நெடுநாட்களாக
என்னைக் காணவில்லை
எங்கு தேடியும்
என்னை என்னால்
கண்டு பிடிக்க முடியவில்லை
நான் இல்லாத பொழுதுகளில்
என்னைக் குறைகூறுபவர்கள்
என்னைத் திட்டுபவர்கள்
அவர்களிற்கு பதில் சொல்ல
எல்லா இடமும் தேடுகின்றேன்
என்னைக் காணவில்லை
என் வருகையின் போது
புன்னகைத்தும் மகிழ்ந்தும்
மனதினுள் வெறுத்தும்
எனக்கான அவதூறுகளின்
சந்தர்ப்பங்களினை
எதிர்பார்ப்போருக்காகவும்
பதில் சொல்வதற்காக
என்னைத் தேடுகின்றேன்
என்னைக் காணவில்லை
அநீதிகளை கண்டு
நீதி கேட்கவில்லை
பொய்களை மெய்களாக
நம்பத்தொடங்கிவிட்டேன்
சந்தர்ப்பங்களுக்கேற்ப
சந்தங்களில் கைதட்டுகிறேன்
அவர்களைப் போலவே
ஆதலால்
என்னைக் காணவில்லை என
என்னைக் கண்டவர்கள்
கண்கலங்கி செல்கின்றனர்