2024ஆம் ஆண்டானது தேர்தல் ஆண்டாகும் என்பது ஓரளவுக்கு உறுதியாகிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. தென்னிலங்கையைச் சேர்ந்த பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பது ஓரளவுக்குத் தெரியவந்திருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் குறித்தும் அரசியல் கணக்குகள் போடப்பட்டுள்ளன.
பாரியதொரு அமைப்பு மாற்றமொன்றை எதிர்பார்த்திருக்கும் மக்கள், தமது விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்டுவதற்காக ஆவலுடன் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக இம்முறை தேர்தல் கடந்த காலங்களை விடவும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக மாறியுள்ளது.
அது மாத்திரமன்றி, தற்பொழுது மக்கள் மத்தியில் காணப்படும் மனோநிலையின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருப்பதாக அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் அடிப்படையில் நோக்கும் போது வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் குறிப்பாக வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் பேசுபொருளாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் என்பது புதியதொரு விடயமல்ல. இதற்கு முன்னரும் சிலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். குமார் பொன்னம்பலம் 1982ஆம் ஆண்டு போட்டியிட்டிருந்ததுடன், 1999ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்பதில் கடுமையான நிலைப்பாட்டில் இருந்தார்.
அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளராக சிவாஜிலிங்கம் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தனித்துப் போட்டியிட்டிருந்தார். இவருக்கு ஒருசில வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்த நிலையில், இம்முறை தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தாடல் தமிழ்க் கட்சிகள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இந்த யோசனையை முதலில் முன்வைத்தவர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார். இவருடைய இந்த யோசனையை அவர்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டணி ஏற்றுக் கொண்டிருந்தது.
அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் போது தென்பகுதி வேட்பாளருக்குச் செல்லும் தமிழ் வாக்குகளைப் பிரிக்க முடியும். இதன் ஊடாக பேரம் பேசும் சக்தியை தமிழ்த் தரப்பு ஏற்படுத்த முடியும் என்பது அவர்களுடைய கணிப்பாக உள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் குறித்த நிலைப்பாட்டில் தானும் இருப்பதாகவும், இது பற்றிக் கலந்துரையாட வருமாறும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருந்தபோதும் இந்தக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் சென்றிருக்கவில்லை. ஒரு சில சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாத்திரமே சென்றிருந்தனர்.
மறுபுறத்தில், தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை ஒட்டுமொத்தமாக மறுத்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முற்று முழுதாகப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய நபர்கள் மீது நம்பிக்கை இல்லையென்பதை வெளிப்படுத்த தமிழ் மக்கள், இதனைப் புறக்கணிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கருத்தாக அமைந்துள்ளது.
இருந்தபோதும், கடந்த காலங்களில் தேர்தல்களைப் புறக்கணித்ததன் ஊடாகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலைமையைச் சுட்டிக்காட்டியுள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிப்பதாக எடுக்கும் முடிவு சரியாக இருக்காது எனத் தெரிவித்துள்ளனர். அது மாத்திரமன்றி, அவ்வாறு புறக்கணிப்பதாக முடிவு எடுப்பதாயின் அதற்கான மாற்றுத் தெரிவு என்ன என்பதை அவர்கள் முன்வைக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருக்கும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொதுவேட்பாளர் காலத்தின் தேவை எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். “தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல வேட்பாளர்களுக்காக ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவளித்த பலர் தோல்வியடைந்தனர். வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால்தான் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் பெரும்பாலானோர் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது. தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும். இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியால் சொல்ல முடியும்” எனவும் அவர் கூறியிருந்தார்.
அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்பது புதிய விடயம் அல்ல. இதற்கு முன்னரும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்பொழுது பொதுவேட்பாளர் என்ற விடயம் இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சிக்கும் தென்பகுதி அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதாவது ராஜபக்ஷக்களின் இன வாத அரசியலுக்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும் என்பது அவருடைய நிலைப்பாடாக இருந்தது. கடந்த கால வரலாறுகளின் அடிப்படையிலேயே வேட்பாளர் விடயத்தைக் கையாள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது இவ்விதமிருக்க, தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதாயின் வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் வாக்காளர்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வகையில் வடக்கு, கிழக்கிற்கு அப்பால் உள்ள ஒருவர் நிறுத்தப்படுவது பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
அவ்வாறு ஒருவர் நிறுத்தப்படுவாராயின், வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்களின் ஆதரவு அந்த நபருக்குக் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு இல்லாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது.
இதுபோன்ற பின்னணியில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஊடாகத் தீர்வு காணப்பது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகவே உள்ளது.
பி.ஹர்ஷன்