தமிழ்நாட்டில் மூன்று தலைமுறை தேசிகர் என்ற ஓதுவார் பாரம்பரியமிக்க தெய்வத் தமிழிசை அறிஞர் “முனைவர்” திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் 12ஆம் திகதி கொழும்பு வருகின்றார். தமிழக தொலைக்காட்சி மற்றும் வானொலியின் அனுபவமிக்க தமிழிசை அறிஞரான இவர், தெய்வத்தமிழிசை அறிஞர், திருமுறை கலைக்களஞ்சியம், பண்ணிசைச் செல்வர், சிறந்த தமிழ்பண் இசைப்போன், பண்பாட்டு விருது, தேவார இசைமணி, முனைவர் (டாக்டர் பட்டம் தமிழில்) ஆகிய இசைப் புலமை விருதுகளையும், சைவசமயப் புரட்சியாளர், சைவத்தமிழ் சுடர்மணி, குமரகுருபரர் விருது ஆகிய இயல் புலமை விருதுகளையும் பெற்றவர்.
திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்பு பேரவை என்ற பேரியக்கத்தின் நிறுவனத் தலைவரான இவர், உலகின் முன்னோடியான சைவசமயத்தையும், செந்தமிழையும், அவரது பேரியக்கத்தின் மூலம் இரண்டு மாநாடுகளையும் பல பொது நிகழ்ச்சிகளையும் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தன்மையாகவே, சைவசமய துறையிலும் தலைமையேற்று இசை நிகழ்ச்சியும், சமய சொற்பொழிவும் நடத்தி வருகின்றார்.
இறைவன் வகுத்த சோதிட சாத்திரத்திலும் புலமை பெற்று, 33 ஆண்டுகால ஜோதிட சாத்திர அனுபவமிக்க வாகீசர் ஜோதிட ஆய்வு மையம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்திய ஜோதிட வரலாற்றில், தமிழ்நாட்டு முதலமைச்சரை துல்லியமாக தேர்வு செய்த ஒரே ஜோதிட வல்லுநர் இவர்.
கொழும்புக்கு வருகை தரும் இவர், கொழும்பு ஜிந்துப்பிட்டி, ஸ்ரீ சிவசுப்ரமணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் மகோற்சவங்களில் கலந்துகொண்டு பண்ணிசை பாடி முருகனைப் போற்றி துதிக்க இருக்கின்றார்.
அத்துடன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் பண்ணிசைப் பயிற்சியை வழங்க இருக்கின்றார்.
-எச்.எச்.விக்கிரமசிங்க