Home » 34 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட கொலையாளி
தாமதமாக கிடைத்த நீதி!!

34 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட கொலையாளி

by Damith Pushpika
April 21, 2024 6:20 am 0 comment

இலங்கை மின்சாரசபையின் நிர்வாகத் தலைவராகத் தொழில் புரிந்த மின் பொறியியலாளர் கலாநிதி டப்ளியூ அமரசிறியின் படுகொலை, 34 வருடங்களுக்கு முன்னர் முழு நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவமாகவே பார்க்கப்பட்டது.

அவரைக் கொலைசெய்து ஈவிரக்கமின்றி உடலை பல துண்டுகளாக வெட்டி மீன் டின்களில் அடைப்பது போல் தார் பீப்பாயில் போட்டு புதைத்திருந்தனர். எனினும் அவரது கொலை நடந்து பல வருடங்களின் பின்னரும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றித்திரிந்தனர்.

‘கொலையாளியை’ அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 34 வருடங்களுக்கு பின்னர் அந்த கொலையாளியை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கைதுசெய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நீண்டகால தொலைபேசிப் பகுப்பாய்வின் விளைவாக பூகொட, மண்டாவளையிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய பிரதான கொலையாளியான சுமணசேகர கடந்த 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் எங்கிருந்தாலும் குடும்பத்தில் நெருக்கமானவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவர்களின் நலம் விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நொடிக்கு நொடி தொலைபேசி எண்ணையும், தொலைபேசிகளையும் மாற்றி குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தார். எனினும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகள் யாவும் பொலிஸாரால் கண்காணிக்கப்படுவதை அவர் அறிந்திருக்கவில்லை.

இச்சம்பவத்தில் முதலில் சந்தேக நபரான சுமணசேகரவின் மனைவியான சம்பிகா கடந்த பெப்ரவரி மாதமளவில் கைதுசெய்யப்பட்டார். கைதான சந்தேக நபரின் மனைவியின் தொலைபேசி அழைப்புகளை தொடர்ச்சியாக ஆராய்ந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள், அதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேகநபரின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். அதற்கமையவே கொலையாளியான சுமணசேகர கடந்த 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இதுதொடர்பில் மிக நீண்டகாலமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகநபரின் மனைவியான கமனி சம்பிகா இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் ஆங்கில மூலப் பதிவாளராக அக்காலத்தில் கடமையாற்றியுள்ளார். சுமணசேகரவும் சம்பிகாவும் பாடசாலைக் காலத்திலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

அக்காலப்பகுதியில் சுமணசேகரவை கிராமத்தவர்கள் ‘நந்தன’ என்றே அழைத்தனர்.

சுமனசேகரவும் சம்பிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டமையால் தன் மனைவி மேல் அதீத காதல் சுமணசேகரவுக்கு இருந்தது. எப்போதும் மனைவி மீது அன்பும், அக்கறையும் உடையவராக பொறுப்புடன் நடந்துகொண்டார்.

எனினும் அந்த அதீத அன்பு ஆபத்தானதாகவும் மாறியது. இலங்கை மின்சார சபையில் ஆங்கில பதிவாளராக பணிபுரியும் மனைவி சம்பிகாவுக்கு அங்கு பணிபுரியும் ஆணொருவருடன் தொடர்பிருப்பது சுமணசேகரவுக்கு தெரியவருகின்றது. சுமணசேகர இதுதொடர்பில் ஆராய்கையில் அந்த நபர் மின் பொறியியலாளர் கலாநிதி அமரசிறி என்பது தெரியவருகின்றது. எனவே தனது மனைவியை காப்பாற்ற அவரைக் கொலை செய்ய வேண்டுமென முடிவுகட்டுகின்றார்.

அக்காலக்கட்டத்தில் கொழும்பு மின்சார சபையின் தலைமையகத்தில் பணிபுரிந்த அதிகாரம் படைத்தவர்களுள் கலாநிதி அமரசிறியும் முக்கியமானவர். அரசியல் செல்வாக்கு அவருக்கு அதிகமாகவே இருந்தது. அதனாலேயே மின்சார சபை தலைமையகத்தில் பணிபுரிந்து வந்த ஆங்கில பதிவாளரான சம்பிகா அவருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். இருவருக்குமிடையிலான தொடர்பு மின்சாரசபை தலைமையகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.

அது 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி. மின் பொறியியலாளர் அமரசிறி தனது களனி வரகொடையிலுள்ள வீட்டிலிருந்து மின்சார சபை தலைமையகத்திற்கு காரில் வந்தார். எனினும் அவர் அங்கு அதிக நேரம் இருக்கவில்லை. அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பின்படி காலை 10.30 மணியளவில் அலுவலகத்தை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவரை யாரும் உயிருடன் பார்க்கவில்லை. 9 நாட்களின் பின்னர் அவரைக் காணவில்லையென அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய அவரது உடல் உருக்குலைந்த நிலையில் பீப்பாய்க்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமரசிறிக்கு இறக்கும் போது 45 வயது இருக்கும். இவருடைய மரணம் தொடர்பான விசாரணைகள் கொம்பனி வீதி பொலிஸார் முன்னெடுத்தனர்.

மின்சார சபை தலைமையகத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவர் கொலைசெய்யப்பட்ட அன்று களனி வரகொடையிலுள்ள அவரது வீட்டிலிருந்து. வந்த கார் மின்சார சபையின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் காணாமல் போவதற்கு முன்னர் கடைசியாக வந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய கடைசியாக காலை 10.20க்கு பெண்ணொருவரிடமிருந்து அழைப்பு வந்தமை. தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அவர் மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாகவுள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து ஹோமாகம நோக்கி செல்லும் பயணிகள் பஸ்ஸில் ஏறியுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு அமரசிறியின் நெருங்கிய நண்பரான சட்டத்தரணி ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்தது.

அதுமட்டுமின்றி சம்பவ தினத்திலிருந்து சம்பிகாவும் தொடர்ந்து 10 நாட்கள் வேலைக்கு சமூகமளித்திருக்கவில்லை. எனினும் அந்த கடைசி தொலைபேசி அழைப்பு யாருடையது என்பதை சரியாக உறுதிப்படுத்தமுடியவில்லை.

எனவே சம்பிகாவின் வீட்டைத் தேடி பொலிஸார் சென்றனர். வீடு ​​வெறிச்சோடி கிடந்தது.

இதுதொடர்பில் பொலிஸார் ஆராய்ந்தபோது, பெற்றோரின் பராமரிப்பில் நான்கு வயது குழந்தையை விட்டு விட்டு இருவரும் பெற்றோரிடமோ அல்லது உறவினர்களிடமோ எதுவுமே கூறாமல் தலைமறைவாகியிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து. பொலிஸார் அமரசிறி காணாமல் போனமை தொடர்பிலான சில முக்கிய சாட்சியங்கள் அவர்களுடைய வீட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வீட்டை தீவிர சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது ​​வீட்டிலிருந்த ஒரு மரத்தில் இரத்தக் கறைகள் இருந்தன. இது பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஒரு வாள் கழுவி சுத்தம் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

எனவே சந்தேகம் வலுவடையவே வீட்டைச் சுற்றி சோதனையிட ஆரம்பித்தனர். இதன்போதே அமரசிறியின் கழுத்து அவரது உடற்பகுதியிலிருந்து வேறாக்கப்பட்டு, அவரது உடல் துண்டுகளாக வெட்டப்பட்டு, பீப்பாய்க்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் அது புதைக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி அவரது தங்கச் சங்கிலி, அவரது விரலிலிருந்த மோதிரம் மற்றும் பணப்பை என்பவற்றை கண்டெடுத்திருந்தனர்.

கணவன்- மனைவிக்கிடையில் இது இரகசியமாக பேணப்பட்டது. இருவரும் கொலையை செய்துவிட்டு பொரளையில் வசிக்கும் கணவனது சகோதரர் ஒருவரின் வீட்டுக்கு சென்று தங்கியிருந்துள்ளனர். இதன்போதே கொம்பனி வீதி பொலிஸாரிடம் சிக்கினார்.

கொலையை நேரில் கண்ட சாட்சிகளாக இல்லாவிட்டாலும், கலாநிதி அமரசிறியின் படுகொலை தொடர்பில் சம்பிகா மற்றும் அவரது கணவரான சுமணசேகர ஆகியோருக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸாரிடம் போதுமான சாட்சியங்கள் இருந்தன. அதுமட்டுமின்றி 80க்கும் மேற்பட்ட தனிப்பட்ட சாட்சியங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் பதிவு செய்திருந்தனர். எனவே 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கணவன், மனைவி இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் சிறிதுகாலத்தில் பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்தனர். எனினும் அதன்பின்னர் நீதிமன்றத்தை புறக்கணித்து தங்களது பிள்ளையுடன் தலைமறைவாகியிருந்தனர்.

இவ்வாறு நீண்டகாலமாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளின் முடிவில் இருவருக்கும் 2019 பெப்ரவரி 8ஆம் திகதி மரணதண்டனை விதிக்கப்படுகின்றது. எனினும் இருவரும் ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து தலைமறைவாகவே இருந்தனர்.

இவர்கள் இருவரும் உயிரிழந்த நபரின் பெயரில் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பனவற்றை போலியாக தயாரித்து பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டகொலையாளி போலி அடையாள அட்டையை தயாரிப்பதற்கு உதவியவர்களைக் கண்டறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாமதமாகக் கிடைத்த நீதி என்றாலும் கொலையாளியை கைது செய்த பொலிஸாரின் அயராத முயற்சியைப் பாராட்ட வேண்டும்.

வசந்தா அருள்ரட்ணம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division