வாப்பா காலமான பின்னர்
அவர் நினைவாக
தேக்கு மர சாய்வு நாற்காலி
மான்தோல் இடுப்பு பட்டி
யானை மார்க்
ராட்சத குடையென
எல்லாமே பத்திரமாக
என் வசம் இருக்கின்றன
ஆயினும் குடும்பத்திற்காக
மாடாய் உழைத்து தேய்ந்த
கம்பர் சைக்கிளை மட்டும்
வீட்டு வாசலில்
சாய்த்து வைத்திருக்கிறேன்
வீட்டுக்கு வரும் விருந்தினர்கள்
வாப்பாவை முதலில்
சந்திக்காமல்
யாரும் மண்டபம்
நுழைவதில்லை
அவர் எல்லோரையும்
புன்னகை சொரிந்தபடி
வரவேற்பதாகவே
உணர்கிறேன்
சைக்கிளின் மிதி கட்டையிலும்
இருக்கையிலும்
வரையப்பட்டிருக்கின்றன
வாப்பாவின்
பருவகால ரேகைகள்
இரு சக்கரக் கம்பிகளில்
இப்போதும் பூத்து ஒளிர்கின்றன
ஆடைக்கும்
கோடைக்கும் சிந்திய
அவரது வியர்வை மணிகள்
அதன் பெல்லை குட்டி நட்டிகள்
அடிக்கும் போதெல்லாம்
வாப்பா குழைந்து குழைந்து
பேசுவதாகவே உணர்கிறேன்
நதியில் விழுந்தும்
சாயம் போகா
வானவில்லென
எனக்குள் பூத்துக்
கிடக்கின்றார்
இவ்வுலகை அறிமுகம்
செய்த வாப்பா
வாப்பாக்கள் இறந்த பிறகும்
அனேகமான வீடுகளில்
கரள் பூத்த சைக்கிள் ரூபங்களில்
இன்னும் இறவாமல்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
தொலைவில் சாலையில்
டயர் உருட்டிச் செல்லும் சிறுவன்
வாப்பாவின் நினைவுகளை
எனக்குள் உருட்டிச் செல்கிறான்