Home » இலங்கை சினிமாவில் பந்துல குணவர்தன

இலங்கை சினிமாவில் பந்துல குணவர்தன

ஒரு தனித்துவமான அடையாளம்

by Damith Pushpika
April 7, 2024 6:00 am 0 comment

உலகில் உள்ள எந்த ஒரு சினிமா தயாரிப்பாளராக இருந்தாலும் அவருக்கு தன் சொந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்ற கனவை நனவாக்கவும், அதன் ஊடாக தன் படைப்பை ரசிகர்களுக்கு வழங்குவதற்கும் பொருளாதாரம் தேவைப்படும். இயக்குனரே தயாரிப்பாளராகவும் செயற்படுவது உலகில் அரிதானதாகும். எனவே, உலக சினிமாவில் தயாரிப்பாளர்களின் செயற்பாடுகளுக்கு தனிமரியாதை உள்ளது. தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்திற்காக பணத்தை முதலீடு செய்பவர் மட்டுமல்ல, இந்த சிறந்த சாதனையின் காரணமாக உலக சினிமாவில் ஒரு சிக்கலான, தீர்க்கமான, பயனுள்ள மற்றும் எதிர்காலம் சார்ந்த பாத்திரத்தை வகிப்பவராகும்.

அண்மையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற 35ஆவது சரசவிய விருது விழாவின் போது 2020ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக “The Newspaper” திரைப்படம் விருதினைப் பெற்றுக் கொண்டது. கலாநிதி பந்துல குணவர்தன, எச்.டி.பிரேமசிரி மற்றும் ரவீந்திர குருகே ஆகியோர் இப்படத்தின் தயாரிப்பாளர்களாகும். ஒரு திரைப்படத்தின் இயக்குநரின் பாத்திரம் சிறந்த இயக்குனர் விருதின் மூலம் மதிப்பிடப்படுவதால், சிறந்த திரைப்பட விருதின் உரிமையாளர் அதன் தயாரிப்பாளராகும். இம்முறை 2020ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை “The Newspaper” திரைப்படத்திற்காகப் பெற்றுக் கொண்ட ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கு அது முக்கியத்துவமிக்கதாக அமைவது சரசவிய விருது விழா வரலாற்றில் சிறந்த தயாரிப்புக்காக அவர் மூன்று தடவைகள் (சுத்திலாகே கதாவ – 1986, சிரிமெதுர – 1990, “The Newspaper” – 2024) விருதினைப் பெற்றுக் கொண்டதனாலாகும். சிறந்த தயாரிப்புக்காக மூன்று தடவைகள் விருதினைப் பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவரை சரசவிய விருது விழா வரலாற்றில் இதற்கு முன்னர் நாம் காணவில்லை. இவ்வாறு மூன்று வருடங்கள் சரசவிய விருதினைப் பெற்றுக் கொண்ட ஒரே தயாரிப்பாளர் கலாநிதி பந்துல குணவர்தனவாகும்.

The Newspaper திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது

“சுத்திலாகே கதாவ” மற்றும் “சிறிமெதுர” ஆகிய திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு வருமானத்தை ஈட்டி, பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்ததைக் குறிப்பிட வேண்டும். கலைப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவது பெரும்பாலும் நடைபெறுவதில்லை.

மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான தேனகம சிறிவர்தன சூரியவினால் உண்மைக் கதையைத் தழுவியதாக திவயின பத்திரிகைக்கு எழுதப்பட்ட “அயோமா” என்ற நாவல் கலாநிதி பந்துலவின் கவனத்தை ஈர்த்ததோடு, அதன் இயக்கத்தை பராக்கிரம நிரியெல்லவிடம் ஒப்படைத்து அவர் அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தார். இங்கு, ஜாக்சன் ஆண்டனியின் நடிப்புத் திறன் 1996ஆம் ஆண்டு சரசவிய விருது விழாவின் போது பாராட்டப்பட்டது.

“அயோமா” (1995) திரைப்படம் வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினை தீவிரமடைந்து நாடு முழுவதும் குண்டுகள் வெடித்து மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் திரையிடப்பட்டது. மறுபுறம் அந்தக் காலத்தில் உள்ளூர் திரையுலகம் பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தது. சினிமாத் திரைப்படத் தயாரிப்புத் துறையில் சிறிதுகாலம் ஒதுங்கியிருந்த கலாநிதி பந்துல குணவர்தன, அரசியல் துறையில் தன்னை அதிகம் அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.

சுமார் இரண்டு தசாப்த கால மௌனத்தின் பின்னர், கலாநிதி பந்துல குணவர்தன, ரிச்சர்ட் டி சொய்சாவின் கொலையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க, அதனை மூத்த ஒளிப்பதிவாளர் நிலேந்திர தேசப்பிரியவிடம் ஒப்படைத்தார்.

இதன் பிரதான பாத்திரமான மனோராணி சரவணமுத்துவின் பாத்திரத்தில் நடிப்பதற்கு தெரிவாகி இருந்தது முன்னணி அழகுக்கலை நிபுணரான ஸ்வர்ணா மல்லவராச்சியாகும். இங்கு ஆரம்பவிழா நடத்தப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் முற்பணமும் வழங்கப்பட்டது. கலாநிதி பந்துல குணவர்தன என்னிடம் ஒருமுறை கூறியது போல், இந்தப் படத்தின் தயாரிப்பை நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் தடை செய்திருந்தனர்.

கலாநிதி பந்துல குணவர்தனவின் பழைய மாணவராக இருந்த சரத் கொத்தலாவல “தன்ஹா ரதி ரகா” என்ற திரைப்படத்திற்கு வழங்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், குமார திரிமதுரவுடன் இணைந்து எழுதிய “The Newspaper” திரைப்படத்தின் திரைக்கதையை கொண்டு வந்தார். இந்த திரைக்கதையை வாசித்த பந்துல குணவர்தன அக்கதையை மிகவும் விரும்பினார். அதற்கான காரணத்தையும் அவரது வரவிருக்கும் தயாரிப்புகளையும் அவர் என்னிடம் இவ்வாறு கூறினார்.

“அப்போது சர்வதேச ஊடகங்கள் இலங்கையின் நற்பெயரை சர்வதேச ரீதியில் மிக மோசமாக களங்கப்படுத்தியிருந்தன. நாம் ஒரு கொடூரமான கொலைகார இனம் என்ற கருத்தை உலகம் முழுவதிலும் ஊடகங்கள் உருவாக்கியிருந்தன. இந்த நாட்டில் ஊடகச் செயற்பாட்டின் நடைமுறை அனுபவங்களையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்தான் மீடியாவின் யதார்த்தத்தைப் பற்றிக்கூறும் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் திரைப்படத்தை சரத் மற்றும் குமார இருவரும் இயக்கினால் உலக சாதனை படைக்கும் என்று நினைத்தேன்.

திரைக் கதையை எழுதிய இருவரும் இயக்கி நடித்திருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

அதற்கு முன்னர் மேடை நாடகம் மற்றும் டெலி நாடகக் கலைஞர்களாக பிரபலமடைந்திருந்த குமார திரிமதுர மற்றும் சரத் கொத்தலாவல ஆகியோர் இந்தப் படத்தினை இயக்கியது மட்டுமில்லாமல், சர்வதேச விருதுகளையும் வென்றனர். எனவே இது எனது மிகச் சரியான முடிவு என்று உணர்கிறேன். அதன்பிறகு, புதிய இயக்குனர்கள் தங்கள் முதல் படங்களை உருவாக்குவதற்கு அர்த்தம் தரும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிரகாரம், நான் மற்றொரு விருது பெற்ற தயாரிப்பாளரான எச். டி. பிரேமசிறி மற்றும் முன்னணி எடிடிங் கலைஞரான ரவீந்திர குருகே ஆகியோரை “தமரசித்தேரே” தயாரிப்பு நிறுவனத்தில் இணைத்துக் கொண்டேன்.

அதன் அடுத்த கட்டமாக, அதுவரை மேடை நாடகங்களையும், தொலைக்காட்சி நாடகங்களையும் உருவாக்கிய பேராசிரியர் ஆரியரத்ன அதுகலையவின் வேண்டுகோளின் பேரில், தனது திரையுலகப் பிரவேசத்தைக் குறிக்கும் வகையில் “சஹோ” (2023) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இது பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். சினிமா அம்சங்கள் இருந்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக அது போதுமான விமர்சன கவனத்தையும் பரந்த பேச்சுக்களையும் பெறவில்லை. பல சர்வதேச விருதுகளும் அதற்குக் கிடைத்து. கடந்தகாலத்தில் நிலவிய கொவிட் தொற்றுநோய் மற்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளும் இதற்கு காரணமாக இருந்தன. கொவிட் தொற்றுநோய்க் காலத்தில் திரைப்படத்தை திரையிடுவதற்கு எமது தயாரிப்பாளர்கள் பயந்தனர். நான் அந்தச் சவாலைப் பொறுப்பேற்று “The Newspaper” திரைப்படத்தைத் திரையிட்டதன் பின்னர் ஏனைய தயாரிப்பாளர்களும் அவர்களது திரைப்படங்களைத் திரையிட ஆரம்பித்தார்கள். நான் பராக்கிரம நிரியெல்லவை சினிமா இயக்குனராக அறிமுகப்படுத்தி இரண்டு திரைப்படங்களைத் தயாரித்த போதிலும் அவர் அதன்பின்னர் சினிமா தயாரிப்பில் பங்களிக்காமையால் அவரைப் போன்ற படைப்பாளர்களின் படைப்புத்திறன் வீணாகிப்போனது. எனவே நான் மீண்டும் அவரைக் கொண்டு திரைப்படம் ஒன்றைத் தயாரித்தேன். அது “சிஹின குமாரி” என்ற திரைப்படமாகும். அது இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே கொண்ட வித்தியாசமான ஒரு தயாரிப்பாகும். இதுதவிர எனது மற்றுமொரு திரைப்படத் தயாரிப்பு, முழுவதுமாக முடிவடைந்துள்ள திரைப்படம் “ஆதர அந்தய”. இதனை அசோகா அதாவுதஹெட்டி இயக்கியுள்ளார்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்று அந்நிய செலாவணி நெருக்கடியாகும். நாட்டில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறையாக திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்கால எதிர்பார்ப்பாகும். 13ஆவது பெங்களூர் திரைப்பட விழாவில், ஆசியாவின் இரண்டாவது சிறந்த திரைப்படமாக “The Newspaper” திரைப் படம் விருது பெற்றபோது 3000 அமெரிக்க டொலர் பரிசாகக் கிடைத்தது. கடந்த சரசவிய விருது வழங்கும் விழாவில் மூன்றாவது முறையாக சிறந்த தயாரிப்புக்கான விருதினை கலாநிதி பந்துல குணவர்தன “The Newspaper” திரைப்படத்திற்காகப் பெற்றுக்கொண்டார். அதேபோன்று 2020ஆம் ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவு திரைப்படத்திற்குரிய விருதும் அவருக்குக் கிடைத்தது முக்கியஅம்சமாகும்.

சுத்திலாகே கதாவ

கலை ஒளிப்பதிவு அம்சங்களைத் தவிர, இந்தப் படத்தில் வரும் தற்போதைய பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் காணப்படும் பிரபலமான அம்சங்கள் அடங்கியிருப்பதே இவ்வாறான விருதுக்கு வழிவகுத்தது என்பது உறுதியானதாகும். இத்திரைப்படம் 8 சரசவிய விருதுகளை வென்றது.

(சிறந்ததயாரிப்பு- பந்துல குணவர்தன, எச். டீ. பிரேமசிரி, ரவீந்திர குருகே, சிறந்த ஒளிப்பதிவு –குமார திரிமாதுர, சரத் கொத்தலாவல, சிறந்த நடிகர் –குமார திரிமதுர, சிறந்த பாடகி –நந்தா மாலினி –தோலேதியத் கீதய- சிறந்த பாடலாசிரியர் –பேராசிரியர் சுனில் ஆரியரத்ன –தோலேதியத் கீதய, சிறந்த ஒப்பனை –பிரேமலால் லியனகே, சிறந்த ஒளிப்பதிவு –சந்தன ஜயசிங்க, திறமை விருது –சிந்தக வாஸ்)

ஊடக யதார்த்தத்தை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் இலங்கைத் திரையுலக வரலாற்றில் மிகவும் அரிதானவை. மீண்டும் பின்னோக்கிப் பார்க்கையில், ஊடக யதார்த்தத்தை வெளிப்படுத்தும் இயக்குனரின் கவனம் செலுத்தப்பட்ட இரண்டு இலங்கைத் திரைப்படங்கள் எனக்கு நினைவிற்கு வருகின்றன. டி. பி. வர்ணசிறியின் “சத்யகிரஹனா” (1987) என்ற திரைப்படம் அவற்றில் ஒன்றாகும். கடந்த காலங்களில் ஊடக தணிக்கை இருந்தது. இரண்டாவது “The Newspaper” ஆகும். எனவே, அரிய பொருள்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் பாராட்டுகளைப் பெற்ற படைப்பாக இது இலங்கைத் திரையுலகில் ஒரு வலுவான அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

கலாநிதி நுவன் நயனஜித்குமார தமிழில்- எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division