தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் “ஜயகமு ஸ்ரீலங்கா” தேசிய மக்கள் நடமாடும் சேவை தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது அமைச்சுப் பணிகளுடன் நாடு பூராகவும் வலம்வந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி, அவர்களுக்கு உடனடி மற்றும் வினைத்திறனான சேவையை வழங்கி வருகிறார். இதனூடாக அரச ஊழியர்கள் தொடர்பில் சமூகத்தில் வேரூன்றியிருந்த கசப்பான எண்ணக்கருவை மாற்றியமைத்து வருகிறார்.
நவீன தொழில் உலகம், புதிய கைத்தொழில் உலகம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய நவீன தொழில் உலகத்திற்கான “ஸ்மார்ட் உலகத்தை” உருவாக்க இது ஒரு முன்னணி செயற்திட்டமாக மாறியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2048ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுவதற்கு தொழில் அமைச்சு தொடந்தேர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் தேசிய வேலைத்திட்டம் பலவகை பலன்களை கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்டதன் பிரகாரம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்களின் சேவைகள் ஜயகமு ஸ்ரீலங்கா ‘தேசிய மக்கள் நடமாடும் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவது தனித்துவமான அம்சமாகும்.
பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு இவ் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளை நாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பல நாட்கள் செலவிட்டு கொழும்பிலுள்ள அலுவலகங்களுக்குச் சென்று ஆற்றவேண்டியிருந்த பணிகளை தமது சொந்த கிராமங்களிலிருந்து குறுகிய காலத்தில் செய்து முடிப்பதே ‘ஜயகமு ஸ்ரீலங்கா ‘ வேலைத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகவும் கடினமான மற்றும் இருண்ட யுகத்தை நாடு எதிர்கொண்டது. அந்த நிலையில் இருந்து நாடு தற்போது மீண்டுள்ளது என்பதை நடுநிலையானவர்களினால் புரிந்து கொள்ள முடியும்.
பலர் அதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் நாடு செல்ல வேண்டிய தூரம் அதிகம். வெளிநாட்டுக் கடனை செலுத்துவதன் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவது இதன் அடிப்படைத் தேவையாகும். மேலும், வேலையின்மையை போக்கி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை வலுப்படுத்துதல் போன்ற பல கூறுகளை இது உள்ளடக்கியது. ஒரு நாடாக இலங்கைக்கு இந்த இலக்குகள் மிகப் பாரியவையாகும். ஆனால் இந்த இலக்குகளை அடைய மாற்றுவழிகள் இல்லை. தனிநபர்களாக வெற்றிகரமான பொருளாதார நிலையை அடைவதே அதற்கான எளிதான அணுகுமுறையாகும். அந்த அணுகுமுறைக்காக பலர் வெளிநாட்டில் வேலை செய்வதை தேர்வு செய்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் தொழில்புரிவதைத் தடுக்கும் வகையிலான செய்திகளும், நிகழ்வுகளும் இடம்பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. அண்மையில் மியான்மாரில் பயங்கரவாத அமைப்பினரால் பிடிக்கப்பட்ட இளைஞர்கள், ரஷ்யாவில் மோசடியாகப் போரில் ஈடுபட்டவர்கள் போன்றோர் இதற்கு உதாரணமாகும். எனவே பிள்ளைகள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வது பல பெற்றோர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது பிள்ளைகள் வெளிநாடு செல்லக் கனவு காணும் இவ்வாறான பெற்றோர், தமது பிள்ளைகளுடன் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையில் பங்குபற்ற ஆர்வமாக உள்ளனர். வெளிநாடு செல்லும் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உண்டு. தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்படுகிறது.
கடந்த வார இறுதியில் ஹம்பாந்தோட்டை அங்குனகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வில் இந்த நடமாடும் சேவையானது உண்மையான ‘மக்கள் சேவை’ என்பது தெளிவானது.
அங்குனகொலெபலஸ்ஸ சிறைச்சாலை மைதானத்தை நிரப்ப கூடியிருந்த கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கு முக்கியமானவை.
வீரவிலவிலிருந்து வந்த மல்சனா இவ்வாறு கூறுகிறார். “வேலை வாய்ப்புடன் கல்வியைத் தொடர ‘ மாணவர் விசா’ பற்றிய தகவல்களைத் தேடி இங்கு வந்தேன். இதுபோன்ற பல தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். ஹம்பாந்தோட்டை பின்தங்கிய மாவட்டம் என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ”
வீரவிலவை வசிப்பிடமாகக் கொண்ட ரேனுரி கோகிலதா என்ற யுவதி கூறுகையில்,
இளைஞர் சேவை மன்றத்தின் வழிகாட்டலின்படி நான் இந்த நடமாடும் சேவைக்கு வருகை தந்து ‘மாணவர் விசா’ உட்பட இங்கு கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பற்றி அறிந்துகொண்டேன். எவ்வாறாயினும், நான் நம்பகரமான நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்ல விரும்புகிறேன்.” என்று கூறினார்.
வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லாதவராக சுசினிந்து ரோஹந்தா கூறுகையில்,
எங்கள் குடும்பத்தில் ஏழு பேர். தந்தை மாத்திரமே தொழில் புரிகின்றார். வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மோசடி நிறுவனங்கள் இருப்பதால் நான் பயப்படுகிறேன். ஆனால் இங்கு வரும் நிறுவனங்கள் மீது நம்பிக்கை உள்ளது” என்கிறார்.
ஜயகமு ஸ்ரீலங்கா என்பது ஒரு சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் மேடையாகும்.முறையான வேலைப் பயிற்சி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்பவன், குறைந்த தொகையை மட்டுமே சம்பாதிக்க முடியும். ஆனால் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் நோக்கம் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் ஒவ்வொரு இலங்கையரையும் தொழில் பயிற்சி பெற்ற தொழிலாளியாக அனுப்புவது ஆகும்.
அந்த இலக்கை அடைய மூன்றாம் நிலைக் கல்வி நிலையத்தின் அதிகாரிகள் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ நிகழ்வில் இணைந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் இலங்கையின் தொழில் சந்தையில் புதிதாகப் பலர் இணைகின்றனர். இவர்களும் தொழில் பயிற்சி இல்லாதவர்களாகும். இன்றைய போட்டி நிறைந்த தொழில் சந்தையில், பல்கலைக் கழகப் பட்டம் கூட தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்காது. அதனால் தான் பட்டதாரிகள் கூட தொழிற் கற்கைகளை மேற்கொள்கின்றனர். பட்டப்படிப்பை மாத்திரம் முடித்துவிட்டு தொழில் சந்தையில் நுழையும் இளைஞர்கள் படும் சிரமங்கள் ஏராளம். இவ்வாறான இளைஞர்களை இலக்கு வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்தின் கீழ் ‘ஸ்மார்ட் யூத்’ வேலைத்திட்டமும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி பெறுவதற்காக தலா 1 லட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி மிகவும் முக்கியமான தேவையாகும்.
இலங்கையில் வேலை வாய்ப்பு முறை பற்றி பேசும் போது, தொழில் அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்படாத வேலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. பொதுவாக முறைசாரா வேலைகள் எனப்படும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுபவர்களின் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்திற்கு மகத்தானது. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த நாட்டில் இத்தகைய வேலைகளைச் செய்வதற்கு உரிய வெகுமதி, கௌரவம், பாதுகாப்புத் திட்டம் எவையும் இல்லை.
அதனால் தான் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையில் ‘கருசரு’ வேலைத்திட்டம் சாமந்திரமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கரு சரு வேலைத்திட்டமானது முறைசாரா தொழிற்துறையில் பணிபுரிபவர்களுக்கு தொழில் கௌரவத்தை நிலைநாட்டுதல், பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குதல், தொழிற்பயிற்சிகளை அளித்தல் மற்றும் தொழில்முறை உரிமம் வழங்குதல். போன்ற பல சேவைகளை வழங்குகிறது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அதன் அனைத்து நிறுவனங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹரசர, கருசரு, ஸ்மார்ட் யூத் கிளப், சிரம வசன நிதி போன்றன குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களை தொழில் முனைவோர் நடவடிக்கைகளுக்கு வழிநடத்துவதில் வியக்கத்தக்க வகையில் பங்களிக்கிறது.காலி மாவட்டத்தில் சோதனைத் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட முதலாவது வேலைத்திட்டத்தின் பின்னர், அநுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஜயகமு ஸ்ரீலங்கா ‘ மக்கள் நடமாடும் சேவை தொடரில் அடுத்து நுவரெலியா மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம், மொனராகலை, கேகாலை, கண்டி, குருநாகல், பொலன்னறுவை, மாத்தளை, வவுனியா, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி, முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்குப் பின்னர் நுவரெலியாவுக்கு ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ ஸ்மார்ட் திறமைசாலிகள் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நோக்கம் வெளிநாடு செல்வதைத் தவிர்ப்பதற்கான வழியாக அனைத்து மாவட்டங்களிலும் தொழில்முறை திறன்களை வழங்குவதாகும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் எதிர்பார்ப்பாகும்.