——-டாக்டர் ஜலீலா முஸம்மிலின் “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூல், 196 பக்கங்களில் 786 துளிப் பாக்களோடு அண்மையில் விரிந்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து வெளிவந்த “ஹைக்கூ 2020” (101 பன்னாட்டுக் கவிஞர்களின் 2020 ஹைக்கூக்கள் கொண்ட உலகளவிலான சாதனை நூல்), இலங்கையில் இருந்து வெளிவந்த”1000 முத்துக்கள்”(100பன்னாட்டுக் கவிஞர்களின் 1000 ஹைக்கூக்கள் கொண்ட நூல்) என்பவற்றை வடிவமைத்து வெளியீடு செய்த தமிழ் நெஞ்சம் அமின் ( தமிழ்நெஞ்சம் இதழ் ஆசிரியர், பிரான்சு) இந்த நூலையும் வடிவமைத்திருக்கின்றார்.
“ஹைக்கூ”, பாசோ என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட யப்பானியக் கவிவடிவம். மூன்று வரிகளில் 5-7-5 அசைகளில் அமைந்திருப்பது. உவமை, உருவகம் இல்லாமல், உணர்ச்சியை வெளிப்படையாகக் கூறாமல், மின்னலென ஈற்றடியில் ஒரு திருப்பத்தோடு அமைந்து ஆச்சரியமூட்டுவது. ஜென் தத்துவத்தை, இயற்கையைப் பாடுபொருளாக்கி எடுத்தியம்பும் ஒரு கவி வடிவமாமாகவே ஆரம்பத்தில் ஹைக்கூ அமைந்திருந்தது. மகாகவி பாரதியார் 1916இல் சுதேச மித்திரனில் எழுதிய கட்டுரை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹைக்கூ இப்போது மூன்று வரிக் கவிதையாக, பல்வேறு பொருட்களிலும் எழுதும் ஒரு கவி வடிவமாக, தமிழ் கவிதைப் பரப்பில் துளிப்பா என்ற பெயரில் பிரபலம் பெற்று வருகிறது. தமிழுக்கு வந்து சேர்ந்துள்ள “வரவுப்பா வடிவமாக” இலக்கிய ஆய்வாளர்கள் இதனைக் குறிப்பிடுவர்.
ஹைக்கூ பற்றிய இந்த முற் குறிப்புகளோடு டாக்டர் ஜலீலா முஸம்மிலின் “தூரிகை வரையும் மின்மினிகள்” நூலில் இடம் பெற்றுள்ள துளிப்பாக்களை எடுத்துப் பார்க்கின்ற போது இயற்கை, சமூக அவலம், மனித நேயம், முரண் என்ற பல்வேறு
பாடுபொருட்களில் அவை இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. “சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம்”என்று ஹைக்கூ கவிதைகளைக் குறிப்பிடுவதுண்டு. மூன்று வரிக் கவிதைக்குள் கருத்துச் செறிவையும், படிக்கும் போது ஒரு வியப்பையும் தருபவை அவை. ஜலீலாவின் துளிப்பா நூலிலும் இவ்வாறான கவிதைகள் விரவியிருப்பதை அவதானிக்கலாம்.
“எல்லா மதங்களும்
ஒரே வரிசையில்
கொரோனாப் புதைகுழிகள்”.
என்று அவர் தரும் கவிதை பொருள் அடர்த்தி மிக்கது. கொரோனா,வேற்றுமை வேலிகளை உடைத் தெறிந்ததை, சாதி, மத வேற்றுமைகளைத் தகர்த்ததை, ஏற்றத் தாழ்வுகள்,மமதைச் செருக்குகளை ஒழித்ததை சிறிய வரிகளில் தருகிறார் அவர்.
காட்சிகளை ஒரு கைதேர்ந்த படப்பிடிப்பாளனைப் போல நம்மனக் கண் முன் கொண்டுவரும் ஆற்றல் கொண்டவராக நாம் கவிஞரைப் பார்க்க முடிகிறது. சமூக அவலங்களை,
ஏழ்மையை, சுரண்டலைத் தன் பாவரிகளுக்குள் வடித்துக் காட்டுகிறார் கவிஞர்.
“குடிசை வீடு
படம் பிடித்துக் காட்டுகிறது
ஓடாத வெள்ளம்”
“பள்ளிச் சிறுமி
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
ஆலையின் தீக்குச்சிகள்”
“தொடரும் மழை
சிந்திக் கொண்டிருக்கும் ஏழைகளின் கண்ணீர்”
*உயரும் விலைவாசி
ஏழையை வருத்தும்
பொருட்களின் பதுக்கல்”
ஆடும்வரை ஆடுகின்ற நம்மையும் ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வைக்கிறது “தட்டான்” பற்றிய அவரின் துளிப்பா.
“சுழன்றடித்து விட்டு
இயக்கத்தை நிறுத்துகிறது
நிலத்தில் விழுந்த தட்டான்.”
இவ்வாறு, “தூரிகை வரையும் மின்மினிகள்” சமூகப் பெறுமானம் கொண்ட துளிப்பாக்கள் நிறைந்த தொகுதியாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
நூலில், அணிந்துரை, மூன்று வாழ்த்துரைகள், வாழ்த்துப்பா, ஆசியுரை, மகிழ்ந்துரை, என்று பல உரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்தனை உரைகள் அவசியம் தானா?
வாசகர்களின் சுயவாசிப்பு இன்பத்தை, இரசனையை இவை இடைஞ்சல் செய்யக் கூடும் என்பதால் எதிர்காலத்தில் அதிக உரைகளை தவிர்ப்பது நல்லதென்பதே நமது அபிப்பிராயமாகும்.
டாக்டர் ஜலீலா முஸம்மில் வைத்தியத் துறையில் 15 வருட கால அனுபவம் உடையவர். எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் நேசம் கொண்டவராக தமிழ் கவிதைத் துறையில் தொடர்ந்து இயங்குகின்ற படைப்பாளியாக அவர் மிளிர்கிறார். சமூக வலைத்தளங்களின் ஆதரவோடும், முக நூல் குழுமங்களின் உறுதுணையோடும் தன்முனைப் பா, லிமரிக்கூ போன்ற, வரவுப் பாவடிவங்களிலும் அக்கறை செலுத்தி வருபவர் அவர்.
ஈழத்தில் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வெளிவரவில்லை. சு.முரளீதரன் 1988ல் வெளியிட்ட முதலாவது ஹைக்கூ (கூடைக்குள் தேசம்) நூலிலிருந்து இற்றை வரை 15 க்கு உட்பட்ட நூல்களே வெளி வந்திருப்பதாக அறியக் கிடைக்கிறது. “தூரிகை வரையும் மின்மினிகள்” மூலம் ஈழத்து ஹைக்கூ நூலாசிரியர்கள் வரிசையில் இணைந்து கொள்கிறார் டாக்டர் ஜலீலா முஸம்மில்.
“ஒருதுளி தண்ணீர் கொண்டிங்
கோர்கடல் செய்யும் வித்தை,
ஒருமரந் தோப்பாய் மாறி
ஊர்நிழல் ஆகும் வித்தை..” தெரிந்தவராக கவிஞரின் துளிப்பா ஆற்றலைப் பாராட்டி வாழ்த்துரைப்பார் தமிழ்நெஞ்சம் அமின். அவரோடு இணைந்து கொண்டு நாமும் வாழ்த்துகிறோம்.
நூல்:- தூரிகை வரையும் மின்மினிகள்
வெளியீடு:- டாக்டர் ஜலீலா முஸம்மில்,ஏறாவூர்.
விலை:- ரூபா- 900/-
-பாவேந்தல் பாலமுனை பாறூக்-