எழில் கொஞ்சும் மலையகத்தின் இயற்கைக்கு பின்னால் பெருந்தோட்ட பெண்களின் சொல்லிலடங்கா வலிகளும் வேதனைகளும் உள்ளன.
இலங்கையில் இலவசக்கல்வி, இலவச மருத்துவம், சர்வஜன வாக்குரிமை, ஏனைய சமூகநலன் திட்டங்கள் காரணமாக ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெண்கள் கணிசமான அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எனினும் நாட்டின் உற்பத்தித்துறையில் பெரும் பங்காற்றும் பெருந்தோட்ட பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இன்றும் வாழ்கின்றனர்.
அவர்களது போராட்டம், சிறுவயது முதலே, போசாக்கு, கல்வி, போக்குவரத்து, பாதுகாப்பு என்று ஆரம்பித்து விடுகின்றது. அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றது.
தாம் செய்யும் தோட்டத் தொழிலுக்கு அப்பால் வீடுகளில் உணவு தயாரித்தல், உணவுபரிமாறல், பாத்திரங்களைத் துப்புரவுசெய்தல், அன்றாடத் தேவைகளுக்காக நீர், விறகு போன்றவற்றை சேகரித்தல், பிள்ளைகளைப் பராமரித்தல் என அன்றாடம் பல சுமைகளை தோளில் சுமக்கின்றனர் மலையக பெருந்தோட்ட பெண்கள்.
எனினும் குடும்பத்திலும் சரி வேலைத்தளங்களிலும் சரி அவர்களுக்கான கௌரவமான வாழ்க்கை, சமூக அந்தஸ்து, பால்நிலை சமத்துவம், பாதுகாப்பு என்பன கிடைப்பதில்லை.
தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றும் மொத்த தொழிலாளர்களில் 60 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். எனினும் அவர்களை மேற்பார்வை செய்பவர்கள், தலைமைத்துவத்தை வழங்குபவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர்.
தீர்மானங்கள் மேற்கொள்ளும் மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. 200 வருடங்களாக அவர்கள் அதே தொழில் நிலைகளிலேயே இருக்கின்றனர்.
இதனால் வேலைத்தளங்களில் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். உடல் உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் போன்ற அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். சில இடங்களில் பெண் என்ற காரணத்தினால் புறம் தள்ளப்படுகின்றனர்.
தமது பிரத்தியேக பிரச்சினைகளை வெளிப்படையாக பேசமுடியாது அசௌகரியத்துக்குள்ளாகின்றனர். எனவே இப்பிரச்சினைகள் தீர வேண்டுமென்றால் அடிமட்டத்திலிருந்து பெண் தலைமைத்துவம் பெருந்தோட்டத்துறையில் உருவாக்கப்பட வேண்டும்.
ஒருசில தோட்டங்களில் பெண் தொழிலாளர்களுக்கு மேற்பார்வைக் குழுத் தலைவர் (கங்காணி) என்ற பதவி நிர்வாகங்களால் வழங்கப்பட்டது. எனினும் அதுவும் விரல் விட்டு எண்ணுமளவிலேயே இருந்தது. அதற்கு அதிகப்படியாக பெண் தோட்ட கள உத்தியோகத்தர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
எனவே இவற்றை கருத்திற் கொண்டு தலவாக்கலை பெருந்தோட்ட நிர்வாகம் தேயிலை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் பெண் தோட்ட கள மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சியளித்து, இலங்கையில் முதல் முறையாக தேயிலை தோட்டங்களில் பெண் தோட்ட கள மேற்பார்வையாளர்களை அறிமுகப்படுத்தியது.
இதுதொடர்பில் தலவாக்கலை பெருந்தோட்ட மனித வள முகாமைத்துவ பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,
156 வருடகால வரலாற்றை கொண்ட பெருந்தோட்டத்துறையில் 60 சதவீதத்துக்கு மேல் பெண் தொழிலாளர்கள் காணப்படுகின்ற போதிலும் அவர்களை மேற்பார்வை செய்பவர்கள், அவர்களுக்கு தலைமைத்துவத்தை கொடுப்பவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர். தலைமைத்துவப் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. எனவே தலவாக்கலை பெருந்தோட்டம், பெண் கள உத்தியோகத்தர்களை நியமிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்தது. எனினும் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை நிறுவனம் என்ற ரீதியில் நாங்கள் முகம்கொடுத்தோம். பெண்கள் தேயிலை தோட்ட கள உத்தியோகத்தர்களாக வருவார்களா? இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது. எனவே தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் பயிற்சி அபிவிருத்தி ஆய்வுப் பிரிவின் ஊடாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதில் இத்திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்துகொண்டோம். அதற்கமைய தேயிலை தோட்ட கள உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. பெண்களை கள உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கான 4 மாதகால பயிற்சிநெறியொன்றை வழங்குவததற்காக அடிப்படைக் கல்வித் தகைமைகளை உள்ளடக்கிய பிரசுரங்கள் (Brochures) தயாரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. இவை பத்திரிகை மற்றும் சமூகவலைத் தளங்களின் ஊடாக பகிரப்பட்டன.
இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் வசிக்கக்கூடிய விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏறத்தாழ 450க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.
எனினும் நாங்கள் தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கத் தீர்மானித்தோம். அதற்கமைய தோட்டப் பின்னணி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை சித்தி, மொழி அறிவு, தலைமைத்துவ பண்பு போன்ற விடயங்கள் தகைமைகளாகப் பார்க்கப்பட்டன. அதற்கமைய இறுதியாக 24 பேரை தலவாக்கலை, தெனியாய ஆகிய பகுதிகளிலிருந்து தெரிவுசெய்து அவர்களுக்கு விவசாய தொழில்நுட்ப அறிவு, மனிதவள முகாமைத்துவம், கணக்கியல் அறிவு, தேயிலை ஏற்றுமதி, தலைமைத்துவ அறிவு, களப் பயிற்சி போன்ற பயிற்சிகளை வழங்கினோம். களப் பயிற்சி தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் வழங்கப்பட்டதுடன் ஏனைய பயிற்சிகள் தலவாக்கலை, தெனியாய தேயிலை ஆராய்ச்சி நிலையங்களில் நடைபெற்றன.
பயிற்சிக் காலத்தில் எம்மோடு இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம், தேசிய தொழிலாளர் கற்கை நிலையம், தொழில் திணைக்களம், தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பன இணைந்திருந்தன. தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) ஊடாக இவர்களுக்கு NVQ 4 சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சிக் காலத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. இறுதியாக தேயிலை ஆராய்ச்சி சபை ஊடாக 24 பேர் தெரிவுசெய்யப்பட்டு பட்டமளிப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து அதில் பதவி நியமனங்கள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ. 30000 வழங்கப்படுகின்றது. இது தவிர பெருந்தோட்ட கம்பனிகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்குரிய சலுகைகள் அனைத்தையும் இவர்களும் அனுபவிக்கலாம். அதாவது வீட்டுவசதி போன்ற சலுகைகளை குறிப்பிடமுடியும். இவர்களுக்கான தொழில் பயிற்சிகளுக்கென்று 6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை கதைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆண் தேயிலை கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து எந்தவித பாகுபாடுமின்றி இப்பெண்கள் பணிபுரிகின்றனர். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
பெண் தொழிலாளர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பயமின்றி கதைக்கின்றனர். இது தலவாக்கலை பெருந்தோட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அவர் தெரிவித்தார்.
அதேபோல் ஹற்றன் பிளான்டேஷன்ஸ் தோட்ட நிர்வாகமும் பெருந்தோட்ட பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் தோட்ட உத்தியோகத்தர் தொழில் துறையில் விசேடமாக மேற்பார்வையாளர்கள் தரத்தில் இதுவரை முக்கியத்துவம் வழங்கப்படாதிருந்த பெண்களுக்கு முக்கிய இடத்தை வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி பல பெருந்தோட்ட கம்பனிகளும் பெண் தோட்ட கள உத்தியோகத்தர்களை நியமிப்பதில் அக்கறை காட்டிவருகின்றது.
வசந்தா அருள்ரட்ணம்