சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னைய சுற்றறிக்கைகளுக்கு அப்பால்சென்று புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடுவெல பிரதேச மக்களின் நலன்களை ஆராய்வதற்காகவும், அந்த மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் நேற்று (08) கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சாகல ரத்நாயக்க, வெள்ளம் தணிந்ததன் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன், மக்களை மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள வீடுகளை பார்வையிட சென்ற சாகல ரத்நாயக்க, வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.