தமிழ்நாடு ஸ்ரீ அருணாசல ரமண ஆத்ம வித்யா மந்திர் ஆச்சாரியார் சுவாமி ரமண ஸ்வரூபானந்தஜி வழங்கும் ஆன்ம விசார ஆத்திசூடி சொற்பொழிவு கொழும்பு 06, வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சிறிய மண்டபத்தில்
2024 மே மாதம் 17, 18, 19 ஆகிய திகதிகளில் மாலை 06.30 மணிமுதல் நடைபெறவுள்ளது.
ஓளவையார் எழுதிய ஆத்திசூடி அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் நாம் அறிந்ததே. அதில் ஒளவைப் பிராட்டி நாம் வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களையும், வளர்த்துக்கொள்ள வேண்டிய நல்லியல்புகளையும், ஆன்மிக விழுமியங்களையும் அறிவுரைகளாகக் கூறியுள்ளார். அதேபோல் சுதந்திர வேட்கையை அடிமைப்பட்டுக் கிடந்த மக்களிடையே ஊட்டிய மகாகவி சுப்ரமணிய பாரதியும் அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என புதிய ஆத்திசூடி பாடினார்.
அந்த வரிசையில் சுவாமி ரமண ஸ்வரூபானந்தஜி அண்ணாமலையில் மௌன தபசில் இருந்த காலத்தில் அவருள்ளத்திலிருந்து வீரிட்டெழுந்தது தான் இந்த ஆன்ம விசார ஆத்திசூடி. “ஆனா முதல் ஒளவன்னா வரை” ஆரம்பமாகின்ற பன்னிரண்டு சுருக்கமான வாசகங்களில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அருளிய ஆன்ம விசாரத்தின் சாரத்தை அதை பயில வேண்டிய விதத்தின் சூட்சுமத்தை எடுத்தியம்பியுள்ளார்.
மே 17 ஆம் திகதி நான்கு வாசகங்களைக் கொண்டு அகமுகப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கு செய்ய வேண்டிய சாதனைகளைப் பற்றியும் இரண்டாம் நாளான மே 18 ஆம் திகதி இன்னுமொரு நான்கு வாசகங்களைக் கொண்டு ஆன்ம விசாரத்தின் சூட்சுமத்தைப் பற்றியும், மூன்றாவது நாளான 19 ஆம் திகதி கடைசி நான்கு வாசகங்களைக் கொண்டு ஆன்ம நிட்டனாக இதயத்திலேயே அமிழ்ந்திருக்கும் தகைமையைப் பற்றியும் விரிவாக சொற்பொழிவாற்றவுள்ளார்.
இந்த மூன்று நாட்களில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி தன் நூற்றிரட்டில் அருளியுள்ள அத்தனை சாரத்தையும் நாம் எவ்வித ஐயத்திரிபுமின்றி அறிந்து கொள்ளலாம்.
ஆன்மிக ஈடேற்றத்திற்கு அறிய வேண்டியது ஒன்றுமில்லை. இந்த புனித நிகழ்வுகளுக்கு அனைவரும் வருகை தந்து ஆன்ம ஈடேற்றம் பெற்றுச் செல்லுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
காயத்திரி விக்கிரமசிங்க