இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் புகார் சுமத்தப்பட்ட நிலையில், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பிரதமரான தேவகவுடா, தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது பேரனும், கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி ஆக உள்ளார்.
மேலும், தற்பொது நடந்து வரும் இந்திய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 26- ஆம் திகதி வாக்களித்ததும் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு பறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் மீது கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதில் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள அந்தப்பெண், தன் மகளிடத்திலும் பிரஜ்வால் பலமுறை வீடியோ அழைப்பில் தகாத முறையில் பேசி, அச்சுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பல பென்டிரைவ்களில் பதிவு செய்யப்பட்டிருந்த 3000- இற்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகின. மேலும், பிரஜ்வால் மட்டுமின்றி அவரது தந்தை ஹெ.டி ரேவண்ணாவும் பலமுறை பாலியல் தொல்லை அளித்ததாக அப்பெண் புகார் தெரிவித்தார்.
கர்நாடகா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார். அதன் அடிப்படையில், சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், பிரஜ்வாலை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், இவ்வழக்கு குறித்து 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில பொலிசுக்கு உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளது.
பிரஜ்வால் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவரது பெரியப்பாவும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்திருந்தார். மேலும், “அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பா.ஜ.க கைவிரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து கூறியுள்ள அமைச்சர் அமித்ஷா, “பெண்கள் மீதான வன்முறைக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு மத்தியில் ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது குறிப்பில், பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இக்கட்சியின் சார்பில் பிரஜ்வால், ஹாசன் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இந்த நடவடிக்கையால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமித் ஷா இது குறித்து தெரிவிக்கையில், “பாலியல் குற்றம் புரிந்த யாருக்கும் பா.ஜ.க ஆதரவாக இருக்காது. அது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார் அமித் ஷா.
பிரஜ்வல் மீது பாலியல் புகார்கள் வெளியான உடனேயே நடவடிக்கை எடுக்காமல் வாக்குப்பதிவு நடந்து முடியும் வரை மாநில காங்கிரஸ் அரசு அமைதி காத்தது ஏன் என்ற கேள்வியும் இங்கு எழுப்பப்படுகின்றது.
காங்கிரசின் இந்த தாமதம்தான் பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல காரணமாக அமைந்தது என்று அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் கோபத்தை வெளிப்படுத்திய அமித்ஷாவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நன்றி கூறியுள்ளார்.
இதேவேளை பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் அரசியல் வட்டாரத்திலும் இவ்விவகாரம் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தற்போது அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு.
அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் அவருக்கு எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ ஒட்டப்படவுள்ளது.
ஹோமம் நடத்திய ரேவண்ணா:
பாலியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா ஹோலநரசிப்பூரில் உள்ள தனது வீட்டில் ஹோமம் நடத்தியுள்ளார். அர்ச்சகர்கள் முன்னிலையில் வீட்டில் நடத்தப்பட்ட ஹோமத்தில் ரேவண்ணா மற்றும் அவரது மனைவி பவானி ஆகியோர் சடங்குகள் செய்துள்ளனர். சடங்குகளை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த அவர், “சதி திட்டத்தால் எங்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அனைத்தைப் பற்றியும் விரைவில் வெளியே பேசுவேன்” என்று கூறினார்.
பிரஜ்வல் மட்டுமன்றி அவரது தந்தை ரேவண்ணாவும் விசாரணைக்கு ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு அழைப்பாணை அனுப்பி இருந்தது. இருவருமே விசாரணைக்கு ஆஜராகாததால் அவகாசம் கேட்ட பிரஜ்வல் கோரிக்கையை நிராகரித்தது சிறப்பு புலனாய்வு குழு.
ஆபாச வீடியோக்கள் வெளியானவுடன் ஜெர்மனி தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்ய பொலிஸ் திட்டமிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணியான ம.ஜ.த. எம்.பி.யுமான பிரஜ்வல் 300 பெண்களை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
எஸ்.சாரங்கன்