Home » ரணிலின் கயிற்றுப் பாலம்
வார இறுதிக் கேள்வி

ரணிலின் கயிற்றுப் பாலம்

by Damith Pushpika
May 12, 2024 6:00 am 0 comment

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக “கயிற்றுப் பாலத்தில்” பயணிப்பதற்குத் தயார் என அண்மையில் தெரண 360 நிகழ்ச்சியின் போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியதைத் தொடர்ந்து கயிற்றுப் பாலம் தொடர்பான கதை சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயிற்றுப் பாலம் அண்மைய காலங்களில் முதன் முதலில் பேசுபொருளாகியது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவாலாகும். அதுவும் அவர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி ஏற்றதன் பின்னராகும்.

2022 மே 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். மே 12ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவர் மே 16ஆம் திகதி பிரதமராக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் போது அவர் கயிற்றுப் பாலம் தொடர்பான கதையை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது பின்வருமாறாகும்.

“நான் ஆபத்தான சவாலைப் பொறுப்பேற்றிருக்கின்றேன். ஹுனுவாட்ட குறூஷா வேறொருவரின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கயிற்றுப் பாலத்தைக் கடந்தார். இது அதனை விடவும் கடினமான சவாலாகும். கீழ்ப்பகுதி ஆழமானது. அடிப்பகுதி தென்படவில்லை. பாலம் மெல்லிய கண்ணாடியால் ஆனது. கைப்பிடிகள் இல்லை. கழற்ற முடியாத இரண்டு பாதணிகள் என் கால்களில் உள்ளன. அதன் அடிகளில் கூர்மையான இரும்பு ஆணிகள் உள்ளன. நான் பிள்ளையைப் பாதுகாப்பாக மறுபக்கம் அழைத்துச் செல்ல வேண்டும். நாட்டின் நலனுக்காகவே இந்தச் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிநபரையோ, குடும்பத்தையோ அல்லது குழுவையோ காப்பாற்றுவது அல்ல. முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பதேயாகும். முழு நாட்டையும் காப்பாற்றுவது, நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதுமாகும். என் உயிரைப் பணயம் வைத்து இந்தச் சவாலை எதிர்கொள்கிறேன். இந்தச் சவாலை நான் வெற்றி கொள்வேன். அதற்கு அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை எனக்குத் தாருங்கள். நான் நாட்டுக்கான எனது பொறுப்பை நிறைவேற்றுவேன். அதுதான் உங்களுக்கு நான் வழங்கும் வாக்குறுதி.

அரசியல் தொடர்பில் ஆர்வமுள்ள சிலருக்குப் புரிந்துணர்வு இல்லாத போதிலும் குறூஷாவின் கயிற்றுப் பாலத்தைக் கடப்பது தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டிருப்பது ஹென்றி ஜயசேனாவின் ஹுனுவட்டவின் கதையில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஹென்றி ஜயசேனா 1967ஆம் ஆண்டில் ஜெர்மன் பிரஜையான பெர்டோல் பிரெக்ட்டின் Caucasian Chalk Circle என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தக் கதையை மேடையேற்றினார். நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டு, நாட்டை ஆட்சி செய்த அரசன் தோற்கடிக்கப்பட்டு மரணிக்கும் போது, ​​அரசனின் மனைவி ஆயம்மா உள்ளிட்ட அனைவரும் தனது குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடுகிறார்கள். குறுஷா அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கடினமான பயணத்திற்குப் பிறகு தனது சகோதரியிடம் சென்று குழந்தையைப் பாதுகாத்துக் கொண்டதோடு, குழந்தையைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற தாய் உள்ளிட்டவர்கள் குழந்தைக்கு உரிமை கோரி மீண்டும் வந்த கதையை மையமாக வைத்து இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது. குறூஷா கயிற்றுப் பாலத்தைக் கடந்தது குழந்தையைக் காப்பாற்றி தனது சகோதரியிடம் செல்வதற்காகும்.

ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் வழங்கப்பட்டுள்ள கடினமான பணி எவ்வளவு பாரதூரமானது என்பதை விளக்குவதற்கு குறூஷாவின் கயிறுப்பாலத்தை உதாரணமாகப் பயன்படுத்தியுள்ளார். அவர் மேற்கூறிய உரையில் நாடு எதிர்நோக்கும் நிலைமையை அவர் விவரித்த விதத்தில், அது பற்றிய யோசனையைப் பெற்றுக் கொள்ள முடியும். “நவம்பர் 2019ல், நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. ஆனால் இன்று திறைசேரியினால் ஒரு மில்லியன் டொலர்களைக் கூடத் தேடிக் கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் எரிவாயு இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கூட நிதி அமைச்சகத்தால் தேடிக் கொள்ள முடியவில்லை.

அன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கயிற்றுப் பாலத்தில் பயணிப்பதற்கு நேர்ந்த முறை தொடர்பான விடயங்களை சில தினங்களுக்கு முன்னர் அதாவது, 2024 மே 09ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதற்குள் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் பதவியை ஏற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, எரிவாயு ஏற்றுமதிக்காக செலுத்த வேண்டிய 5 மில்லியன் டொலர்களைக் கூட நிதி அமைச்சினால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2022 மே 16ஆம் திகதி அத்தியாவசியமான தேவைக்காக 5 மில்லியன் டொலர்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதிருந்த நாட்டில், இரண்டு வருடங்கள் கடக்கும் முன்பே தனது இருப்புக்களை 5000 மில்லியன் டொலர்களாக உயர்த்த முடிந்திருக்கின்றது. இவ்வாறான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், நெருக்கடிகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் தாம் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி இன்னும் கூறி வருகிறார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த மே 06ம் திகதி தெரண 360 நிகழ்ச்சியில் கலிந்து கருணாரத்ன மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற நேர்காணலின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன்.

அனுரகுமார: நாம் ஆட்சியைப் பெறுப்பேற்கும் போது இந்தக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் செய்யப்படாவிட்டால் நியாயமான கடன் மறுசீரமைப்பைச் செய்வதற்காக நாம் தலையிட வேண்டும்.

நாம் அந்தக் கயிற்றுப் பாலத்தில் சென்றோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுவாராயின், நாம் கயிற்றுப் பாலத்தில் நடுவில் இருக்கின்றோம். திரும்பி விழ முடியாது. இதிலேதான் நாம் இன்னும் சிறிது தூரத்திற்கு பயணிக்க வேண்டும்

அறிவிப்பாளர் – கயிற்றுப் பாலத்தின் மீதியைக் கடக்க வேண்டும் என நீங்கள் பொறுப்பேற்றுள்ளீர்கள்….

அநுரகுமார திசாநாயக்கா – இந்த மறுசீரமைப்பைச் செய்து கொள்ளாமல் இங்கிருந்து செல்ல முடியாது. இனி நாம் நிதித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முகாமைத்துவம் செய்து கொள்வதற்காக இந்த வழியில் செல்ல வேண்டும்.

அறிவிப்பாளர் – ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டால், அந்த இறுதி இணக்கப்பாடு இலங்கை அரசாங்கத்துடனும் கடன் வழங்கியவர்களுடனுமே இடம்பெற வேண்டும். உங்கள் அரசாங்கத்தின் கீழ் கடன் மறுசீரமைப்புக்கு செல்ல கடன் வழங்குபவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறில்லையானால் மீண்டும் நாம் வங்குரோத்து நிலைக்குள் செல்ல வேண்டி வரும்.

அநுரகுமார திசாநாயக்க – ஆம். நான் சொல்வது, நான் சொல்ல வருவது அதுவல்ல. நாம் எதிர்பார்க்கும் இணக்கப்பாடு இல்லை என்றால், மீண்டும் எமக்கு கடன் நெருக்கடி ஏற்படும். மீண்டும் நாம் கடன் மறுசீரமைப்புக்குள் செல்ல வேண்டி ஏற்படும்.

அறிவிப்பாளர் – அவ்வாறில்லாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் கடன் மறுசீரமைப்பு நிறுத்தப்படுமா?

அநுரகுமார திசாநாயக்க – இல்லை, அதனைச் செய்ய முடியாதே. நாம் எவ்வாறு அரசாங்கமாக இணங்கி, கடன் வழங்கியோர் இணங்கி, செலுத்தும் கால எல்லையில் இணக்கம் காணப்பட்டு, மீண்டும் நாம் சென்று இதனை விடச் சிறப்பான ஒன்றை வழங்குமாறு எம்மால் பிரேரிக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்க பயணிக்க ஆயத்தமான கயிற்றுப் பாலப் பயணத்தைத் தவிர, வேறு பயணம் இல்லை என்றும், தற்போது அநுரகுமார கயிற்றுப் பாலத்தில் பயணிப்பதற்கு ஆயத்தமானாலும், ரணில் விக்கிரமசிங்க கயிற்றுப் பாலத்தில் பயணித்து நாட்டை அக்கரைக்குக் கொண்டு சென்றுள்ளார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

மே மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, “சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கி அரசாங்கம் முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தை இப்போதுள்ள திசையிலேயே, அதே பாதையிலேயே நகர்த்திச் சென்றால்தான் இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை நிரந்தர ஸ்திரத்தன்மையாக மாற்ற முடியும்” எனத் தெரிவித்த விடயமும் நினைவுக்கு வருகின்றது.

சுனந்த மத்துமபண்டார
களனி பல்கலைக்கழகத்தின்
பொருளியல் பீடத்தின்
முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்

தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division