இலங்கை வங்கியானது இளையோர்களிடையே தொழில்முயற்சி உணர்வை வளர்க்கும் முயற்சியில், புத்தாக்கச் சிந்தனைமிகு இளையோரினதும் இளம் தொழில்முயற்சியாளர்களதும் கனவுகளை நனவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இளைஞர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருடத்துக்கு வெறும் 7 சதவீதம் என்ற கவர்ச்சிகரமான வட்டி வீதத்துடன் அதிகபட்சமாக 500,000 ரூபாய் கடன் தொகையை வழங்கும் இக்கடன்திட்டம் அடுத்த தலைமுறையின் லட்சியங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை வங்கியின் இளையோர் கடன் திட்டம் என்பது வெறுமனே நிதி உதவி மட்டுமல்ல. இதுவொரு புதிய தலைமுறை தொழில்முயற்சியாளர்களை வளர்த்தெடுக்கும் திட்டமாகும். குறைந்தபட்சம் 10,000 இளைஞர், யுவதிகளை வலுவூட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள இந்தத் திட்டம் சுயதொழில்முயற்சிகளை தொடங்கும் அல்லது ஏற்கனவே உள்ள வணிகங்களை விரிவுபடுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும் என்பதில் ஐயமில்லை.
இலங்கை வங்கியின் இளையோர் கடன் திட்டத்தின் விதந்து குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையாகும். பாரம்பரிய கடன் திட்டங்களைப் போன்று இத்திட்டத்துக்கு சொத்து அடமானங்கள் போன்ற பிணைகள் எதுவும் தேவையில்லை. சொத்துக்கள் என்று எதுவும் இல்லாத ஆனால் எல்லையற்ற ஆற்றலும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அனைத்துத் தரப்பு இளையோருக்குமான கதவுகளைத் திறப்பதே இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.