Home » வெளிப்பட்டது ஜே.வி.பி.யின் போலி நாடகம்

வெளிப்பட்டது ஜே.வி.பி.யின் போலி நாடகம்

by Damith Pushpika
April 28, 2024 6:00 am 0 comment

உமா ஓயா திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 4500 ஹெக்டேயர் புதிய காணிகளுக்கும் தற்போதுள்ள விவசாய நிலங்களில் 1500 ஹெக்டேயர்களுக்கும் நீர்ப்பாசனத்துக்கான நீர் வழங்கப்படுவதோடு பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கான நீர்த் தேவைகளுக்குத் தேவையான 39 மில்லியன் கன மீற்றர் (MCM) நீரையும் வழங்குகின்றது. அத்துடன் வருடாந்தம் மின்சாரக் கட்டமைப்பிற்கு மணிக்கு 290 கிகா வோட் (290 GWh) மின்சாரத்தையும் வழங்குகின்றது. இவ்வாறான திட்டங்களுக்கே ஜே.வி.பி எதிர்ப்பைக் காட்டுகின்றது.

அநுராத சேனாரத்ன

2005 ஜனவரி 26ம் திகதி அப்போதைய விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த அநுரகுமார திசாநாயக்காவினால் அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. (அக்காலத்தில் இந்த அமைச்சு முழுமையாகவே ஜே.வி.பியின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, இதன் பிரதி அமைச்சராக இருந்தவர் பிமல் ரத்நாயக்காவாகும்)

2005 ஜனவரி 04ம் திகதி ஜே.வி.பி அமைச்சரின் 05/0036/039/002ம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“இலங்கையின் வறண்ட தென்கிழக்கு பிராந்தியத்தை (குறிப்பாக ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்கள்) அபிவிருத்தி செய்வதற்கு உமா ஓயாவிலிருந்து நீரை எடுப்பதைத் தவிர வேறு மாற்று வழியில்லை”

“ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்யும் மூலோபாயங்கள் அண்மைய காலங்களில் மாறியுள்ளன. உமா ஓயாவை, கிரிந்தி ஓயாவை நோக்கித் திருப்பும் திட்டம் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்படுவது அண்மைக்காலமாக பிரபல்யப்படுத்தப்பட்டுள்ள ருஹூனுபுர அபிவிருத்தி தொடர்பான எண்ணக்கருவின் அடிப்படையிலாகும். ருஹூனுபுர அபிவிருத்தி என்பது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தப் பிராந்தியத்தில் நவீன துறைமுகமாக மாற்றுவது, மொனராகலை மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் பெருமளவிலான கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என்றும், அதனை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா உள்ளிட்ட தொழில்துறை நடவடிக்கைகள் பெருமளவில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2030ஆம் ஆண்டுக்குள் நீர்த் தேவை 100 மெட்ரிக் கனமீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலையான நீர் விநியோகம் இல்லாததால், உமா ஓயாவில் இருந்து தண்ணீரைப் பெறுவதே இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரே வழி என்று கருதப்படுகிறது. எனவே இந்தத் திட்டத்திற்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்”

இதுவே அநுரகுமாரவின் அமைச்சரவைப் பத்திரமாகும்.

புதிதாக 15,000 ஹெக்டேயர் காணியில் பயிர்ச்செய்கை செய்வதை இலக்காகக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக அநுரகுமார போன்றோர் அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

அன்றிலிருந்து மக்கள் விடுதலை முன்னணிக்கு உமா ஓயா திட்டம் எதிரியானது.

உமா ஓயா திட்டத்திற்கு எதிராகச் செயற்பட்ட முக்கியஸ்தர்களுள் சமந்த வித்யாரத்னவும் ஒருவர்.

“இந்த உமா ஓயாவிலிருந்து வழங்குமளவுக்கு நீர் இல்லை. இது முற்றிலுமாகத் தோல்வியடைந்த ஒரு திட்டமாகும். அந்தச் சுரங்கப்பாதை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. இது எமது வாழ்நாளில் அல்லது அடுத்த தலைமுறை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழிந்து விடலாம் எனக் கூற கூடிய வகையிலான ஆபத்தைக் கொண்டது. ஆபத்து நிறைந்த ஒரு திட்டத்தை செய்வது பெரிய பேரழிவாகும்”

மக்கள் விடுதலை முன்னணியின் சமந்த வித்யாரத்ன (2017 ஜூலை 01 – சிலுமின)

“நாம் சூரியன் உதிக்கும் முன்னரே விழித்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறியவர் ஜே.வி.பியின் தலைவராக இருந்த ரோஹன விஜேவீர. உண்மையிலேயே சூரியன் உதயத்திற்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என அன்று ரோஹன கூறியிருப்பது வேலைகளைச் செய்வதற்கே என மக்கள் நினைக்கக் கூடும். எனினும் அவர் அவ்வாறு கூறியிருப்பது எந்த ஒரு வேலையையும் எதிர்ப்பதற்கேயாகும்.

இந்த நாட்டிற்கு நன்மையான விடயங்கள் இடம்பெறும் அனேக சந்தர்ப்பங்களில் மக்கள் விடுதலை முன்னணி அதனை எதிர்த்திருக்கிறது.

ஒருபுறத்தில் இந்த எதிர்ப்புக்களுக்குப் பின்னால் இருந்தது போலித்தனமே அதுமாத்திரமல்லாமல் நாட்டுக்கு நன்மை விளைந்து விடக்கூடாதென்ற ஜே.வி.பியின் எண்ணமுமாகும்.

உமா ஓயா தொடர்பில் ஜே.வி.பியின் போலி நாடகத்துக்கு காரணம் என்ன?

அறிந்தோ, அறியாமலோ 2005ஆம் ஆண்டில் அமைச்சர் அநுரகுமார திசாநாயக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. உமா ஓயா திட்டத்தின் கீழ் தேசிய மின் கட்டமைப்புடன் 120 மெகா வோட் மின்சாரத்தை இணைப்பது ஒரு நோக்கம் என்றும், பண்டாரவளை, பதுளை மற்றும் மொனராகலை பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்தல் மற்றும் பதுளை, மொனராகலை போன்ற பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை வழங்குவது பிரதான நோக்கம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்திற்கு எதிராக அமைப்பொன்றை உருவாக்கிய சமந்த வித்யாரத்ன போன்றோர் ஊவாவில் நெருப்பை இதுபற்றிய எதிர்ப்பை மூட்ட ஆரம்பித்தார்கள். இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 4500 ஹெக்டேயர் புதிய காணிகளுக்கும் தற்போதுள்ள விவசாய நிலங்களில் 1500 ஹெக்டேயர்களுக்கும் நீர்ப்பாசனத்துக்கான நீர் வழங்கப்படுவதோடு பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்குத் தேவையான 39 மில்லியன் கன மீற்றர் (MCM) நீரையும் வழங்குகின்றது. அத்துடன் வருடாந்தம் மின்சாரக் கட்டமைப்பிற்கு மணிக்கு 290 கிகா வோட் (290 GWh) மின்சாரத்தையும் வழங்குகின்றது.

இவ்வாறான திட்டங்களுக்கே ஜே.வி.பி எதிர்ப்பைக் காட்டுகின்றது.

இந்தியாவுக்கு எதிராக செயற்பட்ட கட்சிகள் மக்கள் விடுதலை முன்னணியை விட இலங்கையில் வேறு எதுவும் இல்லை. இந்தியாவின் பரவலாக்கல் தொடர்பில் கூச்சலிட்டவர்கள் அவர்கள்தான். அவர்கள் எடுக்கும் ஐந்து பாடங்கள் பின்வருமாறு,

(1) இலங்கையில் பொருளாதார நெருக்கடி

(2) இந்திய விரிவாக்கம்

(3) இலங்கையில் இடதுசாரி இயக்கம்

(4) சுதந்திரம் என்றால் என்ன?

(5) இலங்கைப் புரட்சி செல்லும் பாதை.

இதன் இரண்டாவது பாடம் இந்திய விரிவாக்கமாகும். எனினும் அவர்கள் இன்று இராஜதந்திர ரீதியாக இந்தியாவிற்கு செல்கிறார்கள்.

கந்தளம ஹோட்டல் நிர்மாணத்தின் போதும் கூட பலர் அதை அரசியல் போராக்கி பிரச்சினையை உருவாக்கினர். இன்று கந்தளம் ஹோட்டல் இலங்கையின் மிக அழகான மற்றும் சிறந்த ஹோட்டலாகும். இலங்கையர்களும் குறைவின்றி வருவதோடு, சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்குகளும் அதனால் ஏற்படவில்லை. ஜெப்ரி பாவா என்ற அற்புதமான கட்டடக்கலை நிபுணரால் கட்டப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹோட்டலின் காரணமாக, நாட்டிற்குக் கிடைக்கும் வருமானம் அளப்பரியதாகும். அதில் தொழில் பெற்றிருப்பது கிராம மக்களேயாகும்.

நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தை நிர்மாணிக்கும் காலத்தில் கூட புதிய கோணத்திலான எதிர்ப்பு கிளம்பியது. ‘இலங்கையின் மீன் வளத்தை கொள்ளையடிக்க வருகிறார்கள். இது நாட்டுக்கு பெரும் பேரழிவாகும். இனி முழு நாட்டுக்கும் கேடுதான். அது மாத்திரமல்ல, இதனால் ஸ்ரீ மஹா போதியும் அழிந்து போகும்’ என சில சந்தர்ப்பவாதிகள் இவ்வாறு பிரச்சினையை உருவாக்கினார்கள். இன்று தேசிய மின்சார உற்பத்தியில் அதிக பங்கினை வழங்குவது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையமாகும். மகாவலி திட்டத்தை நிர்மாணிக்கும் போதும் இந்த பாரிய நீர்த்தேக்கத்தினால் மண் சரிவுகள் ஏற்படும் எனக் கூறினார்கள். ‘இது ஒட்டுமொத்த மலைப் பிரதேசத்திற்கும் நாசம் விளைவிக்கும். மகாவலியினால் விகாரைகள் மூழ்கிப் போகும். இது மிகப்பெரும் பாவ காரியமாகும்’ என அந்தக் காலத்தில் சிலர் குற்றம் சுமத்தினர். ‘இதற்கு பிரித்தானியா சும்மா உதவி செய்யவில்லை .நாம் இரண்டாவது தடவையாக வெள்ளைக்காரர்களுடன் போர் செய்வதற்கான ஒப்பந்தமே இதுவாகும். அவ்வாறில்லாமல் பிரிட்டிஸ் ராணி இதற்கு உதவப் போவதில்லை’ என்று இன்னும் சிலர் கூறினர். இன்று மகாவலியைப் போன்ற பாரிய திட்டங்களை நினைத்தும் கூடப் பார்க்க முடியாது.பல்நோக்கு மற்றும் நீண்ட கால மகாவலி அபிவிருத்தித் திட்டம் இலங்கையின் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இந்த திட்டத்திற்காக பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து உதவிகள் கிடைத்தன. மகாவலி கங்கையும், அதன் கிளை நதிகள், மாதுறு ஓயாவையும் இணைத்துக் கொண்டு தேசிய நிலப்பரப்பில் 39 வீதமளவிலான பகுதியை அபிவிருத்தி செய்வதும், நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், சில பகுதிகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், புதிய விவசாய நிலங்களை உருவாக்குவதற்கும், புதிய குடியிருப்புகளை உருவாக்குவதற்கும், அதன் மூலம் புதிய தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும், மகாவலி பாரிய திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது. விவசாயத்தை நவீனமயமாக்குதல், கால்நடை வளர்ப்பு, விவசாயம் சார்ந்த தொழில்களின் அபிவிருத்தி ஆகியவை ஏனைய எதிர்ப்பார்க்கப்படும் நோக்கங்களாக இருந்தன. இந்தத் திட்டம் பாரியளவில் வெற்றி பெற்றது. ஒரு அரசாங்கம் செய்த மிகப் பெரிய புண்ணிய காரியம் எது என்று கேட்டால் அதற்கு முதலில் வரும் பதில்களில் ஒன்று ‘சுவ சரிய’ திட்டமாகும். இது கிராமங்கள் நகரங்களில் வாழும் அப்பாவி ஏழை மக்களுக்காகச் செயற்படும் 24 மணி நேர அம்புலன்ஸ் சேவையாகும்.

எனினும் இந்த அம்புலன்ஸ் வண்டிச் சேவையை அறிமுகப்படுத்தும் போது விமல் என்ன கூறினார்?

‘இந்த அம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து, அதனோடு சேர்ந்து இந்திய உளவுத் துறையான ரோ உளவுப் பிரிவினரும் இங்கு வரவுள்ளார்கள்’ இவ்வாறான குறுக்கு வழியில் விமலினால் மாத்திரமே சிந்திக்க முடியும். அவ்வாறானதொரு கதையை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கமும் கூறியது. ‘இந்த ஆபத்தான அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற வேண்டாம்’ என அவர்கள் கூறினார்கள். இன்று என்ன நடந்திருக்கின்றது?

‘இந்த அம்புலன்ஸ் சேவையினால் அப்பாவி ஏழை மக்கள் அடைந்த நன்மைகள் அளவிட முடியாதவை’. அவ்வாறு கூறுவதும் அப்பாவி ஏழை மக்கள் தான்.

சுனாமியால் அழிவடைந்து போன வாழ்வைத் துரிதமாகக் கட்டியெழுப்புவதற்காக முன்மொழியப்பட்ட அரசு பொறிமுறையினை தனது அரசியல் இலாபத்திற்காக இனவாதப் பொறிக்குள் சிக்க வைக்கும் அவமானகரமான முயற்சி என்று பிரசாரம் மேற்கொண்டது மக்கள் விடுதலை முன்னணியாகும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division