உள்ளம் புத்துணர்ச்சியாகி
உடலும் புதுத்தெம்பாகி
உதிரத்தின் ஓட்டம் சீராகிட
உடற்பயிற்சியை நாமும் செய்திடுவோம்
உடலுழைப்பின் அவசியத்தை
உணர்ந்தே நாமும் செயற்பட்டால்
உற்சாகம் அங்கே எகிறிடும் – வாழ்வு
உயிரோட்டமாய் மாறி சிறந்திடும்
முயற்சி இல்லா வாழ்க்கையிலே
முன்னேற்றம் வந்து இணைந்திடுமா – உடற்
பயிற்சி இல்லா நிலையினிலே
பலம் வந்து சேர்ந்திடுமா
காலையும் மாலையும் பயிற்சியை
கரிசனையாய் நாளும் செய்திடுவோம்
வேலையில் வேட்கை தோன்றிடவே
வெகுவாய் பயிற்சியை விரும்பிடுவோம்
வளைந்தும் நெளிந்தும் பயிற்சியை
வகையாய் நாமும் புரிந்திடுவோம்
குனிந்தும் நிமிர்ந்தும் மேலுமதை
குறைவின்றி நிறைவாக்க முனைந்திடுவோம்
சோர்வும் சோம்பலும் நம்மில்
சொல்லாமல் ஓடிடும் உண்மை
ஆர்வமும் ஆவலும் அதிகரிக்க
ஆரோக்கியமாய் வந்திடும் நன்மை
உடற்கட்டமைப்பு மறுப்பின்றி
உறுதியாய் அமைந்திடும் பாரு
திடகாத்திரம் நமக்குள்ளே
திண்ணமாய் புகுந்திடும் உணரு
ஓட்டமும் நடையும் ஓயாமல்
ஒவ்வொரு நாளும் தொடர்ந்திட்டால்
வாட்டமும் வதையும் விலகிடும்
வாழ்க்கை வனப்பாய் ஜொலித்திடும்
ஆண்களும் பெண்களும் பயிற்சியை
அலுக்காமல் அன்றாடம் செய்திட்டால்
தீங்குகளும் துன்பங்களும் நீங்கிடும்
தித்திப்பாய் வாழ்வு மிளிர்ந்திடும்
வியாதிகளை விரைவாய் விரட்டிட
வினையில்லா ஔடதம் இதுதானே
தடையில்லா நலத்திற்கு நாமிதை
தக்கபடி அமைப்பது சரிதானே.