சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பாரிய நிதி நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீட்சிபெற்று வருகின்றது. பொருளாதாரத்தை சீர்செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகள் ஒருபக்கம் இருக்க, தேர்தலுக்கான அரசியல் பரபரப்புக்கள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல்களை அனைத்துக் கட்சிகளும் ஆரம்பித்து விட்டன. கடந்த வாரம் நடைபெற்ற மேதினக் கூட்டங்கள் இதற்கான ஆரம்பகட்ட நகர்வாக அமைந்திருந்தன. பல ஆண்டுகளுக்குப் பின்னர் மேதினம் அரசியல் கூட்டங்கள் மற்றும் கோஷங்களால் உத்வேகமளிக்கப்பட்டிருந்தது.
மே தினக் கூட்டங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு தெளிவான பிரிவுகள் இருந்தன. ஆளுங்கட்சியினர் இதுவரை ஆற்றிய பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் எப்போதும் அரசாங்கத்தை விமர்சித்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று கருத்துத் தெரிவித்ததையும் காணக் கூடியதாகவிருந்தது.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே மேதினத்தை கொண்டாட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வந்ததாகத் தெரிகிறது. எனவே, சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மேதினத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியிருந்தன.
தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த விடயங்களைவிட அரசியல் ரீதியான கோஷங்களும், கருத்துக்களுமே மேதின மேடைகளில் அதிகம் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தேர்தலுக்கான அரசியல் காய்நகர்த்தல்களில் மற்றுமொரு கட்டத்தை நோக்கி அரசியல் சக்திகள் நகரத் தொடங்கியிருப்பதைக் காண முடிகின்றது.
தேர்தல்களில் தமக்கான வாக்கு வங்கிகளை அதிகரிப்பதற்கான முயற்சியாக அரசியல் சக்திகள் தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களைக் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த மே 02ஆம் திகதி காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களின் சம்பளம் 15 வீதத்தால் குறைக்கப்பட்டமை மற்றும் அவர்களது மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்கத் தவறியமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அவர்களின் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்ப்டடிருந்தது.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அனைத்துக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தேர்வுகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் 1.8 மில்லியன் மனித மணித்தியால இழப்பும், நாளொன்றுக்கு 125 மில்லியன் ரூபா இழப்பும் ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தினர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வந்து வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘இவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் மற்றைய சாதாரண தொழிலாளர்களைப் போல் நடந்து கொள்ளக் கூடாது. நன்கு படித்தவர்கள், மாணவர்களின் கல்வி வாழ்க்கையைக் கையாள்கின்றவர்கள்.
ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களின் உரிமையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவர்களை பணிக்குத் திரும்புமாறும், தங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் இராஜாங்க அமைச்சர் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டிருக்கவில்லை.
இதற்கிடையில், 18 துறைகளின் அரசு நிர்வாக அதிகாரிகளால் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சுகவீன லீவுப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிராக இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அரச பொறியியல் சேவை, விவசாயம், கால்நடை மருத்துவம், விஞ்ஞானம், ஆயுர்வேத மருத்துவம், கல்வி, நிர்வாகம், அஞ்சல், மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 18 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு நிர்வாக அதிகாரிகளே இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜனக குமாரசிங்க மற்றும் ஏனைய பொருளாதார நிபுணர்களின் கூற்றின்படி, இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் தனியார் துறையினரின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் அதேநேரம், அரசாங்கத்துறையில் உள்ளவர்கள் அல்லது ஒருசில பணியாளர்கள் பொருளாதாரத்தைக் கீழ்நோக்கி இழுக்கின்றனர். இதுவே அரசாங்கத் துறையில் உள்ள கசப்பான உண்மை என்பதே உண்மையாக உள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் செலவினங்களில் அதிகமான செலவு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கே செல்கின்றது. 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு மேலும் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
அது மாத்திரமன்றி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய தொழிற்சங்கப் போராட்டங்களை அடுத்து ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு அந்தச் சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டது. ஆனால் அந்த உயர்த்தப்பட்ட சம்பளம் ஒட்டுமொத்த மக்களிடமிருந்தும் ஒரு சிலரின் கைகளுக்குச் சென்றிருப்பதாகவே தெரிகின்றது. சம்பள அதிகரிப்பின் பலன்கள் அரச ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மாத்திரமே பலன்களை வழங்கியதே தவிர, உண்மையில் பொருளாதாரத்தை முன்னோக்கி தள்ளும் இந்த நாட்டின் ஏழை எளிய மக்களுக்குச் செல்லவில்லை.
அண்மைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எடுத்து நோக்கும்போது 8 மில்லியன் தொழிலாளர்களில் 7.3 மில்லியன் தொழிலாளர்கள் எந்தவொரு தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களாகவும் இல்லை. மேலும் 7 இலட்சத்து 20 ஆயிரம் பேர் மாத்திரமே இந்தத் தொழிற்சங்கங்களில் உறுப்புரிமைகளைக் கொண்டுள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 330 தொழிற்சாலைகளில் 10 இற்கும் குறைவான தொற்சாலைகளே தொழிற்சங்கங்களைக் கொண்டுள்ளன. புள்ளிவிபரங்கள் இவ்வாறானதாக இருக்க, தொழிலாளர்களில் பெருமளவானோர் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவது முரண்பாடான விடயமாகக் காணப்படுகின்றது. தொழிற்சங்கத் தலைவர்கள் ஏனையவர்களை அச்சுறுத்துவது இதற்கான காரணமாக இருக்கலாம்.
இலங்கையில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் வேலைகளுக்குச் செல்வதில்லை என்பதுடன், குறைந்தபட்சம் அவர்கள் அலுவலகங்களுக்குச் சென்று கையொப்பம் கூட இடுவதில்லை. ஏனெனில், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில் எதனையும் மேற்கொள்ளாமல் அவர்களுக்கான மாதாந்த சம்பளங்களை பெற்றுக் கொள்கின்றனர்.
அவர்கள் மற்றைய ஊழியர்களைப் போல அலுவலகத்திற்கு வந்து கையெழுத்துப் போடத் தேவையில்லை. அலுவலகத்தில் இருந்து விலகி இருப்பதற்காக சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களின் மாதச் சம்பளம் எந்தக் கழிவும் இல்லாமல் சரியான நேரத்தில் அவர்களது வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைகின்றது.
இவ்வாறானவர்கள் ஏனைய தொழிலாளர்களையும் குழப்பி நாட்டின் முன்னேற்றத்தை முடக்கும் கைங்கரியத்தையே நிறைவேற்றி வருகின்றனர் என்று மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். இதுபோன்ற விடயங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அது மாத்திரமன்றி, அரசாங்கத் துறையில் உள்ளவர்களின் வினைத்திறனான சேவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன. மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணத்தின் மூலம் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளும் அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற விடயங்களில் ஈடுபட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய சேவையை நிறைவேற்றாதிருப்பது மிகவும் பாதகமான செயலாகும்.
தொழிற்சங்கப் போராட்டத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு சிறந்த உதாரணமாக, ஆசிரியர்களின் போராட்டத்தைக் குறிப்பிடலாம். கொவிட் தொற்றுநோய் எனப் பல்வேறு சிக்கல்களின் பின்னர் கல்விச் செயற்பாடுகள் ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பியபோது ஆசிரியர்கள் மேற்கொண்ட நீண்டகாலப் பணிப்புறக்கணிப்புக் காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் ஏற்பட்ட காலதாமதத்தை இன்னமும் ஈடுசெய்ய முடியாமல் போயுள்ளது.
பாடசாலைகளின் தவணைகளில் பாரிய குழப்பங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பாடசாலைக் கல்வியில் மாத்திரமன்றி பல்கலைக்கழகக் கல்வியிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதுபோன்று நாட்டின் முன்னேற்றத்துக்குப் பல்வேறு வழியிலும் பாதகமான தாக்கத்தை இந்தத் தொழிற்சங்கப் போராட்டங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
பாரிய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும் இந்த முயற்சியில் தீவிர பங்களிப்புச் செலுத்த வேண்டும். எனினும், தொழிற்சங்கப் போராட்டம் என்ற போர்வையில் அரசியல் ரீதியான தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் நாட்டை மென்மேலும் வீழ்ச்சியை நோக்கியே தள்ளும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி போன்ற சர்வதேச அமைப்புக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும்போது இதுபோன்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள் என்பன நாட்டுக்குப் பாதகமான தன்மையையே ஏற்படுத்தும் என்பதைத் தொழிற்சங்கங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாட்டில் எந்தவொரு தரப்பினருக்கும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை காணப்படுகின்றபோதும், அதற்கான தருணம் தற்பொழுது உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.