இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தற்போது கட்டம் கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஆளும் பா.ஜ.கவுக்கு எதிரான அலைகள் கடந்த ஒருவார காலமாக அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது. ராஜஸ்தானில் காங்கிரசை விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய வெறுப்பு பேச்சுகள் காரணமாகவே பா.ஜ.க மீது பலதரப்பும் அதிருப்தி கொண்டுள்ளன.
இதேவேளை நரேந்திர மோடி மீதான புகார்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் கடந்த ஞாயிறன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று கடந்த 2006 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடியின பெண்களின் வெள்ளிப் பொருட்கள், அரசு ஊழியர்களின் நிலம், பணம் ஆகியவற்றை கண்டறிந்து மறுபங்கீடு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி இப்போது அறிவித்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.
மோடியின் இந்த உரையானது முஸ்லிம்கள் மீதான வெறுப்பை எடுத்துக் காட்டுவதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் வெறுப்புப் பேச்சுக்கு காங்கிரஸ், தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இம்முறை தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க முக்கியமான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். அதாவது தேர்தல் பிரசாரத்தில் பயமுறுத்தக் கூடிய ஆயுதம் ஒன்றை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி கூறியது போன்று அப்படி எந்த அறிவிப்பும் இல்லை எனக் கூறப்படுகின்றது.
“பணக்காரர்களுக்கு சொத்து வரி போடப்படும். சாதாரண சொத்து வரி அல்ல பரம்பரை சொத்து வரி. அதாவது பரம்பரையாக உள்ள சொத்திற்கு தனி வரி போடப்படும்” என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னதாக அமித் ஷா பயமுறுத்தினார். ஆனால் அப்படி எதுவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை என்றே தெரிகின்றது.
‘பா.ஜ.க முகாம் அச்சத்தில் இருக்கிறதோ? அதனால்தான் திடீரென இப்படி எல்லாம் தீவிரமான விஷயங்களை பயமுறுத்தும் வகையில் மக்களிடம் பேச தொடங்கி உள்ளதோ? என்ற கேள்வி எதிரணியினரிடம் எழுந்துள்ளது.
இதேவேளை பிரதமர் மோடியின் பிரசாரங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாடுகள் இவ்விடயத்தில் இந்தியாவை தீவிரமாக உற்றுநோக்கி வருகின்றன.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக சுமார் 17 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் அவர்கள் இந்த புகார்களை பதிவு செய்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன.
அதேசமயம் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 18 எம்.பிக்கள் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் கண்டித்துள்ளனர். அவரின் பேச்சு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய ஊடகங்களும் நரேந்திர மோடியின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளன.
மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மேலும் இரண்டு சிவில் உரிமை குழுக்கள் மோடியின் வெறுப்பு பேச்சை கண்டித்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி 17,000 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பியிருக்கிறது. அந்த கடிதத்தில் “இது அபாயமானது” என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், “பிரதமர் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்” என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டாலும், தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று முன்னர் கூறியிருந்தது.
நரேந்திர மோடியின் பேச்சு ஒருபுறமிருக்க, உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் எடுத்த முடிவு ஒன்று பா.ஜ.கவை அதிர வைத்துள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். பா.ஜ.கவிற்கு இந்த லோக்சபா தேர்தல் கொஞ்சம் சிரமமாகவே உள்ளது. அதீத தன்னம்பிக்ைக கொண்டு களத்தில் இறங்கிய பா.ஜ.கவிற்கு கொஞ்சம் பிரசாரத்திலும், தேர்தல் திட்டங்களிலும் அடுத்தடுத்து அடிவிழத் தொடங்கி உள்ளது.
அந்த வகையில்தான் பா.ஜ.கவின் கோட்டையான உத்தர பிரதேசத்திலேயே அந்த கட்சிக்கு சில கசப்பான தகவல்கள் வரத் தொடங்கி உள்ளன. அதில் ஒன்று கடந்த புதனன்று திடீரென உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் எடுத்த முடிவாகும்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிக்கு மற்றொரு வேட்பாளரை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு திடீரென சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் இங்கே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது.
இது உத்தர பிரதேசத்தில் மொத்தமாக அரசியல் நிலைவரத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அங்கே ‘ஆலு பெல்ட்’ என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு பெல்ட் முழுக்க பா.ஜ.கவிற்கு எதிராக திரும்பும் நிலை உள்ளது. கன்னோஜ், ஃபிரோசாபாத், படவுன் மற்றும் மெயின்புரி உள்ளிட்ட 60 வீத இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் சூழ்நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு ஆலு பெல்ட்டில் இருந்து பா.ஜ.கவை வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அங்கே உருளைக்கிழங்கு விவசாயிகள் அதிகம் உள்ள பெல்ட் ஆகும்.
கன்னோஜ் தொகுதியில் வியாழனன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அகிலேஷ் யாதவ் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்வார் என்று கட்சி தெரிவித்திருந்தது.
கடந்த 2019 இல் பா.ஜ.க வென்றது. அதற்கு முன் அகிலேஷ் – அவரின் அப்பா முலாயம், – அகிலேஷ் மனைவி டிம்பிள் என்று பலரும் வென்ற தொகுதி. இங்கேதான் தற்போது அகிலேஷ் யாதவ் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. பா.ஜ.கவை வீழ்த்த வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அங்கே ராஜ்புத் உள்ளிட்ட சத்திரிய சாதியினரின் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முசாபர்நகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கேடா கிராமத்தில் நடைபெற்ற ராஜ்புத் சமூகத்தின் மகாபஞ்சாயத், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள முதல்கட்ட பொதுத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. வேலையின்மை, அக்னிவீர் திட்டம் மற்றும் ராஜ்புத் சமாஜ் அவமதிப்பு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சாரங்கன்