இந்நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் வருடாந்தம் கிடைக்கும் இலாபம் 5 பில்லியன் ரூபாய்களாகும். எனினும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்காகச் செலுத்த வேண்டிய கடன் தொகை 800 பில்லியன் ரூபாய்களாகும். இதனடிப்படையில் வருடாந்தம் ஐந்து பில்லியன் ரூபாய் வீதம் செலுத்தப்பட்டால் 160 வருடங்கள் அந்தக் கடனைச் செலுத்த வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக கடந்த வருடம் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடன் மறுசீரமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் போக்கு எவ்வாறு இடம்பெற வேண்டும்? இந்நாட்டிலுள்ள ஒரேயொரு பொருளாதாரத் துறை பேராசிரியரான சனச பல்கலைக்கழக உபவேந்தரும் இலங்கை பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் விஜிதபுரே விமலரதன தேரர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கொழும்பு பல்கலைககழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் பிரியங்க துனுசிங்க ஆகியோர் தொலைக்கட்சி அலைவரிசையில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த நிகழ்ச்சியில் பொருளாதார ஆய்வாளராக கலந்து கொண்டார்.
நாடு என்ற வகையில் கடன் பெறும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும் அங்கு பிரச்சினை தோன்றுவது அந்தக் கடனை உயர் செயற்திறனுள்ள துறைகளில் முதலீடு செய்யாத போதிலாகும்.
எம்மால் கடனைச் செலுத்த முடியாத அளவுக்கு நாடு ஏன் சீரழிந்தது? இன்று வரைக்கும், நமது பொருளாதாரமானது சுற்றுலாத் துறை, இறப்பர் மற்றும் தேங்காய் ஏற்றுமதி மற்றும் 90 களில் தொடங்கிய ஆடைத் தொழில்களில் தங்கியுள்ளது. அதேபோன்று அரசர் காலத்திலிருந்தே நடைபெற்று வரும் வாசனைப் பொருள்கள் ஏற்றுமதியிலும் ஓரளவு வருமானம் ஈட்ட முடிந்தது.
இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றவர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். அவ்வாறு ஓய்வு பெற்றவர்களும், வெளிநாட்டில் பணிபுரிபவர்களும் இந்நாட்டில் முதலீடு செய்தால் இந்த நாட்டுக்கான கடனை அடைப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. எங்களுக்கு கடன் மறுசீரமைப்பும் தேவைப்படாது.
கடன் மறுசீரமைப்பு என்பது செலுத்துவதற்கு முடியாத கடன்களைப் படிப்படியாக செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொள்வதாகும். அதற்காக கடன் வழங்கிய தரப்பினருடன் கலந்தாலோசித்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும், நாம் பெற்ற கடனை 3 முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது சந்தையிலிருந்து பெறப்பட்ட கடன், இரண்டாவது ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து பெறப்பட்ட இருதரப்பு கடன். மூன்றாவது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பலதரப்புக் கடன்கள்.
இவ்வாறானதொரு சூழலின் அடிப்படையில் எமது நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் காரணமாக ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலைக்கு இலங்கை வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2022இல் பொருளாதாரம் எதிர்மறையாக இருந்த நிலையை நாம் மறந்துவிடக் கூடாது.
நமது வெளிநாட்டுக் கையிருப்பு பூஜ்ஜியமாக குறைந்து போனது. கடனை அடைக்க முடியாமல் போனதுதான், அதன் மூலம் நடந்த மிகப்பெரிய பேரழிவாகும்.
இந்த நிலை ஏற்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் எமக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும் சர்வதேச விண்ணப்பங்களை முன்வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ கோரிக்கை விடுத்தார்.
உலகில் கடனை அடைக்க முடியாத நாடுகள் அவ்வாறு செய்கின்றன. இதன்படி, நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்வுகளை வழங்குவதற்காக கோரப்பட்ட 28 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், அதில் 20 விண்ணப்பங்கள் தகுதி பெற்றிருந்தன. அதன்போது, பொருத்தமான நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. அந்த உப குழுவின் தலைவராக சட்டப் பேராசிரியரான ஜி.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டதோடு, உண்மைகளை ஆய்வு செய்த பின்னர், பிரான்சின் லாசார்ட் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நாம் செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் இந்திய ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருடன் தற்போதைய ஜனாதிபதி கலந்துரையாடினார். அத்துடன் இது தொடர்பாக சீனப் பிரதமரிடமும் அவ்வாறே கலந்துரையாடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நாம் செலுத்த வேண்டிய கடன் குறித்தும் தற்போதைய ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடினார். இது தொடர்பாக சீனப் பிரதமரிடமும் பேசப்பட்டது.
அதன்பிரகாரம், 2048ஆம் ஆண்டுக்குள், யார் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, யார் ஆட்சி அமைத்தாலும் சரி, இந்த ஒப்பந்தங்களில் ஒன்றையேனும் மாற்ற முடியாது. அப்படி மாற்றினால் ஒரு நாடாக எம்மால் முன்னேறிச் செல்ல முடியாமல் போகும். இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள இந்நாடு தொடர்பில் செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இந்நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு முன்னர், ‘இலங்கையின் எதிர்காலப் பாதை செப்பனிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
எமது நாட்டில் பெரிய செல்வத்தை உருவாக்க முடியாது. துறைமுக நகரின் பெறுமதி 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இவ்வாறான நிலையின் கீழ் நாட்டின் கடன் சுமையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிவேக நெடுஞ்சாலைகள் நமக்கு மிகவும் வசதியானவை மற்றும் இன்றியமையாதவை என்ற போதிலும், அது மற்றொரு பெரிய கடன் சுமையாகும். எனவே, சஹாஸ்யா முதலீட்டு நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைகள் ஒப்படைக்கப்பட்டன. அதிவேக நெடுஞ்சாலைகள் இலாபகரமானவை என்பது உண்மைதான். ஆண்டு லாபம் 5 பில்லியன் ரூபாயாகும்.
எனினும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்காகச் செலுத்த வேண்டிய கடன் தொகை 800 பில்லியன் ரூபாய்களாகும். அதன் படி வருடத்திற்கு 5 பில்லியன் இலாபத்தில் இருந்து கொடுப்பனவு செய்தால் இன்னும் 160 வருடங்கள் கடனை செலுத்த வேண்டும்.
தேயிலை ஏற்றுமதி மூலம் நாம் அதிகபட்சமாக 1.3 பில்லியன் சம்பாதிக்க முடியும். இறப்பர் மற்றும் தேங்காய் ஏற்றுமதி மூலம் தலா 2 பில்லியன் வருமானத்தை ஈட்ட முடியும். அத்தகைய சூழ்நிலைகள் இருக்கும் போது நாம் செய்ய வேண்டியது புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக்கு அமைய செயற்படுவதேயாகும்.
எனவே, தற்போது செலுத்த வேண்டியுள்ள இருதரப்பு மற்றும் வணிகக் கடன்களின் மறுசீரமைப்பு முறையாக செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி எமக்கு லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கண்டு கொள்ள முடியும். கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அந்த நாடுகள் கடைப்பிடித்த நடைமுறைகளைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1980 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான 32 ஆண்டு காலப்பகுதியினுள், 433 கடன் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 95 நாடுகள் இணைந்துள்ளன. அதன்படி, சில நாடுகள் சுமார் 4 முதல் 5 முறை கடன் மறுசீரமைப்பு செய்துள்ளன. மெக்சிகோ மற்றும் சிலி ஆகிய இரண்டு நாடுகளால் மட்டுமே முதல் மறுசீரமைப்பு மூலம் தங்கள் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடிந்ததுள்ளது.
எனினும், அர்ஜென்டினா ஐந்து சந்தர்ப்பங்களில் தனது கடனை மறுசீரமைத்துள்ளது. பிரேசில் 2 சந்தர்ப்பங்களிலும், வெனிசுலா 6 சந்தர்ப்பங்களிலும், ஈக்வடார் 5 சந்தர்ப்பங்களிலும் தனது கடன்களை மறு சீரமைப்புச் செய்துள்ளது.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பற்றி சிந்திக்காமல், அவற்றைப் பொருளாதாரக் கோட்பாடுகளாகக் கருதி கடன் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். கடன் நெருக்கடியை பொருளாதார ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை முற்றிலும் மாற்ற முடியாது. அப்படிச் செய்ய முயன்றால், 2022ஆம் ஆண்டை விட இன்னும் ஆழமான பள்ளத்தில் விழுந்து விடுவோம். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் ஒரு அர்ஜென்டினா உருவாகும்.
அரச சேவையில் பெரும் எண்ணிக்கையான பணியாளர்களைப் பராமரித்தல், அதிக செலவில் எரிபொருளைக் கொண்டு வந்து குறைந்த விலையில் வழங்குதல் போன்ற காரணங்களால் நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்தது.
அரசின் வருமானமும் அதிகளவில் இல்லை. உதாரணமாக, 2022ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 1751 மில்லியன் ரூபாய் என்பதோடு, 1265 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காகவும், 506 மில்லியன் ரூபாய் நிவாரணங்களுக்காவும் செலவிடப்படும் போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னரைப் போன்று மூத்த பிரஜைகளுக்கு 15வீத வட்டி வழங்க வேண்டும் என்ற கருத்து சமூகத்தில் கொண்டு வரப்பட்டது. அதற்காக வற் வரியை 1 வீதம் அதிகரிக்க வேண்டும். இந்த உண்மையை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். வேறு நாடுகளில் வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆகும்.
ஆனால் நம் நாட்டில் அப்படி எதனையும் காண முடியவில்லை. வரலாறு முழுவதிலும் காணக் கிடைப்பது “3.50க்கு பாண் தருவேன்”, “10,000 ரூபாய் சம்பளம் கூட்டுவேன்”, “நிலையான கணக்குகளில் 25,000 ரூபாயை வைப்புச் செய்வேன்” போன்ற நாட்டையே வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கும் கதைகளையேயாகும். நமக்குத் தேவை சரியான தலைமையும் அறிவார்ந்த மக்களும் மட்டுமே.
எம். எஸ். முஸப்பிர்