இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தற்போது குறிப்பிடத்தக்க வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பருவினப் பொருளியல் முன்னுரிமை கொள்கை சீர்திருத்தங்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவதாகவும் விரைவான பொருளாதார வளர்ச்சி, வலுவான இருப்பு நிதி உருவாக்கம் மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் மூலம் அடைந்த முடிவுகள் பாராட்டுக்குரியவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியராளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வர்த்தகக் கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படுமென்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த அவர், நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடி, இரண்டாவது மதிப்பீடு குறித்து முடிவு மேற்கொள்ளப் படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் இலங்கையின் விரிவான நிதியளிப்பு வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது. இதற்கிடையில், பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதார வாய்ப்புகள் குறித்த IMF IV பிரிவு 2024 ஐ நிறைவு செய்துள்ளது.
கடன் மறுசீரமைப்பின் அடுத்த கட்டம் வெளிப்புற வணிகக் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்தல் மற்றும் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் ஒப்பந்தங்களை செயல்படுத்துவதுடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பெரும்பாலும் நிறைவடையும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் மேலம் தெரிவித்தார்