1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி காங்கோவிலிருந்து பெரிஸ் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று, விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 46ஆவது நிமிடத்தில் வெடித்துச் சிதறி சகாரா பாலைவனத்தில் விழுந்தது. விமானத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தான் விபத்திற்குக் காரணம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ் விபத்து நடந்து 18 வருடங்களுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு அதில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தார்கள்.
தொலைதூரத்திலிருந்து சிறு பாறைகளைக் கொண்டுவந்து 200 மீற்றர் விட்டத்தில் ஒரு வட்டம் அமைத்து, அதில் விபத்துக்குள்ளான விமானம் போன்ற உருவத்தை உருவாக்கினார்கள்.
விபத்தில் உயிரிழந்த 170 பேரின் நினைவாக 170 கண்ணாடிகளையும், சேதமடைந்தது போக மீதமிருந்த விமானத்தின் சிறு பகுதிகளையும் நினைவுச் சின்னத்தில் சேர்த்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் சேதமடைந்த விமான இறக்கை ஒன்றில் இறந்தவர்களின் பெயர்களைப் பதித்து அந்த வட்டத்திற்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள்.