தமிழில், பேட்ட, மாஸ்டர், மாறன் படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் நடித்துள்ள ‘தங்கலான்’ அடுத்து வெளியாக இருக்கிறது. பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ படம் மூலம் நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்க இருக்கிறார். இவர், சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு பெண், கூலான கேங்ஸ்டராக நடிப்பதைப் பார்க்க சுவாரஸியமாக இருக்கும் இல்லையா? அதோடு நான் ஆக்ஷன் பயிற்சியும் பெற்றிருக்கிறேன். அதை வெளிப்படுத்துவதும் ஜாலியாக இருக்கும். ‘தங்கலான்’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அது கதையோடு இணைந்த ஆக்ஷனாக இருக்கும். அந்தப் படத்தில் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் ரிலீஸ் எப்போது என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
கவர்ச்சி உடைகளில் ஏன் அடிக்கடி போட்டோஷூட் எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு கிளாமர் பிடிக்கும் என்பதால் அதுபோன்ற உடைகளை அணிகிறேன். எனது திருமணம் பற்றிய கேள்விகள் வருகின்றன. அதைப் பார்ப்பதற்கு ஏன் இவ்வளவு அவசரம்? என்னுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்காக சென்னையில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தலாமா? இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.