உலக வரலாற்றின் அதிகமான காலம் ஆட்சியாளரது கொள் கைகளுக்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பு உணர்வுகளும் சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது நாடுகளுக்குள் நிகழ்வது மட்டுமல்லாது நாடுகளைக் கடந்தும் அதிக போராட்டங்கள் நிகழ்கின்றன. காஸாவில் நிகழும் ஆக்கிரமிப்புக்கும் படுகொலைகளுக்கும் எதிராக, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களது போராட்டங்கள் அமெரிக்காவை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அதிலும் அமெரிக்க ஆட்சியாளர்களது இஸ்ரேலிய ஆதரவுக்கு எதிரான போராட்டங்கள் அடிப்படையில் ஜனநாயக் கட்சியின் தேர்தல் இருப்பினை சீர்குலைக்கக் கூடியதென்ற அச்சம் அவர்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியுள்ளது. அதற்கு குடியரசுக் கட்சி வழங்கிய ஆதரவும் அதன் மரபார்ந்த தேர்தல் வாய்ப்புக்களை பாதிக்கத் தொடங்கியுள்ளது. மாணவர்களது எழுச்சியானது உலகளாவிய அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததொன்றாகவே உள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எழுச்சியடைந்துவரும் மாணவர்களின் எதிர்ப்புப் போராட்டங்களை தேடுவதாக உள்ளது.
காஸா மீதான இஸ்ரேலியப் போரை நிறுத்துமாறான கோரிக்கையை முதன்மைப்படுத்திக் கொண்டு அமெரிக்காவிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் போராடி வருகின்றனர். கொலம்பியாப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி தொடங்கப்பட்ட போராட்டம் அமெரிக்க நகரங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தீவிர போராட்டமாக நிகழ்கின்றது. கடந்த சில தினங்களாக நிகழ்ந்துவரும் மாணவர்களது போராட்டம் சிகாகோ, பிரான்ஸ்சிஸ்கோ, நியூயோர்க், மற்றும் கலிபோர்ணியா நகரங்களில் அமைந்துள்ள கொலம்பியா, ஹார்வாட், யேல், ஐவி லீக், தெற்கு கலிபோர்ணியா, டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் இரண்டுக்கு மேற்பட்ட வாரங்களாக நீடிக்கும் போராட்டமாக மாறியுள்ளது.
பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. இதேநேரம் கடந்த 30.04.2024 அன்று கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களது போராட்டம் தீவிரமடைந்து பிரதான கட்டடத் தொகுதியை கைப்பற்றி அதனைக் கட்டுப்படுத்தியதுடன் அமெரிக்க கொடியை இறக்கி, பலஸ்தீனக் கொடியை கம்பத்தில் பறக்கவிட்டு போராட்டத்தின் திசையை முதன்மைப்படுத்தினர். ஹாமில்டன் அரங்கை கைப்பற்றிப் போராட்டத்தை நிகழ்த்திய மாணவர்களை கட்டுப்படுத்த, நியூயோர்க் காவல்துறையினர் அழைக்கப்பட்டு தீவிர முயற்சியின் பின்னர் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் கட்டத் தொகுதி பொலிஸாரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து ஏனைய பல்கலைக்கழகங்களில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நகர்வில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே சந்தர்ப்பத்தில் பலஸ்தீன ஆதரவுத் தரப்பு மாணவர்களால் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் நியூயோர்க் பொலிஸாரின் ஆதரவுடன் இஸ்ரேலிய ஆதரவு அணியினரால் தகர்க்கப்பட்டதுடன் இரு தரப்புக்கும் இடையில் பாரிய மோதல் நிகழ்ந்துள்ளது. கறுப்பு உடையணிந்த யூத ஆதரவாளர்களால் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மறுபக்கத்தில் மாணவர்களுக்கும் உள்ளூர் அரசியல் மற்றும் பல்கலைக்கழக உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நிகழ்வதாகவும் பல பல்கலைக்கழகங்களில் பொலிஸார் அழைக்கப்பட்டு போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவருகிறது.
இதேநேரம் யூதர்களுக்கு எதிரான இனவாத உணர்வுகள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த கூடிய நடவடிக்கைகள் வேண்டும் எனவும் தேசிய அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். ஒருவகையில் மாணவர்களது பலஸ்தீன போராட்டத்தினால் அமெரிக்காவின் உள்ளூர், பிராந்திய, சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தீவிரமாக பரவிவரும் போராட்டங்களை ஏன் அமெரிக்க அரசாங்கம் அடக்க வேண்டுமென கருதுகிறது. இதனை விரிவாக ஆராய்வது அவசியம்.
முதலாவது, காஸா மீதான இஸ்ரேலியப் போர் உலக வரலாற்றை மாற்றத்திற்குள் தள்ளக்கூடியது. இந்தப் போரை என்ன விலை கொடுத்தேனும் இஸ்ரேல் மேற்கொள்ளும். அதனை எந்த சக்தியாலும் இலகுவில் தடுத்துவிட முடியாது. இது இஸ்ரேலுக்கு மட்டும் உரிய போரல்ல. இது அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தின் போர். இதன் மூலம் பிராந்திய அரசியல் மட்டுமல்லாது முழு உலகத்தினது அரசியல், பொருளாதார, இராணுவப் பரிமாணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. அதனை அடைவதே அமெரிக்க- இஸ்ரேலிய- ஐரோப்பிய மற்றும் இந்தியாவினது கூட்டின் எதிர்பார்க்கையாகும். இந்தியாவும் இஸ்ரேலியக் கூட்டின் வடிவமாகவே உள்ளது. மிகத் தெளிவாக, உலக ஒழுங்கில் புதிய அணியொன்றின் அடையாளம் சாத்தியமாகியுள்ளது. அது இஸ்ரேல்- பலஸ்தீன போரை மையப்படுத்தி வடிவமாகிறது. அதில் இந்தியா மிகத் தெளிவாக இஸ்ரேல்- அமெரிக்கா- ஐரோப்பிய சக்திகளுடன் கைகோர்த்துள்ளது. எனவே, இந்த அணியின் உலகளாவிய அரசியலை கட்டமைக்கும் போராக இஸ்ரேல்- ஹமாஸ் போர் காணப்படுகிறது. இரண்டாவது, மேற்குறித்த அணியின் நகர்வுகள் அனைத்துமே சீனாவின் பட்டுப் பாதையை உடைப்பதற்கான உத்தியாகவே தென்படுகிறது. சீனாவின் புதிய பட்டுப்பாதை மேற்காசிய நாடுகளை பலமாக இணைப்பதாக அமைந்திருந்தது. அது மட்டுமன்றி, போர் தொடங்குவதற்கு முன்னர் சவுதி அரேபியாவும் ஈரானும் துருக்கியும் சீனாவின் முயற்சியால் கைகோர்த்திருந்தன. அத்தகைய கைகோர்ப்பானது பட்டுப் பாதையை பலப்படுத்துவதுடன் பிராந்திய ரீதியில் சீனாவின் இருப்பை வலுவானதாக்கும் நகர்வாகவே அமைந்திருந்தது. போர் மீளவும் ஈரானுக்கு எதிரான சக்திகளாக, கட்டாரையும் சவுதி அரேபியாவையும் கொண்டுவர உதவியுள்ளது. அத்தகைய அமெரிக்க- இஸ்ரேலிய நகர்வு சீனாவின் பட்டுப்பாதையை தகர்ப்பதாகவே அமைந்துள்ளது. சீனா, உலகத்தை பட்டுப்பாதை ஊடான வர்த்தக மார்க்கத்தினாலேயே இணைப்பதில் முனைப்புக் கொண்டிருந்தது. அதனையே, மென்அதிகார வரம்பெனவும் சீனா அடையாளப்படுத்தியிருந்தது. அதனை இஸ்ரேலியப் போர் தகர்த்துள்ளது. அதற்கான உதவிகளை அமெரிக்கா வழங்குவதென்பதும் மேற்குலகம் இஸ்ரேலுடன் அணிசேர்வதென்பதும் தவிர்க்க முடியாதது. மூன்றாவது, சீனா தனது கடற்படையை டியப்டியில் நிறுவியுள்ளது. அதனை விஸ்தரிக்கவும் ஏடன் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் சீனாவின் கடற்படையை வலுப்படுத்தவும் அண்மைக் காலமாக சீனா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க புலனாய்வுத் துறை குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தென்- மேற்கு இந்து சமுத்திரத்தின் கடற்பகுதியில் சீனாவின் கை ஓங்குமாயின், அமெரிக்காவின் டியாகோ கார்சியாவுக்கு அதிகமான நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை, மாலைதீவு, மியான்மார் கடற்பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்களை சீனா தனதாக்கியுள்ளது. அதனால் இந்து சமுத்திரத்தின் வடக்குப் பகுதி கணிசமாக சீனாவின் செல்வாக்குக்குள் உள்ளது. இத்தகைய சீனாவின் கடலாதிக்க உத்தியையும், இஸ்ரேலிய- ஹமாஸ் போரினால் தகர்த்தெறிய முடியும் என அமெரிக்கா கருதுகிறது. எனவே இந்தப் போர் அமெரிக்காவினதும் அதன் கூட்டணியினதும் உலகளாவிய இருப்புக்கு அவசியமானது. அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டம் அத்தகைய வாய்ப்பினைத் தகர்த்துவிடும் என அமெரிக்க ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அதனால் அத்தகைய முடிவைத் தோற்கடிப்பதே ஒரே வழியென் அமெரிக்கா கருதிச் செயற்படுகிறது. நான்காவது, வியட்நாம் போரின் போது அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மீளவும் ஏற்பட்டுவிடக் கூடாது, என்பதில் அமெரிக்க நிர்வாகம் கவனமாக உள்ளது.
காரணம் அனேக அமெரிக்க ஊடகங்களும் எழுத்துகளும் வியட்நாம் போரின் போது அமெரிக்காவில் எழுந்த எழுச்சி போன்றே தற்போது காணப்படுவதாக குறிப்பிடுகின்றன. அத்தகைய நிலை ஏற்படுமாயின் அதனால் அமெரிக்காவின் எதிர்கால இலக்குகள் தகர்ந்து போய்விடும் என, அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது. எனவே, அதனை முறியடிக்க போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருப்பதாக தெரியவில்லை.
உலகளாவிய ரீதியில் அனைத்து போராட்டங்களுக்கு அடிப்படையான ஜனநாயமும், மனித உரிமையும் அரசுகளின் நலன்களுக்குள்ளால் நசுக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் மரபாகவே உள்ளது. அரசுகளின் நலன்களுக்குட்பட்டதே ஜனநாயமும் மனித உரிமையும்.
எனவே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எழுச்சியடைந்துவரும் மாணவர்களது ஆதரவான போராட்டங்கள் போரை நிறுத்துவதைவிட தனியரசுக்கான வாய்ப்பினை பலஸ்தீனத்திற்கு ஏற்படுத்தும் என்ற எதிர்பார்க்கை வலுவானதாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இரு நாட்டுத் தீர்வுத்திட்டத்தை அதிகம் முதன்மைப் படுத்துகின்றன.
அத்தகைய பலஸ்தீனத்திற்கான தனியரசும் அமெரிக்க கூட்டணி நாடுகளின் தயவிலேயே அமைய வேண்டும் என்ற உத்தியுடனேயே காய் நகர்த்தப்படுகிறது. அதனால் போர் முடிவுக்கு வருதல் என்பதைக் காட்டிலும் போரால் புதிய உலக ஒழுங்கு உருவாக்கப்படுவதென்பதே முதன்மையானதாக உள்ளது.