“ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் நோக்கங்களை ஒருபுறம் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து முயற்சித்தால் மாத்திரமே தொழிலாளர்களின் நீண்ட கால சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க முடியும்.”
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை நீண்ட கால பிரச்சினைக்கு கிடைத்த தீர்வாக நம்பிக்கை வெளிப்படும் போது அது தொடர்பான சில சந்தேகங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
காலங் காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டு விட்டதா? இனி அவர்களுக்கு மாதாந்தம் 1700 ரூபா சம்பளம் கிடைக்குமா?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் கொட்டகலையில் வைத்து பல்லாயிரம் மக்கள் மத்தியில் வழங்கிய வாக்குறுதி நிறைவேறுமா?
அதற்கு முந்தைய தினத்தில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு இணங்க தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட கால இந்த சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டு விட்டதா?
அல்லது சில தொழிற்சங்கங்கள், மலையகம் சார்ந்த அறிவிலிகள் தெரிவிப்பது போல இதுவும் எதிர்வரும் தேர்தலை இலக்காக வைத்து மலையக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையா? இத்தகைய கேள்விகளுக்கு பதில் புதிராகவே உள்ளது. ஜனாதிபதியின் அறிவிப்பு மற்றும் வர்த்தமானி வெளியீட்டையடுத்து அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், மலையகம் சார்ந்த சில அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட இது நடக்கின்ற காரியம் அல்ல. வெறும் கண் துடைப்பே என விமர்சனங்களை அள்ளி வீசி வருவதைக் காண முடிகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். இப்போது விமர்சனங்களை அள்ளி வீசி வருபவர்கள் சிலர் அப்போதும் அமைச்சுப் பதவிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபாவைக்கூட பெற்றுக் கொடுக்க அவர்களால் முடியவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
அப்போது பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக இருந்தவரே, அதில் அக்கறை காட்டவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். .
எவ்வாறெனினும் இறுதி அறிவிப்புக்குப்பின் சாதக, பாதகமான விமர்சனங்களுக்கு மத்தியில் எமக்குள்ளும் எழுகின்ற கேள்வி, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டு விட்டதா? அடுத்த மாத சம்பளத்தில் அது கிடைத்து விடுமா? என்பதுதான்.
அரசாங்கம் எதனை அறிவித்தாலும் ஜனாதிபதி வாக்குறுதிகளை வழங்கினாலும் வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர்கள் கம்பெனிகள் அல்லது முதலாளிமார் சம்மேளனமே.
இத்தகைய வாக்குறுதிகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புக்குப் பின்னரும் அவர்களிடமிருந்து உடனடியாகவே வெளியிடப்பட்ட செய்தி இந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது. அதற்கு சாத்தியமில்லை என்பதுதான்.
அந்த சம்மேளனத்தின் பேச்சாளர் ராஜதுரை அதற்கு பல்வேறு சாக்குப் போக்குகளையும் முன் வைத்தார். உற்பத்தி செலவு அதிகரிப்பு, இலங்கைத் தேயிலையின் அதிகரித்த விலை என அதற்கு காரணம் காட்டுகின்றார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களும் தொழில் ஆணையாளரும் சம்பள நிர்ணய சபையும் எனத் தொடர் பேச்சுவார்த்தைகளை அண்மைக்காலமாக நடத்தினர். அந்த பேச்சுவார்த்தைகள் எந்தவித தீர்வும் இன்றி முடிவுக்கு வந்தன.
அதன் பின்னர் ஜனாதிபதியே தலையிட்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு தோட்ட கம்பெனிகளுக்குப் பணிப்புரை வழங்கினார். அதனை அடிப்படையாக வைத்து அதற்குப் பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்ட கம்பெனிக்காரர்கள் பங்கு பற்றவே இல்லை. அதற்கான உத்தியோகபூர்வமான காரணத்தையும் அவர்கள் அறிவிக்கவில்லை. இது அவர்கள் அந்த விடயத்தில் எந்த அளவில் அக்கறை காட்டுகின்றார்கள் என்பதை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
இதன் மூலம் நாம் ஒன்றை குறிப்பிட முடியும். தோட்டக் கம்பெனிகள் இன்னும் கூட்டு ஒப்பந்த சம்பள அதிகரிப்பு சிந்தனையிலிருந்து வெளிவரவில்லை.
அவர்களைப் பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை அதிகரித்து விட்டு தமது பிரச்சினை முடிந்து விட்டதாக நினைப்பதே. தற்போது சுமார் 70வீத சம்பள அதிகரிப்பை கோரும்போது அவர்களுக்கு அதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாமல் உள்ளது. அண்மைய பேச்சுவார்த்தைகளிலும் ஜனாதிபதியின் அறிவிப்பிலும் அவர்கள் இணங்காதமைக்கு இதுவே முக்கிய காரணம்.
புதிய அறிவிப்பின்படி அடிப்படைச் சம்பளம் 1350 ரூபா தான். அதற்கும் கூட அவர்கள் இணக்கம் தெரிவிப்பதாகத் தெரியவில்லை.
அந்த வகையில் இந்த 35 வீத அதிகரிப்பு பற்றி கூட கவனம் செலுத்தாது, அவர்களின் அந்த 20 வீதம் என்ற சிந்தனையிலேயே அல்லது முடிவிலேயே அவர்கள் இன்னும் நிற்கின்றார்கள் என்றே கூற முடியும். தொழில் ஆணையாளரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானியின் அடிப்படையில் பார்த்தால் 1350 ரூபாவே அடிப்படைச் சம்பளமாக குறிப்பிடப்படுகின்றது. இந்த 35 வீத சம்பள அதிகரிப்புக்கு கம்பெனிக்காரர்கள் இணங்கவில்லை. அப்படியானால் 1,200 ரூபா என்ற சம்பள அதிகரிப்பிலேயே அவர்கள் நிற்கின்றனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் எதிர்க்கருத்துக்கள் அல்லது விமர்சனங்களை தெரிவித்து வருபவர்களின் கூற்றுக்களை கவனித்தால், சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவித்தலை மக்கள் மத்தியில் ஜனாதிபதி வெளியிட்டாலும் வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளரினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் அவதானமாகவே கையாளப்பட்டுள்ளன.
தொழில் ஆணையாளரினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியை வெளியிடுவது அவரது கடமையும் பொறுப்புமாக இருக்கலாம்.
ஆனால் அதற்கு முதலாளிமார் சம்மேளனம் கட்டுப்படுமா? என்பது ஒரு கேள்வி. அது ஒரு புறமிருக்க இது நீதிமன்ற உத்தரவைப் போன்று வலிமையான ஒன்றல்ல என்பதும் விமர்சனங்களை முன்வைப்போரின் கூற்றாகும். அதில் சம்பள அதிகரிப்பினை நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தாலும் சம்பள அதிகரிப்பினை வழங்க உத்தேசித்துள்ளதாகவே ஒரு சொல்லை அவர் பயன்படுத்தியிருப்பதாகவும் அந்த சொல்லை அவர் மிகவும் சிந்தித்தே பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
1700 ரூபா சம்பளத்தை வழங்குவதாகவோ அல்லது அதற்கான உத்தரவை கம்பெனிக்காரர்களுக்கு வழங்குவதாகவோ அதில் உறுதியாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் விமர்சனங்கள் முன்வைப்போரின் கருத்தாகும். உண்மையில் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரமும் அவருக்கு கிடையாது.
1350 சம்பளத்துடன் 350 ரூபா இதரக் கொடுப்பனவாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டாலும், அந்த 350 ரூபாய் எந்த அடிப்படையில் அல்லது எதற்காக வழங்கப்படுகிறது? அதனை தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் பெற்றுக் கொள்ள முடியுமா? அதற்கான வாய்ப்புகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் உள்ளனவா? என்ற கேள்விகளெல்லாம் எழுப்பப்படுகின்றன.
1700 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி கடந்த டிசம்பர் மாதத்திலேயே அறிவித்துவிட்டார். அது தொடர்பில் கம்பெனிக்காரர்கள் எந்தளவு கவனம் செலுத்தியுள்ளனர் என்பதற்கு அதற்கு அடுத்து வந்த இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தைகளிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதிலிருந்தே புரிகிறது.
“நெல்லை யார் குற்றினாலும் பரவாயில்லை அரிசியானால் சரி”
சில மலையகத் தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி கொண்டாடி விட்டார்கள். அந்த மகிழ்ச்சியும் எண்ணமும் உண்மையாக வேண்டும்.
மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் யார் எந்த விதமான அரசியலையும் மேற்கொள்ளட்டும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு என்று வரும்போது அவர்களது உண்மையான பிரதிநிதியாக பெருந்தொட்டப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது முக்கியம்.
அவ்வாறு செய்யப்பட்டால் மாத்திரமே அப்பாவி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மட்டுமின்றி அவர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
அவர்கள் மத்தியில் இம்முறை ஆழமான நம்பிக்கை வேரூன்றியுள்ளது. விமர்சனங்களை முன் வைப்போர் தெரிவிப்பது போல இந்த முறையும் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாந்து விடக்கூடாது. அதில் அனைவரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் 1700 ரூபா என்பது ஒரு குடும்பத்தைக் கொண்டு செல்லக்கூடிய தொகை கிடையாது. என்றாலும் அதனையாவது அந்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்க இப்போதாவது அனைவரும் இணைந்து செயற்படுவது முக்கியம்.
மறுபக்கம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான வர்த்தமானி, நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் அறிவிப்பு மற்றும் பணிப்புரை ஆகியவற்றை மீறி அல்லது அலட்சியப்படுத்தி தோட்டக் கம்பெனிகள் செயல்படுமானால் அதனை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மலையக பெருந்தோட்டங்களின் முகாமைத்துவம் தொடர்பில் பழைய முறைமைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் மாற்று முறைமை ஒன்றுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்து.
லோரன்ஸ் செல்வநாயகம்