Home » உன்னதமான இராஜயோகங்களை தரும் உள்ளங்கை ரேகைக் குறிகள்!

உன்னதமான இராஜயோகங்களை தரும் உள்ளங்கை ரேகைக் குறிகள்!

by Damith Pushpika
May 19, 2024 6:01 am 0 comment

இராஜயோகம் என்றொரு சொல் சோதிடத்தில் அடிக்கடி பாவிக்கப்படுகிறது. கைரேகை சாத்திரத்தில் கூட அச்சொல்லின் பிரயோகமுண்டு. இராஜயோகமென்றால் அந்த யோகத்திற்குரிய நபர் ஓர் அரசனாக முடி சூடிக்கொள்வதென்பதல்ல; அரசாங்கத்தில் சேவகம் செய்து, அல்லது அரசின் சலுகை அல்லது கௌரவம் பெற்று அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கு பஞ்சமில்லாமல் வாழ்தல். அன்றாடம் பாடுபட்டு உழைத்தாலேயே வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் அநேகம் பேர் வாழ்ந்திருக்க, இந்த இராஜயோகம் பெற்றவரோ அதிகம் பாடுபடாமல் அல்லது பாடுபடுவதே இல்லாமல், வசதிகளுடன் வாழ்க்கை நடத்தும் அதிர்ஷ்டம் உள்ளவராயிருப்பார். உடலுழைப்பு கொஞ்சமும் ஊதியம் அதிகமுமாயிருக்கும். வாழ்நாள் பூராகவுமோ, அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலிருந்தோ எதற்கும் தட்டுப்பாடில்லாமல் வாழ்க்கை நடத்துமளவுக்கு அவருக்கு வருமானமோ வசதிகளோ சலுகைகளோ கிடைத்திருக்கும்.

இதனை வைத்துக்கொண்டு அரசாங்க உத்தியோகம் பார்ப்பது தான் இராஜயோகமென்று கருதி விடக்கூடாது. அரசாங்கத்தில் மாத்திரமல்ல, அரசியலிலோ கல்வித்துறையிலோ கலைத்துறைகளிலோ பிரவேசித்து, மக்களின் அமோக ஆதரவை நாளடைவில் பெற்று ஒரு நட்சத்திர அந்தஸ்தில் பிரகாசிப்பதும் இராஜயோகந்தான்.

இப்பிரபல்யத்தின் மூலம் அத்தகையவரின் அன்றாட வயிற்றுப் பாட்டுப் பிரச்சினை தீர்வதோடு, செல்வமும் செல்வாக்கும் சௌகரியங்களும் தென்னங்குரும்பையினுள்ளே இளநீர் சேருமாப் போல இவர் அறியாமலேயே இவரிடம் வந்து சேர்ந்து விடும் என்பது தான் இந்த இராஜயோகத்திலுள்ள மகிமையாகும்.

இக்கட்டுரையில் கைரேகை வாயிலாக ஏற்படும் இராஜயோகத்தின் ஒரு சில விதங்கள் குறித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவரினதும் உள்ளங்கையில் காணப்படும் பிரதான ரேகைகளாக ஆயுள், புத்தி, இருதய ரேகைகள் கருதப்படுகின்றன. இவை உற்பத்தியில் ஒன்றையொன்று தொடாமல் ( படத்தில் காட்டப்பட்டுள்ளது போல) ஆரம்பித்தால் அதுவொரு உன்னத இராஜயோகத்தின் அறிகுறியாகவே கருதப்படும். குடும்பம், காதல், உறவுகள் ஆசாபாசங்களுக்குக் கட்டுப்படாமல் தனித்து நின்று சுயமாக சிந்தித்து ஸ்திரமான முடிவுகள் எடுத்து ஒரு குடும்பத்தையோ, நிறுவனத்தையோ, கட்சியையோ, ஆட்சியையோ கொண்டு நடத்த இந்த அமைப்பு அவர்களுக்கு உதவியாக இருக்குமாம். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டாலும் சூழ்நிலைகள் பாதித்தாலும், முடிவுகளை தற்றுணிவின் பேரிலேயே எடுப்பார்களாம்.

இந்த வரிசையில் சிறந்த உதாரணங்களாக இங்கிலாந்தின் வின்ஸ்டன் சேர்ச்சில், மார்க்ரெட் தட்சர், சீனாவின் மாசேதுங், கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோ, இந்தியாவின் இந்திராகாந்தி, தமிழகத்தின் காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களும், இலங்கையின் டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றவர்களும் விளங்கினரென்றும், இவர்கள் இந்த ஆயுள், புத்தி, இருதய ரேகைகள் ஒன்றிணைந்து உற்பத்தியாகாத ரேகை அமைப்பை தத்தம் கைகளிலே கொண்டு, இதனாலுண்டான இராஜயோகத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினரென்றும் இந்தியாவின் பிரபல சோதிட சஞ்சிகையான ASTROLOGICAL MAGAZINE தனது கைரேகை ஆய்வுக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளது. இந்த யோகம் பற்றி இன்னொரு கருத்தும் அக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதாவது எந்தளவுக்கு செல்வமும் செல்வாக்கும் அதிகாரமும் ஏற்படுகின்றனவோ, அந்தளவுக்கு அத்தகையவரின் வாழ்க்கைத் துணை நலத்தையும் இரத்த உறவுகளையும் பாதித்து அவரோடு ஒட்டாமல் செய்து விடுமாம்!

எவரையும் ஒதுங்க நிழல்தேடி ஓடச்செய்யும் அகோரமான ஏறுவெயில் இந்த யோகத்திற்கும் செல்வாக்கிற்கும் உதாரணம் காட்டப்படுகிறது. அதேசமயம் இம்மூன்று பிரதான ரேகைகளில் ஒன்றான புத்திரேகையை, ஆரோக்கிய ரேகையெனப்படும் புதன் ரேகையும் சூரிய ரேகையும் தொட்டுக் கொண்டோ, அல்லது ஊடுருவியோ ஒரு முக்கோண வடிவவை அதில் அமைத்தால் மேற்சொன்ன இராஜயோகத்துடன் தான் கைக்கொண்ட துறையிலே நிபுணத்துவயோகமும் உண்டாக அது வழி வகுக்கிறது.

எதிலும் எவரும் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் ஊதியம் கிடைக்கு மென்பது பொதுவான விதி. அதேவேளை செய்யும் தொழிலில் ஏனோதானோ என்றில்லாமல் அதில் இஷ்டப் பட்டும் உழைத்தால்தான் தமது சுயதிறமையை வெளிப்படுத்தி, அதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களை முந்திக்கொண்டு அபிவிருத்தியடைவதுடன் அதிகமான ஊதியத்தையும் பெற முடியுமென்பதும், அதில் தனது தனித்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதும் முக்கியமாய் கவனிக்க வேண்டியதாகும்.

இத்தகைய அமைப்பின் மூலம், முக்கியமான மூன்று அம்சங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அவையாவன, கலைத்துறையில் மேம்பாட்டை சூரிய ரேகையும், பெயரும் புகழும் அடையும் வண்ணம் அந்தந்த துறையில் ஆழ்ந்த புலமையைப் பெறத்தக்க அறிவைத் தருகின்ற புத்தி ரேகையும், அத்தகைய கலைஞர்கள் தங்கள் தொழில்களை வியாபார ரீதியில் செய்து பெரும் பொருளீட்டவும், எக்காலமும் நின்றுநிலைக்கின்ற கீர்த்தியைத் தருகின்ற புதன் ​ேரகையும் ஒன்று கூடுவதன் மூலமே இந்த நிலை உருவாகின்றது.

எத்தகைய பின்னமோ, பிளவுகளோ இல்லாமல் சீராகவும் நேராகவும் அமைந்த இம்முக்கோணத்தையுடையவர்கள். தமக்கு ஆர்வமான மேற்சொன்ன துறைகளில் முயன்றால், கண்டிப்பாக உன்னதநிலைக்கு வந்தே தீருவார்கள்! எனவேதான் இம்முக்கோணத்தை இராஜயோக முக்கோணமென்று கைரேகை சாத்திரம் குறிப்பிடுகிறது.

அதே சமயம் சுக்கிர மேட்டில் உற்பத்தியான நெடிதான ரேகையொன்று இந்த முக்கோணத்திலுள்ள சூரிய ரேகையுடன் இணைந்து காணப்பட்டால் நெருங்கிய நண்பர் விசேடமாக காதலி அல்லது காதலன் மூலம் அதுவுமில்லாவிடில் நெருங்கிய உறவினர் ஒருவரின் விதிவசமான உதவி மூலம் இத்தகைய முக்கோணத்தைக் கொண்டவர் இராஜயோகத்தை அடைகிறார் எனலாம்.

இவ்வமைப்பு இருந்தும் ஒருவர் முன்னுக்கு வரவில்லையென்றால் அவர் தமக்கு ஆர்வமான துறையில் ஊக்கமெடுத்து முயற்சி செய்யக்கூடிய வகையில் அவரது விதி ரேகை ஒழுங்காக சாதகமாக அமையவில்லையென்றே கொள்ளவேண்டும்.

இதே மாதிரியான இன்னொரு முக்கோணம் குறித்தும் இக் கட்டுரையில் குறிப்பிடுவது பொருத்தமானதெனக்கருதுகிறேன். அதாவது புத்திரேகையை புதன் ரேகையோடு விதிரேகையும் குறுக்கிட்டுச் செல்வதால் ஏற்படுகின்ற முகோணம் இன்னொரு வகையில் சிறபைத் தரும் விதத்திலானது.

இந்த அமைப்புள்ளோர் ஆன்மிகம், யோகம், சோதிடம் போன்றவற்றில் அளவு கடந்து ஈடுபாடு கொண்டு சாமானியரிலிருந்து தம்மை வேறுபடுத்துக் காண்பித்துக் கொண்டு வாழ்வர். தெய்வபக்தி இவர்களுக்கு இயல்பானது. யோகக் கலையின் சூட்சுமங்களைப் பயின்று அதனை அடுத்தவரின் உள, உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வாக பயன்படுத்தும் ஆசான்களாக வளங்குவது இவர்கள் தான்.

இவ்விதம் முக்கோணம் கொண்டவர் ஒரு சோதிடராயின் அவர் சொன்ன வாக்கு பலிக்கும். இவரது தியானத்திலும் ஆன்மாவோடு பேசும் மனம் இலயித்த நிஷ்டையிலும் அவரையும் அவரை, அண்டி வருவோரையும் வாட்டும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லப்படும். அப்படியொரு அருட்சக்தியை இம்முக்கோணம் உண்டு பண்ணும்.

அத்துடன் இம்முக்கோணமானது பலருடனும் நெருங்கிப்பழகுகிற ஒரு சௌஜன்ய நிலையை உருவாக்கும். சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றுத்தரும். அந்தளவுக்கு ஒருவரது அறிவாற்றலை வளர்க்கிற தன்மை புத்திரேகைக்கு உண்டு. அதே சமயம் அருள் மேடு என்று கூறப்படும் சந்திர, செவ்வாய் மேடுகளின் ஓரத்தில் உள்ளங்கையின் அடிப்புறமிருந்து ஆரம்பிக்கும் ஆரோக்கிய (புதன்) ரேகையானது அருட்சக்தியைக் கொடுக்கும். ஆற்றலைத்தரும் விதிரேகையோ அவருக்கு பல விடயத்திலும் புகழையும் பொருளையும் சேர்க்கும் எனவே புதன் ரேகையால் விதிரேகையால் பொருளும். புத்தி ரேகையால் ஆற்றலும் ஏற்பட இந்த முக்கோணம் அமைந்திருக்க வேண்டியதும் இன்றியமையாததென கருதப்படுகிறது.

இம்முக்கோணத்தினுள் ஒரு புள்ளடிக் குறியோ அல்லது வலைக்குறியோ இருக்கக் காணப்பட்டால் அப்படியமைந்தவர் வாழ்வில் வெற்றி பெறுவது கஷ்டமாகும். இந்தப் புள்ளடியானது அவரது தொழில் நிலையிலும் அறிவாற்றலிலும் ஒரு தேக்கத்தை உண்டு பண்ணும். மேற்சொன்ன இருவகை முக்கோணங்களுக்குள்ளேயும் சூலக்குறி அமைந்து காணப்படின் தான் கைக்கொண்ட சாமானியருக்கு எளிதில் விளங்காத மனோவசிய மாயா ஜாலவித்தை, (Magic) சோதிடம் போன்றவற்றில் தேர்ச்சி பெறுவதோடு நில்லாமல், ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவரது முக்காலங்களையும் சொல்லக்கூடிய ஞானதிருஷ்டியையும் அத்தகையவர் பெற்றிருப்பார். அதே சமயம் இம்முக்கோணங்களுக்குள்ளே நட்சத்திரக்குறி இருப்பது குறித்து சிறப்பாகச் சொல்லப்படவில்லை.

அந்த முக்கோணங்களுக்குள்ளும் சரி, ஆயுள், புத்தி, ஆரோக்கிய ரேகைகளாலான மற்றொரு வகை முக்கோணத்திற்குள்ளும் சரி நட்சத்திரக்குறி காணப்பட்டால் அப்படி அமைந்தவரின் மலட்டுத்தன்மையை அது குறிப்பதாகும் என சொல்லப்படுகிறபோதும், அது நாளடைவில் பார்வை குருடாகி வருவதை அறிவிக்கும் அறிகுறியென கைரேகைக் கலையின் பிதாமகரான ஜெர்மெயின் தத்தமது ஆய்வு நூலில் பதிவு செய்துள்ளார்.

திருவோணம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division