பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தடகள வீரர்கள் பதக்கம் வெல்வது ஒரு பக்கம் இருக்க தகுதி பெறுவது என்பதே பெரும் போராட்டமாகி இருக்கிறது. உண்மையில் இன்னும் ஒரு வீரர் கூட தகுதி மட்டத்தை எட்டவில்லை.
இலங்கைக்கு ஒரு ‘வைல்ட் காட்’ (தகுதி அளவுகோல்களுக்கு அப்பால் அனுமதி) அனுமதியை கூட வழங்க சர்வதேச ஒலிம்பிக் குழு மறுத்துவிட்டதால் திறமையைக் காட்டி ஒலிம்பிக் போவது குதிரை கொம்பாகி இருக்கிறது. கடந்த வாரம் கூட ஒலிம்பிக் தகுதிக்கான எதிர்பார்ப்போடு இலங்கை முன்னணி ஓட்ட வீரர்கள் நால்வர் டுபாயில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பங்கேற்றார்கள். ஆனால் ஒருவர் கூட தகுதி மட்டத்தை பெறுவதற்கு அப்பால் போதுமான திறமையை கூட காட்டவில்லை.
தெற்காசியாவின் அதிவேக வீரராக இருக்கும் யுபுன் அபேகோன், இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கை ஒலிம்பிக் குழுவின் செலவில் இத்தாலியில் இருந்து டுபாய் சென்றிருந்தார். ஆனால் அவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.18 விநாடிகளில் முடித்து மூன்றாவது இடத்தையே பெற்றார். ஒலிம்பிக்கிற்கான தகுதி மட்டம் 10.00 விநாடிகளுக்குள் போட்டியை முடித்திருக்க வேண்டும்.
2022 ஆம் ஆண்டு நடந்த பெர்மிங்ஹாம் பொதுநலவாய போட்டியில் வெண்கலம் வென்ற யுபுனின் சிறந்த காலம் 9.96 விநாடிகளாக இருப்பதால், அவர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தபோதும், அதற்கான அவகாசம் என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
அதேபோன்று டுபாய் தடகளப் போட்டியில் பங்கேற்ற, பெண்களுக்கான 400 மீற்றர் ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற நதீஷா ராமநாயக்க அந்த போட்டி நிகழ்ச்சியை 53.82 விநாடிகளில் முடித்து இரண்டாவது இடத்தை பெற்றார். ஆனால் ஒலிம்பிக் தகுதி மட்டத்தை எட்டுவதற்கு போட்டியை 50.95 விநாடிகளில் பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு ஹான்சூவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தரூஷி கருணாரத்ன, டுபாயில் களைப்பு மிகுதியால் போட்டித் தூரத்தைக் கூட பூர்த்தி செய்யாமல் பாதியிலேயே நின்றுவிட்டார். அந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற வீராங்கனையான கயன்திகா அபேரத்ன கடைசி இடத்தையே பிடித்தார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் தகுதி பெற வேண்டுமென்றால் போட்டியை 1:59.30 நிமிடங்களில் முடிக்க வேண்டும். ஆனால் இந்த இரு வீராங்கனைகளுக்கும் அந்த இலக்கு என்பது இப்போதைக்கு எட்டாக் கனிதான்.
இந்த வீராங்கனைகள் டுபாயில் பின்னடைவை சந்தித்தாலும் ஒலிம்பிக் தகுதியை உறுதி செய்ய இன்னும் சிறிய வாய்ப்பு ஒன்று இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடக்கப்போகிறது. அதற்காக தடகள வீர, வீராங்கனைகள் தகுதியை நிரூபிப்பதற்கான கலக்கெடு எதிர்வரும் ஜூன் 30 உடன் முடிவடையும்.
இந்த நிலையில் ஜப்பானில் ஒசாகா நகரில் இன்று (மே 12) 11ஆவது மிச்சிடாகா ஞாபகார்த்த தடகளப் போட்டி ஆரம்பமாகிறது. இதில் தரூஷி கருணாரத்ன, நதீஷா ராமநாயக்க மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து மே 19 ஆம் திகதி ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமாகும் செய்கோ பிரிக்ஸ் போட்டி, பின்னர் ஜூன் 1–2 ஆம் திகதிகளில் நடைபெறும் தாய்வான் திறந்த சம்பியன்சிப் மெய்வல்லுநர் போட்டி, அதேபோன்று ஜூன் 14–15 ஆம் திகதிகளில் சீனாவின் மொக்போவில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளே இலங்கையர் ஒருவராவது ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்பதற்கான கடைசி அவகாசங்களாக இருக்கும்.
மறுபுறம் இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை அஞ்சலோட்ட அணியை பங்கேற்கச் செய்வதற்கு கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக கடும் முயற்சி இடம்பெற்று வருகிறது. ஆனால் அதற்கான தகுதி மட்டம் இன்னும் எட்டப்படவில்லை.
தகுதி மட்டத்தை காண்பிப்பதற்கு ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்ட அணி பஹாமாஸில் நடைபெறும் உலக அஞ்சலோட்டப் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தது. பஹாமாஸ் போவதென்றால் அமெரிக்கா வழியாகவே செல்ல வேண்டும். ஆனால் விசாவை பெறுவதில் குழப்பம் ஏற்பட்டது.
அதாவது விசாவுக்கான நேர்முகப் பரீட்சைக்கு அமெரிக்க தூதரகம் இலங்கை வீரர்களை ஆரம்பத்தில் அழைக்கவில்லை. இந்த விவகாரம் ஊடகத்தில் வெளியானதை அடுத்து கடந்த மே 2 ஆம் திகதியே நேர்முகப்பரீட்சைக்கு அழைத்தது. ஆனால் போட்டி நடைபெறுவதோ மே 4–5 ஆம் திகதிகளில். அதற்கான விமான டிக்கெட்டை ரத்துச் செய்த பின்னரே இலங்கை வீரர்களுக்கு விசா கிடைத்தது.
பஹாமாஸை தவறவிட்ட இலங்கை அஞ்சலோட்ட அணி அடுத்து பாங்கொக்கில் நடைபெறும் ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறது. இந்தப் போட்டி எதிர்வரும் மே 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.
இதில் ஐந்து அஞ்சலோட்ட போட்டி நிகழ்ச்சிகளுக்காக இலங்கையின் 22 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பெண்களுக்கான 400 மீற்றர் மற்றும் கலப்பு 400 மீற்றர் ஓட்டப்போட்டிகளிலும் இலங்கை பங்கேற்கிறது. இந்த அணிகளின் ஒலிம்பிக் தகுதிக்கான வாய்ப்பு மிகவும் குறுகலானது.
ஆனால் கடந்த ஆண்டு பாங்கொக்கில் நடந்த ஆசிய சம்பியன்சிப் போட்டியில் காலிங்க குமாரகே தலைமையிலான இலங்கை அணி 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றது அந்தப் போட்டி நிகழ்ச்சியில் ஒலிம்பிக் செல்வதற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஒட்டப்போட்டிக்கு மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 14 இடங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் எஞ்சி இருக்கும் இரண்டு இடங்களில் ஓர் இடத்தை பிடிப்பதற்கே இலங்கை போட்டியிடுகிறது.
இலங்கை 400 மீற்றர் அஞ்சலோட்ட அணியில் காலிங்க குமாரகேவுடன் அருண தர்ஷன, ராஜித்த ராஜகருணா மற்றும் பபசர நிக்கும் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி கடந்த ஆண்டில் போட்டித் தூரத்தை 3:01.56 நிமிடங்களில் முடித்தது. ஆனால் இலக்கை எட்டுவதற்கு கடும் போட்டி இருக்கும்.