வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது அந்த மக்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்குவதற்காக எம்முடன் முன்னின்று செயற்பட்டவர் யூ.எல்.எம்.பாருக். அதேபோன்று அவர் சிங்கள பெளத்த மக்களின் உள்ளங்களை வென்றவரென பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமரர் யூ. எல். எம்.பாரூக், பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அசோக்க ஜயவர்தன ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
“யூ.எல்.எம்.பாருக் ஆரம்பக்கட்டத்தில் எம்முடன் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சிரேஷ்ட உப தலைவராக இருந்து பல சேவைகளை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் தங்கி இருப்பதற்கு வீட்டு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்.
அத்துடன் அவர் கேகாலை மாவட்டத்திலிருந்து முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு அவருக்கு கிடைத்த சந்தர்ப்பம் யாராலும் மறக்க முடியாததாகும். ஏனெனில் அந்த சந்தர்ப்பம் அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக ஜனநாயகத்தை வெளிக்காட்டக்கூடிய தினமாக அமைந்திருந்தது.
ரஞ்சன் விஜேரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருக்கும்போது, தொகுதி ஒன்றில் கட்சி அமைப்பாளர் வெற்றிடம் ஏற்பட்டால், அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டியது, அந்த தொகுதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் பெண்கள் அமைப்பின் வாக்குகளால் தான் என அவர் ஒரு பிரேரணையை கொண்டு வந்திருந்தார்.
அந்த பிரேரணையின் நிறைவேற்றப்பட்ட பின்னர் முதலாவதாக அந்த தீர்மானத்தை ருவன்வெல்ல தொகுதியிலேயே செயற்படுத்தப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ருவென்வெல்ல தொகுதி அமைப்பாளராக இருந்த பி,சீ.இம்புலான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ஆளுநராக நியமிக்கப்பட்டபோது அந்த இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பி.சீ.இம்புலான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் யூ..எல்.எம்.பாரூக்கும் பிரேரிக்கப்பட்டனர்.
இதன்போது ருவன்வெல்ல தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்பின் வாக்களிப்பில் யூ.எல்.எம்.பாரூக் தெரிவானார். முஸ்லிம் மக்கள் ஒரு சதவீத்துக்கும் குறைவாக இருக்கும் அந்த தொகுதியில் இருந்து யூ.எல்.எம்.பாரூக் தெரிவாகி இருப்பதென்பது, அவர் சிங்கள மக்களுடன் மிகவும் அந்நியோன்யமாக இருந்தமையே காரணமாகும்” என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்