பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்தினால் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டாலும், 1,700 ரூபா சம்பளத்தை விடவும் குறைந்த தொகைக்கு செல்வதற்கு தயாரில்லையென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த ஆட்சேபனைகளை ஆராய்ந்து பார்த்தாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டில் வாழ்வதற்கு குறைந்தபட்சம் 1,700 ரூபா சம்பளமேனும் அவசியம் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
டொலரின் பெறுமதி அதிகரித்த சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் பாரிய இலாபத்தை பெற்றுக்கொண்ட போதும், அவர்கள் தோட்ட மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நான்கு வருடங்களுக்கு பின்னரே இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, 1,700 ரூபாவுக்கும் கீழ் செல்வதற்கு தயாராக இல்லையெனவும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறினார்.