2024ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல் வருடம் என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், ஐந்து வருடங்களின் பின்னர் மேதினக் கூட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதன் பின்னர் கொவிட் தொற்றுநோய், அதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு காரணங்களால் இலங்கையில் களையிழந்து போயிருந்த மேதினக் கூட்டங்கள் ஐந்து வருடங்களின் பின்னர் மக்களின் அதிக பங்கேற்புடன் களைகட்டியிருந்தன.
தேர்தலுக்கான தயார்படுத்தல்களை ஏற்கனவே ஆரம்பித்திருந்த அரசியல் கட்சிகள் மக்கள் தம்முடன் இருக்கின்றனர் என்பதைக் காண்பிக்கும் வகையில் அதிக மக்கள் கூட்டத்தைச் சேர்ப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தன.
உழைப்பாளர்களுக்கான மேதினம் உலகம் முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்ட போதும், இலங்கையில் நடைபெற்ற மேதினக் கூட்டங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை விட அதிகம் அரசியல் பேசப்பட்டதா என்ற கேள்வியே காணப்படுகின்றது. உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் பல தசாப்தங்களாக நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை. இவ்வாறான பின்னணியில் தேர்தல் நெருக்கும் காலம் என்பதால் இம்முறை மேதினக் கூட்டங்கள் அரசியல் பிரசாரக் கூட்டங்கள் போன்று மாறியிருந்ததையும் காணமுடிந்தது.
அடுத்தடுத்து நடைபெறக் கூடிய தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமது மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. அதிலும் கொழும்பு மாவட்டத்திலேயே பிரதான கட்சிகள் தமது மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான மேனதிக் கூட்டம் மாளிகாவத்தையிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் கொழும்பு புறக்கோட்டையிலும், பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் பொரளையிலும், தேசிய மக்கள் சக்தியின் பிரதான கூட்டங்கள் மாத்தறை மற்றும் கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையேற்றிருந்ததுடன், கடந்த தேர்தல்களில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்திருந்த அக்கட்சியின் கூட்டத்துக்கு கணிசமான கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
நாட்டை சவாலான சூழ்நிலையிலிருந்து மீட்டெடுத்துக் கொண்டமையை இங்கு மீண்டும் நினைவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
தன்னை சர்வாதிகாரி என சிலர் விமர்சிக்கின்றபோதும் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் மேதினக் கூட்டங்களை நடத்துவதற்கான சூழலைத் தன்னால் ஏற்படுத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
‘மிகவும் சிரமப்பட்டே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தினால் அந்த பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்வதா? அல்லது நாட்டை 2022 இல் இருந்த நிலைக்கு கொண்டுச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடாதென கேட்டுக்கொள்கிறேன்.
வேலைத்திட்டத்திற்கு இடையூறு செய்யவும் வேண்டாம். இந்த நிலையைப் பாதுகாக்க மக்களைப் பற்றிச் சிந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்’ என ஜனாதிபதி ஐ.தே.க மேதின மேடையில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் உரையாற்றிய ஏனையவர்கள் தமது கட்சியின் எதிர்கால அரசாங்கம் குறித்த கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதேபோல, பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கட்சியின் மேதின மேடையில், “ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார்” என்றும், எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதற்குத் தமது கட்சியின் ஆதரவு முக்கியமானது என்றும் கூறினார்.
தமது வேட்பாளர் யார் என்பது சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை ஏனையவர்கள் ஜனாதிபதியாகக் கனவுகாண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் இம்முறை மேதினக் கூட்டம் முக்கியமானது என்றே கூற வேண்டும். கடந்த காலத்தில் அவர்களின் கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு ஏற்பட்டது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக பொரளை கம்பல் மைதானத்தை நிரப்பும் அளவுக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்திருந்தனர். எதிர்காலத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடிய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு இந்த மேடை முக்கியமானதாக இருந்தது.
மறுபக்கத்தில், பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பிரபல வர்த்தகரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா மேடையின் முன்வரிசை ஆசனத்தில் பசில் ராஜபக்ஷவுக்கு அருகில் அமர்ந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இதன் மூலம் அக்கட்சி மறைமுகமான செய்தியொன்றை வெளியிட்டிருப்பதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது இவ்விதமிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் தாம் அமைக்கும் அரசாங்கத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றியே அதிகம் பேசியிருந்தார். அடுத்த தேர்தலில் தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்து உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடிக்கு முன்னர் 10 முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறப்பட்டதாகவும், 2018 அரசியலமைப்பு நெருக்கடிக்குப் பிறகு தனக்கு 61 முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், நாட்டை வழிநடத்துவதற்கு குறுக்குவழிகளை மேற்கொள்ள தாம் தயாராக இல்லை என்றும், விரைவில் தமது அரசாங்கம் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணை, புத்திசாலி விவசாயிகள் மற்றும் மீனவர்களை உருவாக்குதல், முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலிக்கன் வேலி வகை ஐ.டி மண்டலங்களை உருவாக்குதல் போன்ற உறுதிமொழிகளும் இங்கு அவரால் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன. மாத்தறை மற்றும் கொழும்பில் நடைபெற்ற இரண்டு மேதினக் கூட்டங்களிலும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை அநுரகுமார சாடியிருந்தார். விவாதத்துக்கு வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருக்கின்றபோதும், விவாதத்துக்கான திகதியை வழங்கிய பின்னர் வரவில்லை.
விரைவில் பொதுவிவாதத்தை நடத்தி அவர்களின் பிரச்சினையை முடித்து வைத்துவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தேவையான மாற்றத்தைக் கொண்டுவர தமது கட்சி தயாராக இருப்பதாகவும், தம்மைத் தெரிவுசெய்வதற்கு மக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அநுரகுமார திஸநாயக்க, நாட்டில் பல தசாப்தங்களாக காணப்படும் அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் இதுவென்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற பிரதான கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் எதிர்கால அரசியல் பற்றியும், தேர்தலின் பின்னர் ஆட்சி அமைப்பது யார் என்பது போன்ற ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களே முன்வைக்கப்பட்டன.
இவற்றின் அடிப்படையில் வைத்துப்பார்க்கும்போது அடுத்த தேர்தல்களுக்கான கயிறுழுத்தல் அதாவது மக்கள் தம்பக்கம் இருக்கின்றனரா என்பதற்கான பரிசோதனை முயற்சி போலவே தெரிகின்றது. மக்கள் பற்றியோ அல்லது தொழிலாளர் வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான விடயங்கள் பற்றியோ எவ்வித கருத்துக்களோ அல்லது பேச்சுக்களோ இடம்பெறவில்லை.
அதேநேரம், இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் கம்பஹாவில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த மேதினக் கூட்டத்தில் அவர்கள் தரப்பினரால் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தரப்பிலான மற்றைய அணியினர் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லையென்பதுடன், அவர்கள் தரப்பில் தனியான மேதினக் கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவுமில்லை.
மலையகக் கட்சிகளின் மேதினக் கூட்டங்களிலும் அதிக மக்களைக் காணக்கூடியதாகவிருந்தது. கொட்டகலவில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
அதேநேரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் தலவாக்கலையில் நடைபெற்றதுடன் இதில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா கிடைக்கும் என ஜனாதிபதி இங்கு உறுதிமொழி வழங்கினார். சம்பள அதிகரிப்புத் தொடர்பில் கம்பனிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதபோதும், ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மேதினக் கூட்டங்களை கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்கும், தாம் யாருக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டன.