மலையக தோட்டத் தொழிலாளர்கள் தற்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக கடந்த மேதினத்தன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்து தொழிலாளர்கள் தங்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதன் பின்னர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கேற்ப ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் தோட்டத் தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்டன. எனினும் அக்கோரிக்கை நிறைவேறவில்லை.
ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துன்பங்களையும், அவர்களது நியாயமான வேண்டுகோளையும் உரியபடி கவனத்திலெடுத்து, 1700 ரூபா நாளாந்த சம்பள அறிவிப்பை கொட்டகலை மேதினக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மீது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வைத்து நம்பிக்கை தற்போது நிறைவேறியிருக்கின்றது.
இலங்கையில் இரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் சமூகத்தைப் பொறுத்தவரை இதனை வரலாற்று சாதனையாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. இத்தனை தொகை சம்பள அதிகரிப்பென்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை. ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை ‘மகிழ்ச்சியான அதிர்ச்சி’ ஆகும்.
இலங்கையில் இரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள மலையக தோட்டத் தொழிலாளர்களின் அவலங்கள் தீர்த்து வைக்கப்பட வேண்டியவையாகும். நாட்டில் ஏனைய சமூகங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்துள்ள போதிலும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் குன்றிய நிலையிலேயே இன்னும் உள்ளது. அன்றாட வருமானம் மிகவும் குறைவாக இருப்பதே அவர்களது வாழ்க்கைத் தரம் முன்னேறாமைக்குரிய காரணமாகும்.
1700 ரூபா சம்பளம் என்பது பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். இவ்விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பங்களிப்பும் பாராட்டுக்குரியதாகும். இ.தொ.கா மாத்திரமன்றி, அரசுக்கு ஆதரவான ஏனைய தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வு விடயத்தில் அரசுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனவென்பதை மறுப்பதற்கில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களது கோரிக்கைக்குக் கிடைத்த பெருவெற்றி இதுவாகும். இக்கோரிக்கையை செவிமடுத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு தோட்டத் தொழிலாளர்களின் நன்றி என்றும் உரியதாகும்.