தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என சூளுரைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநல பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ, தோல்வி காணவோ கூடாது எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் முன்வைக்கப்படும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்திலும் எமது மக்கள் இனியொரு தடவை தோல்வியுற இடமளிக்கக் கூடாது எனவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
மன்னார் மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர், மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று நிலைமையை பார்வையிட்டார். இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறும் போது இவ்வாறு தெரிவித்திருந்த அமைச்சர் மேலும் கூறுகையில்,”தமிழ் பொது வேட்பாளர் விடயம் என்பது பயனற்ற ஒரு விடயம்.
தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் போட்டியிடும் ஒரு தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவு வழங்கி அதனூடாக பேரம் பேசும் சக்தியாக நாம் உருவாக வேண்டும். முன்பதாக கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்களும் போராட்ட அமைப்புகளும் தத்தமது சுயநல தேவைகளுக்காக மற்றவரை தடம் போட்டு வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் இருந்து முன்னெடுத்த பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியே கண்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் சொல்லொணா இன்னல்களையும் எதிர்கொண்டு விட்டது. ஆனால் எமது நடவடிக்கைகள் தமிழ் மக்கள் தோல்வி காணக்கூடாது என்ற நிலையிலிருந்தே முன்னெடுக்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாது அதற்கான கள நிலைமைகளை உருவாக்க சாதுரியமான வழிமுறைகளும் எம்மிடம் உள்ளது. அதனை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.