அமெரிக்காவின் சி.ஐ.ஏ, சுமார் 20 மில்லியன் டொலர்கள் செலவு செய்து ஒரு பூனையை இரகசிய உளவாளியாக தயார் செய்துள்ளது.
பூனையை எல்லோரும் செல்லப்பிராணியாகவே பார்க்கும் மனோபாவம் இருப்பதால், அதன் மேல் யாருக்கும் அவ்வளவு எளிதில் சந்தேகம் வராது என்று நினைத்த சி.ஐ.ஏ, 1960ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொண்டது.
ஒரு பெண் பூனையின் காதில் சிறிய மைக்கையும், அதன் உடலில் ஒரு ட்ரான்ஸ் மீற்றரையும் பொருத்தி அதை ஒரு இரகசிய உளவாளியாக தயார் செய்தது. சி.ஐ.ஏ.பூனையின் உருவ அளவைக் கணக்கில் கொண்டு, சிறிய உரையாடல்களை மட்டுமே பதிவுசெய்யக்கூடிய திறன் கொண்ட சின்ன பெட்டரியும் விசேடமாக வடிவமைக்கப்பட்டது.
இவை அனைத்தையும் விட, பூனைக்கு பயிற்சி கொடுப்பதுதான் சி.ஐ.ஏவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தன் மீது பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளை, பூனை மறந்தும் வீணாக்கிவிடக்கூடாது, கருவிகள் வெளியில் தெரியக்கூடாது, குறித்த நேரத்தில் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும். இதெல்லாம் தான் சி.ஐ.ஏ கொடுத்த பயிற்சிகள்.
ஐந்து வருட பயிற்சிக்குப் பின், பூனை எப்படி வேலை செய்கிறது என்று சோதித்துப் பார்க்க விரும்பிய சி.ஐ.ஏ அதிகாரிகள், சாலையில் மறுபக்கம் இருந்த ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவர்களை நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டு பூனையை கீழே விட்டனர்.
பூனை வேகமாக சாலையைக் கடந்த போது கார் ஒன்றில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனது.