவதற்கு தற்போதைய வாக்குகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரிக்க வேண்டும். இவ்வாறான நிலையில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு நாட்டின் கருத்தை அவ்வாறே பிரதிபலிக்கும் நிலையிலிருந்து இந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களின் நடத்தை வேறுபட்டிருப்பதைக் காணமுடியும். ஆனால் ஆய்வு நிறுவனங்களுக்கு அந்த யதார்த்தம் தெரியாததாலோ அல்லது கண்டுகொள்ளாமலே விடப்பட்டதாலோ சில சமயங்களில் உலக உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்வதாக தெரிகிறது. கட்சி பிளவுபட்டு பொதுத்தேர்தலில் உறுதியான தோல்வியினால் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காத பத்தொன்பது லட்சம் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் தமது தலைவர் ஏற்கனவே ஜனாதிபதியாக இருக்கும் போது அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கற்பனை செய்ய முடியுமா?

தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தோட்டத் துறையில் ஆறு இலட்சத்து எழுபதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அங்கு உழைக்காத மக்களைச் சேர்க்கும் போது தோட்டத் துறையில் மொத்த வாக்குகள் பத்து லட்சத்தையும் தாண்டும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு தலைவரின் கீழும் அமைச்சுப் பதவியைப் பெற விரும்புவதாக மலையகத்தின் மற்றைய தலைவர் திகாம்பரம் கூறுகிறார்.

இதன் மூலம் நாட்டில் ஏற்கனவே கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ளன என்பது தெரிகின்றது. ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் ஜூன் 8ஆம் திகதி அம்பலாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தக் கூட்டணியுடன் இருப்பதாகவும் தெரிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உடன்படிக்கையின் பிரகாரம் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் இக்குழுவினர் போட்டியிட்ட போதிலும், தமக்கு வாக்களிக்க வேண்டாம் என சில பொதுஜன பெரமுன தலைவர்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளமை விசேட அம்சமாகும். ஹம்பாந்தோட்டையில் மஹிந்த அமரவீர, கேகாலையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அனுராதபுரத்தில் துமிந்த திஸாநாயக்க, கம்பஹாவில் லசந்த அழகியவன்ன ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் வெற்றி பெற்றனர். 2018 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதினான்கு இலட்சம் வாக்குகளைப் பெற்றது. அந்தத் தொகையிலும் பெரும்பகுதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இது தவிர, கணிசமான எண்ணிக்கையிலான கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே இணைந்துள்ளன. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான ரீ.எம்.வி.பி கட்சி, கருணா அம்மானால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணி என்பனவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. தற்போது பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துள்ள சுசில் பிரேமஜயந்த், அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து மற்றுமொரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அருண் சித்தார்த்தன் வடக்கில் பெருமளவிலான மக்களை வழிநடத்துகிறார். மேலும் அவர் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ சுமந்திரன், விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு, கிழக்கின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சொந்த வேட்பாளரை முன்வைப்பதா அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அதே பதவிக்கு நியமிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் தீர்மானம் அந்த முன்னணியின் அரசியலை தீர்க்கமாக பாதிக்கும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்னணி தீர்மானித்தால் எதிர்காலத்தில் தனிக் கட்சியாகவே இருக்க முடியும். ஆனால் அவர்கள் தங்கள் வேட்பாளரை முன்வைக்கவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காதிருக்க முடிவு செய்தால், கட்சியின் தற்போதைய உறுப்பினர்கள் கூட நிச்சயமாக இரண்டாகப் பிளவுபடுவார்கள். எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம். அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அவருடன் இணைந்து கொள்ள கணிசமான சமகி ஜனபலவேகய உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையெல்லாம் விட முக்கியமானது, உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இல்லாமல் நரக நிலையிலிருந்து அவர்களையும் நாட்டையும் காப்பாற்றிய ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக நெருக்கடியான காலங்களில் தலைமைத்துவம் பெறாமல் ஓடிய, அனுபவமோ செயல்திறனோ இல்லாதவர்களை ஜனாதிபதி பதவியில் சேர்த்து மீண்டும் நரகமாக்கப் பாடுபடுவார்களா என்பதுதான் கேள்வி.

மேற்கூறிய தகவல்களின்படி 3% வாக்குகளைப் பெற்ற ஜனதா விமுக்தி பெரமுனவும் 22% வாக்குகளைப் பெற்ற சமகி ஜன பலவேகவும் தனிக் கட்சிகளாகவே இன்றும் இருக்கின்றன, ஆனால் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் உள்ளன என்பது தெளிவாகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சுற்றியுள்ள கட்சிகளுக்கு ஜூன் 06 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, இந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று நிரூபித்துள்ளார். மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முடிவுகளின்படி, நாட்டின் அரசியலின் யதார்த்தம் சில கணக்கெடுப்புகளிலிருந்து வேறுபட்டது என்பதும், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து ஏற்கனவே உறுதியான சூழ்நிலை உள்ளது என்பதும் தெளிவாகிறது, இல்லையா?

களனி பல்கலைக்கழக பொருளியல்துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division