Home » விசித்திர அலங்கார இரதத்தில் ஏறி வீதி வலம் வரும் மானிப்பாய் மருதடி விநாயகர்

விசித்திர அலங்கார இரதத்தில் ஏறி வீதி வலம் வரும் மானிப்பாய் மருதடி விநாயகர்

by Damith Pushpika
March 31, 2024 6:08 am 0 comment

யாழ்ப்பாணத்தை தமிழரசர் ஆண்ட காலத்தில் சைவசமயத்தின் மகத்துவங்களை நிலைநாட்டினர். இக்காலத்தில் ஒரு தபசிரேஷ்டரான தமிழரசர் பிற்காலத்திலும் பறங்கியர் யாழ்ப்பாணத்தைத் தம்வயப்படுத்திய சொற்ப காலங்களுக்கு முன்னருமாய் மானிப்பாய் மருதடி விநாயகராலயத்தில் நிஷ்டையில் இருந்து சமாதியாய் விட்டார். மேற்படி மகான் சமாதி அடைந்த காலத்தில் பறங்கியர் மருதடி விநாயகர் ஆலயத்தை இடித்துச் சவக்காலையாக்கி விட்டனர். பறங்கியர் சைவசமய மணம் சற்றேனுமில்லாது பிராமணரையும் தம்முடைய மதத்தை தழுவும்படி செய்து வந்தனர்.

இந் நாட்களில் மக்கள் மகான் சமாதியடைந்த இடமும் இப்பொழுது மூலஸ்தானத்திற்கு கிழக்கில் இருப்பதுமாகிய மருத மரத்தின் கீழ் இராக்காலங்களிலும் பறங்கியர் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்பூரமெரித்து விநாயகரை வழிபட்டு வந்தார்கள். இவ்வாறாக பல இக்கட்டான நிலைகளைக் கடந்து வரும் காலத்தில் பறங்கியர் அரசு ஒல்லாந்தர் கைக்கு மாறியது.

ஒல்லாந்தர் அரசு காலத்தில் பொங்கல் வணக்கங்கள் மருதடியில் விசேடமாகவும் வெளிப்பொருளாயும் நடந்து வந்தன. இக்காலத்தில் தொண்டை மண்டலத்தில் இருந்து வந்த தியாகராசக் குருக்கள் நவாலி தூக்கிணி வைரவ கோவிலடியில் வந்து தங்கினார். தூக்கினி வைரவ கோவிலில் இருந்து ஒரு வருஷமாக சிவபூசை வணக்கம் செய்து வரும் நாட்களில் அங்கு வேள்வி நடைபெற ஆயத்தமாகியது. பெரியவர் இக்கோவிலில் பெருந்தொகையான ஆடுகள் வெட்டப்படுமென்று அறிந்தார். உடனே அவ்விடத்தை விட்டு மருதஞ்சோலையை அடைந்தார். பெரியவர் சுவாமிநாத முதலியாரின் உதவியை நாடி நிலம் பெற்று சிறு வீடு கட்டியிருந்தார். அந்த நாட்களில் இவ்விடத்தில் அநேக மக்கள் பொங்கல் வணக்கச் செய்து வந்தனர். இதைக கண்டு அவர் ஓர் விநாயகர் சிலை வைத்துப் பூசைக் கிராமங்கள் செய்து வந்தார். பின்னர் சுவாமிநாத முதலியாரின் உதவியுடன் மருத மரத்தின் மேற்குத் திசையை நோக்கிக் கர்ப்பக் கிரகமும் அர்த்த மண்டபமும் கட்டி முடித்து எஞ்சிய பாகங்களை மரத்தடிகளால் உருவாக்கிப் பங்குனி மாதத்தில் மகோற்சவம் செய்து சித்திரை முதலாம் திகதியில் புதுவருஷம் ஆரம்பம் ஆகும் வேளையில் இரதோற்சவமும் அடுத்த நாள் தீர்த்தோற்சவமும் நடத்தி வந்தார். ஆலயம் உருவான காலங்களில் ஒல்லாந்தவரது ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் காலம் உதயமானது.

ஆங்கிலேயர் காலத்தில் மருதடி ஆலயம் அதி உன்னத நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. கோயில் திருப்பணி வேலைகள் பல பெரியார்களால் செய்யப்பட்டன. இத் திருப்பணி வேலைகளை பெரியவர்கள் ஒவ்வோர் காரணம் பற்றிச் செய்வித்தார்கள். உதாரணமாக இரகுநாத முதலியார் சின்னத்தம்பி ஒருமுறை கொடிய விஷம் தீண்டப்பெற்று, அவ்விஷம் இறங்கினால் அவர் விநாயகருக்கு இரதம் செய்து வைப்பதாக பிரார்த்தனை செய்ததாகவும் அதனால் அக்கொடிய விஷம் நீங்கி அவர் சுகம் பெற்றதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. சைவ சமயத்தை நிலைநிற்கச் செய்த ஆலயங்களில் ஒன்று இம் மருதடி ஆலயமே.

முன்பிருந்த தர்மகர்த்தா சபையினர் பொதுமக்கள் உதவிகளைப் பெற்று பல கோடி ரூபா செலவு செய்து புதிதாக மருதடி ஆலயத்தை மிகவும் அழகான முறையில் விஸ்தரித்துக் கட்டி கும்பாபிஷேகம் செய்தமை குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதி உன்னத நிலைக்கு கோவில் கொண்டுவரப்பட்ட நிலையில் 25 உற்சவங்கள் நடைபெற்று மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு வருஷப் பிறப்பன்று இரதோற்சவமும் அடுத்த நாள் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. புதுவருடம் ஆரம்பமாகும் நேரத்தில் விநாயகப் பெருமான் அதி உன்ன விசித்திர அலங்காரம் அமைக்கப்பெற்ற இரதத்தில் ஏறி வீதி வலம் வருகின்ற அற்புதக் காட்சியை எல்லோரும் கண்டு இன்புறுகின்றனர். தற்போதைய தர்மகர்த்தா சபையினர் கோவில் நிர்வாகத்தை நன்றாக நடத்துகின்றனர்.

சுவாமிநாதன் தர்மசீலன் J.P.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division